Tuesday, November 13, 2012

மனைவி



”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்கவேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும்போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ”நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
”தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி  அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200
நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

Tuesday, November 13, 2012

மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள்




அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்…
இன்று உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குடி, கூத்து, இசை. சீரழிய சினிமா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆபாசம், சூது, விபச்சாரம், கற்பழிப்பு, ஒழுக்கக் கேடுகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்று, வஞ்சனை, மோசடி, லஞ்சம், கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், வன்செயல்கள், தீவிரவாதம் இப்படி பஞ்சமா பாவங்களில் எது ஒன்றும் விடுபடாமல் கொடிகட்டிப் பறக்கின்றன. மனிதனின் அமைதி வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் அனைத்துச் செயல்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன. விளைவு சுனாமி, புயல், அழிவை உண்டாக்கும் பெருமழை, வெள்ளம் என இயற்கைச் சீற்றத்தால் மக்கள் அழிகின்றனர், நாடு அல்லோல கல்லோலப் படுகிறது.
நாளுக்கு நாள் உலகம் அமைதி இழந்து தவிக்கிறது. இவை அனைத்திற்கும் முழுமுதல் காரணகர்த்தாக்களாக கடவுளை நெருங்கச் செய்கிறோம்; சுவர்க்கம் அடைய வழி சொல்கிறோம் என்று பொய்யாகக் கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வஞ்சகர்களான புரோகிதர்கள் நம் கண் முன்னால் வருகிறார்கள்.
இவர்களே கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும், அநாச்சாரங்களையும் நெய் வார்த்து வளர்த்து வருகிறார்கள். மதப்புரோகிதர்கள் என்று சொல்லும்போது எந்த மதப்புரோகிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள்தான் இறைவனை நெருங்கச் செய்யும், சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் மேன்மக்கள், இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுகிறவர்கள் அனைவரும் வடிகட்டிய மூடர்களே! அயோக்கியர்களே! மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அற்பர்களே!
இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த இடைத்தரகனும்-புரோகிதனும் புக முடியாது என்பதே மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து மனிதனை மட்டுமல்ல, அகிலங்களையும், அவற்றிலுள்ளவற்றையும் படைத்து நிர்வகித்து வரும் ஏகன் இறைவனின் தெளிவான கட்டளை. முஸ்லிம்கள் முதன் முதலில் எடுக்கும் உறுதிமொழி அதுவே!
 அந்த இறைக் கட்டளையை மீறித்தான் இந்த மதப்புரோகிதர்கள்  திருட்டுத்தனமாக ஒவ்வொரு சமுதாயத்தினுள்ளும் புகுந்து கொண்டு ஏமாற்றி வயிறு வளர்த்து வருகிறார்கள். மக்களை வஞ்சிக்கிறார்கள். இந்து சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள மடாதிபதிகள், சங்கராச்சாரியார்கள், சாதுக்கள், ஆரியர்கள் போன்ற மதகுருமார்கள், கல்லையும், மண்ணையும், கண்ட கண்ட  படைப்புகளையும் பல கோடி கடவுள்களாகக் கற்பித்து இந்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள். நரகில் தள்ளுகிறார்கள்.
யூத சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள ரிப்பிகள் எனும் யூத மதகுருமார்கள் உஜைர் என்ற இறைத் தூதரை இறைவனின் குமாரன் என்று கற்பித்து இரு கடவுள் கொள்கையை கற்பித்து யூதர்களை வஞ்சித்து வருகிறார்கள். கிறித்தவ சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாகப் புகுந்துள்ள பாதிரிகள் எனும் கிறித்தவ மதகுருமார்கள் ஈஸா இறைத்தூதரையும், பரிசுத்த ஆவியையும் கடவுள்களாக்கி முக்கடவுள் கொள்கையை கற்பித்து கிறிஸ்தவர்களை வஞ்சித்து வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தினுள் திருட்டுத்தனமாக நுழைந்துள்ள ஹஜ்ரத்துகள், ஷேக்குகள் எனும் முஸ்லிம் மதகுருமார்கள் இறைவனுக்கும் அடியானுக்குமிடையில் இறந்தவர்களையும், உயிரோடிருப்பவர்களையும் இடைத்தரகர்களாகப் புகுத்தி முஸ்லிம்களை வஞ்சித்து வருகிறார்கள், நரகில் தள்ளுகிறார்கள்.
இப்படி எந்த மதமாக இருந்தாலும் நாங்கள்தான் இறைவனை நெருங்கச் செய்வோம்; சுவர்க்கத்திற்கு வழிகாட்டுவோம் என்று கூறிக்கொண்டு மத குருமார்களாக எவர்கள் செயல்படுகிறார்களோ அவர்கள் மனித சமுதாயத்திலேயே கடைந்தெடுத்த பொய்யர்கள், திருடர்கள், அயோக்கியர்கள் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உணர்ந்து அவர்களைப் புறக்கணிக்கும் நன்நாளே மனித சமுதாயம் மேம்படும் பொன்னாளாகும். உலகைப் பிடித்துள்ள பீடைகள் அகலும்!
இடைத்தரகர்களான புரோகிதர்கள் அனைவரும் அவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கடவுள் பெயரைச் சொல்லியே மூட நம்பிக்கைகளையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத குருட்டுச் செயல்களையும் நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றி வருவதால், ஓரளவு சுய சிந்தனையாளர்கள் இவர்களின் இந்த அட்டூழியங்களை பொறுக்க முடியாமல் ஆத்திரமுற்று, கடவுள் பெயரைச் சொல்லித்தானே இந்த மத குருமார்கள் ஜாதி வேற்றுமைகளையும், பகுத்தறிவு ஏற்காத மூட நம்பிக்கைகளையும் கற்பனை செய்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்கள்,
அந்தக் கடவுளே இல்லை என்று நிலைநாட்டிவிட்டால் இந்த மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள், ஜாதி வேற்றுமைகள், கடவுளின் பெயரால் நடைபெறும் ஏமாற்று, பித்தலாட்டங்கள் அனைத்தும் ஒழிந்து விடும் என்ற தவறான நம்பிக்கையில் கடவுள் மறுப்புக் கொள்கையை, நாத்திகத்தைப் போதிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஈ.வே.ரா.பெரியார் தமிழகத்தில் முன்னிலை வகித்தார். கடவுள் மறுப்புக் கொள்கையால் அவர்கள் எதிர்பார்த்த சீர்திருத்தம் ஏற்படவில்லை. அதற்கு மாறாக பாதி மனிதன் பாதி மிருகம் என்றிருந்த நிலைமாறி, மனிதர்கள் முழு மிருகமாக மாறும் நிலையே ஏற்பட்டு விட்டது. அதனால் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அனைத்து மிருகச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. ஆம்! மிருகத்திலும் கேடுகெட்ட நிலை.
இவ்வுலகோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. மனிதர்கள் செய்யும் அட்டூழியங்கள், அராஜகங்களுக்கு கேள்வி கணக்கோ, தண்டனையோ இல்லை என்ற அசட்டுத் துணிச்சலில், மனித நேயத்திற்கு முரணான அனைத்துத் தீய செயல்பாடுகளையும் துணிந்து செயல்படுத்தி, மனிதர்கள் வாழும் நாட்டை மிருகங்கள் வாழும் காடாக்கி வருகிறார்கள்.
ஆம்! மனிதன் மனிதனாக வாழும் ஒழுக்க வாழ்வை, மூட நம்பிக்கைளால் எந்த அளவு மத குருமார்கள் என்ற புரோகிதர்கள் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறார்களோ, அதற்கு எவ்விதத்திலும் குறைவு இல்லாமல், ஓரிறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்களும், கடவுள் இல்லை என்ற மூட நம்பிக்கையால் மனிதன் மனிதனாக வாழும் ஒழுக்க வாழ்வை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். மனிதனை மிருகமாக்கி வருகிறார்கள்.
மனிதன் விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டானாம். மனிதனையே குளோனிங் முறையில் படைத்து விடுவானாம்.மனிதனும் படைப்பாளனாம். அதனால் ஓரிறைவன் இல்லையாம். இது நாத்திகர்களின் புதிய முழக்கம். இது அவர்களின் பகுத்தறிவற்ற ஐயறிவு நிலையையே வெளிப்படுத்துகிறது. மனித செல்லிலிருந்து குளோனிங் மனிதனைப் படைக்கப் போகிறார்களா? அல்லது ஒன்றுமே இல்லாத நிலையில் மனிதனைப் படைக்கப் போகிறார்களா? ஒன்றுமே இல்லாத நிலையில் மனிதனின் தலையில் இருக்கும் ஒரு மயிரைக் கூட மனிதனால் படைக்க முடியாது.
அது மட்டுமல்ல; மனிதனை மட்டும் குளோனிங் முறையில் படைத்தால் போதுமா? மனிதன் இறைவன் ஆகி விடுவானா? அல்லது இறைவன்தான் இல்லாமல் போய் விடுவானா? அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கும் ஆற்றலை மனிதன் பெற்று விடுவானா? கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியனை மேற்கே உதித்து கிழக்கில் மறையச் செய்யும் ஆற்றலை மனிதன் பெற்று விடுவானா?
அண்ட சராசரங்களில் எண்ணற்ற கோள்கள் இருக்கின்றன. சில கோள்களிலிருந்து வெளியாகும் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் பிரயாணம் செய்யும் ஒளி இன்னும் பூமியை வந்து அடையவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனிதன் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைக்க வேண்டாம். தான் வாழும் மிகமிகச் சிறிய பூமியைப் போன்று ஒரு பூமியைத்தானும் படைக்க முடியுமா? முடியாதே! இந்த நிலையில் ஏன் இந்த ஆணவம்? ஆம்! நாத்திகர்கள் ஐம்புலன்களைக் கொண்டு கிடைக்கும் ஐயறிவைக்கொண்டு மட்டும் சிந்திக்கிறார்களே அல்லாமல், மனிதனுக்குத் தனியாகக் கொடுக்கப்பட்ட ஐம்புலன்களுக்கு எட்டாத மெய்யறிவு (METAPHYSICS) என்ற ஆறாவது அறிவான பகுத்தறிவை அறியவில்லை. குறைகுடம் தழும்பும் என்பது போல் பகுத்தறிவை பயன்படுத்தத் தெரியாதவர்கள் தான் தங்களைப் பகுத்தறிவாளர் என பீற்றுகிறார்கள்.
உலகின் பாதியைக் கெடுக்கிறவர்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இடைத்தரகர்களான புரோகிதர்கள் என்றால், மறுபாதியைக் கெடுக்கிறவர்கள் அனைத்தையும் படைத்த தன்னந்தனியான எவ்விதத் தேவையும் இல்லாத ஓரிறைவனையும் மறுக்கும் நாத்திகர்களாகும். பல கடவுள்களைக் கற்பிக்கும், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதகுருமார்களான புரோகிதர்களை ஒழிப்பதற்குப் பகரமாக ஓரிறைவனையே ஒழிக்க முற்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள்.
என்று மக்கள் மதப் புரோகிதர்களிடமும் சிக்கமாமல், நாத்திகர்களிடமும் சிக்காமல், இரு சாராரையும் நம்பாமல், அகிலங்களைப் படைத்த ஓரிறைவனை மட்டும் நம்பி, அவனது வழிகாட்டலை எடுத்து நடக்க முன் வருகிறார்களோ அன்றுதான் உலகைப் பீடித்திருக்கும் பீடைகளான அனைத்துத் தொல்லைகளும் நீங்கும். மக்களுக்கு வளமான, சுபீட்சமான அமைதியான நல்வாழ்வு கிடைக்கும்.
இறைவன் மனிதனைப் படைத்ததிலிருந்து அவனுக்குரிய வாழ்க்கை நெறிமுறைகளைத் தந்து கொண்டிருக்கிறான். இந்துக்களிடமுள்ள வேதங்கள், யூதர்களிடமுள்ள தோரா என்ற வேதம், கிறித்தவர்களிடமுள்ள பைபிள் என்று அழைக்கப்படும் வேதம், இதுபோல் அனைத்து மதங்களிலுள்ள வேதங்கள் அந்தந்தக் காலத்தில் இறைவனால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல்கள்தான். ஆனால் அவை தற்காலிகமாக இருந்ததால் இறைவன் அவற்றைப் பதிந்து பாதுகாக்க ஏவவில்லை. மேலும் அவற்றில் புரோகிதர்களின் கற்பனை கதைகள் நிறைந்து, மனிதக் கரங்கள் பட்டு அவை அனைத்தும் அவற்றின் தூய நிலையை இழந்து கலப்படமாகிவிட்டன. அவற்றில் பல அசிங்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் அவை அனைத்தையும் “அரசுகள் பழைய நோட்டுகளை புழக்கத்திலிருந்து செல்லாதவை ஆக்குவது போல், இறைவன் செல்லாதவை ஆக்கிவிட்டான். இறுதியில் நிறைவு படுத்தப்பட்டு இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே, அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளதால், அதில் புரோகிதர்கள் தங்களின் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. மூட நம்பிக்கைகள் நிறைந்த கற்பனைக் கதைகளைப் புகுத்த முடியவில்லை.
முன்னைய வேதங்களில் காணப்படும் பகுத்தறிவுக்கு முரணானவை இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனில் எதுவும் இல்லை. ஆனால் பகுத்தறிவுக்குள் அடைபடாத மறைவானவை அல்குர்ஆனில் உண்டு. பகுத்தறிவுக்குள் அடைபடாத பெற்ற தாயை ஊரை நம்பியும், பெற்ற தகப்பனை அந்தத் தாயை நம்பியும் ஏற்பதுபோல், இறைவனால் இறுதி இறைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இறை அறிவிப்புகள் மூலம் பெற்றுச் சொன்ன அந்த மறைவானவற்றை நம்பி ஏற்பவர்களே முழுமையான ஆறாவது மெய்யறிவை (METAPHYSICS) கொண்ட பகுத்தறிவாளர்கள்.
மதப்புரோகிதர்களையும், நாத்திகர்களையும், நம்பி அவர்கள் பின்னால் செல்லாமல், நேரடியாக இறுதியாக அருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்கி அதன்படி நடப்பவர்களே இவ்வுலகிலும், மறு உலகிலும் வெற்றி பெற முடியும். ஓ! மனித சமுதாயமே அந்த வெற்றிக்குரிய பாதையில் வெற்றி நடைபோட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமாக!

Tuesday, November 13, 2012

வட்டி உண்ணுதல்



Post image for வட்டி உண்ணுதல்

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)
தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர் தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.
வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)
வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.
 ஜமாஅத்துல் முஸ்லிமீன் அடியக்கமங்கலம்

Tuesday, November 13, 2012

அல்பாத்திஹா (தோற்றுவாய்)



Post image for அல்பாத்திஹா (தோற்றுவாய்)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
 1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
    இறக்கப்பட்ட வரலாறு 
    நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது.  இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல்என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப்பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.
ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும்.
உலகில் அவனது அடிமைகள் செய்யும் குற்றங்களுக்கு அளவு கிடையாது. அவ்வாறு இருந்தும் கூட அல்லாஹ் அளவற்ற அருளாளனாகவே இருந்து வருகின்றான். திருமறையில் அல்லாஹ் “என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. (7:156) அடியார்கள் குற்றங்கள் செய்தாலும் அவர்களது நன்றியை எதிர்பார்க்காமலும் மீண்டும் மீண்டும் அருள்புரிந்துகொண்டு வரக்கூடியவனே “ரஹ்மான்” அளவற்ற அருளாளன்.
“அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர யாரும் (அதுசமயம்) பேசமாட்டார்கள்” (அல்குர்ஆன் 79:38) என்ற இறைவனின் வாக்குப்படி அல்லாஹ் அனுமதித்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் பேசுவதற்கு திராணியற்ற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் அந்நாளில் அவனேதான் எஜமானன்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்’

என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்கு மாற்றமாக வணக்கத்திற்கு தகுதியானவன் வேறுயாரும் உண்டு என்று நம்புவதும்  அவர்களுக்கு வணக்கம் செய்வதும் அவனைத் தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டு என்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க்(இணைவத்தல்)என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலோ, குத்போ,வலியோ,யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும் அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இதைப் போல் நட்சத்திரங்களுக்கோ, நாட்களுக்கோ, சகுனங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டு என்று நம்புவதும் கடுமையான குற்றமாகும். ஒவ்வொருவரும் தனது சிறு தேவை முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும்  நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் “செருப்பின் வார் அறுந்துபோனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனக் கூறினார்கள் (திர்மிதீ)
வருங்காலத்தை அல்லாஹ்வைத் தவிர வேறும் யாரும் அறியமுடியாது. ஜோசியத்தின் மூலமாகவோ குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைப்பெறப் போகும் காரியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் அன்று நம்புவது இணைவைத்தல் ஆகும். இதைக் குறித்தே நபி(ஸல்)அவர்கள் “(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கீகரிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம் (முஸ்லிம்)
நாட்களாலும் நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெறும் குற்றமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும் இன்னின்ன நட்சத்திரங்களால் தான் மழை பெய்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு  செய்தவன் என்றும் கூறினார்கள்” ஹதீஸ் சுருக்கம் (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் அடியார்களில் அவனது அருள் பெற்றவர்கள், அவனின் கோபத்த்திற்கு ஆளானவர்கள், வழி தவறியவர்கள் ஆகிய மூன்று வகையினர். அல்லாஹ்வின் அருள்பெற்ற முதல் பிரிவினர் வழியிலெயே தன்னையும் நடத்தும்படி ஒவ்வொரு அடியானும் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பதை 6 வது வசனம் கூறுகிறது.
உண்மைக் கொள்கைகளுடன் தப்பான கொள்கைகளையும் விசுவாசம் கொண்டு, இறைவனுடைய கட்டளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவற்றிற்கு மாறு செய்ததன் காரணமாக இறைவனுடைய கோபத்திற் குள்ளானவர்கள்  இரண்டாவது பிரிவினர்.
அடிப்படையான உண்மையான கொள்கைகளில் விசுவாசம் கொள்ளாமல் நேர்வழியை விட்டும் விலகி நடந்தவர்கள் மூன்றாவது பிரிவினர்.
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களையுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். (அல் குர்ஆன் 4:69)
கடைசியாக சூரா ஃபாத்திஹாவில் ஆமீன் என்ற  இவ்வாக்கியம் இந்த அத்தியாயத்தில் சேர்ந்த்தல்ல எனினும் இந்த சூராவை ஓதி முடித்தவுடன் ‘ஆமின்’ என்று கூறும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது அருள் பெற்றவர்கள் சென்ற வழியில் நம்மை நடத்தி அருள் புரிவானாக ஆமீன்!
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்

Tuesday, November 13, 2012

புகை பழக்கம்


Post image for புகை பழக்கம்
ஆண்டு தோறும் (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவநாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.
ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும்.
புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
இத்தகைய தீங்களிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் மற்றவருக்கு தீங்கை நாடுவதால் அவர் சிறந்த முஸ்லிமாக ஆகமாட்டார்.
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.[நூல்;புஹாரி]
மேலும் ஒரு முஸ்லிம் எல்லாவகையிலும் நன்மையான விஷயங்களில் பிறருக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும். தீமையான விஷயத்தில் முன்னுதாரணமாக திகழக்கூடாது. புகைபிடிப்பவர்கள் தன்னுடைய வீட்டில் சர்வ சாதாரணமாக புகைப்பதால், இவரை பார்த்து இவரது பிள்ளைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் இவரது நண்பர்கள் உறவினர்கள் சிலரும் புகைப்பதற்கு இவர் காரணியாக அமைந்துவிடுவார். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். தீமைக்கு வழிகாட்டினால் உலகம் அழியும்வரை இவர் காட்டிய தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அதிலிருந்து ஒரு பங்கு இவருக்கு கிடைக்கும்.
பொருளாதார வீண் விரயங்கள்;
புகைப்பிடிக்கும் ஒருவர் தான் இந்த பாழாய்ப்போன புகைக்கு செலவிட்டதை ஒரு ஆண்டு சேமித்து வைத்து பார்ப்பாரானால், அவரே பிரமிக்கும் அளவுக்கு ஒரு தொகை விரயமானதை உணர்வார். இத்தகைய வீண் விரயங்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?
நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்; [மறுமையில்] அடியானின் பாதம் நகராது நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை;
அதில் ஒன்றுதான் , எந்தவழியில் சம்பாதித்தாய்; எந்தவழியில் செலவழித்தாய்..? [திர்மிதி]நாளை மறுமையில் அல்லாஹ் மேற்கண்ட கேள்வியை கேட்கும்போது, நாம் செலவு செய்த பட்டியலில் சிகரெட் மற்றும் புகையிலைக்காக அளித்த காசும் வருமே! அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? சிகரட் பிடிப்பது மார்க்கத்தில் ஆகுமானது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? அல்லது சிகரெட் பிடிப்பது உடம்புக்கு நல்லது எனவே சிகரெட்டுக்காக செலவழித்தேன் என்று கூறமுடியுமா? இந்த வீண் விரையத்திற்காக இறைவன் தரும் தண்டனையை தாங்க முடியுமா?
சிந்திக்க வேண்டும்.புகை பிடிப்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்;
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)சிகரெட்டுக்காக செலவழிக்கும் பணத்தை ஒரு ஆண்டு நீங்கள் சேமித்தால் எத்துனை ஆயிரங்களை விரயமாக்கியிருக்கிறோம் என்று கணக்கிடமுடியும். ஒரு பாக்கெட் சிகரெட்டுக்காக செலவிடும் காசை ஒரு ஏழைக்கு தர்மம் செய்தால் உங்கள் செல்வமும் பெருகும். மறுமையில் நன்மையும் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவன் நமக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். காசையும் கொடுத்து கெடுதியை வாங்குவதுதான் பகுத்தறிவா என்று சிந்திக்க வேண்டும்.


முகவை அப்பாஸ்

Tuesday, November 13, 2012

உங்களுக்கொரு கடிதம்



Post image for உங்களுக்கொரு கடிதம்

சகோதரர்களே! ஒரு வகையில் முஸ்லிம்கள் நற்பேறு பெற்றவர்களே! அவர்களிடம்தான் இறைவனின் வாக்கான அல்குர்ஆன் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அதே நிலையில் இருக்கிறது.
    மற்றொரு வகையில் இன்றைய உலகில் முஸ்லிம்கள் துர்பாக்கியசாலிகளே! இறைவனின் வாக்கான திருகுர்ஆனை தம்மிடம் வைத்திருக்கும் அவர்கள் அதன் ஆசிகளையும் வரம்பிட முடியாத அருட்பேறுகளையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள். இறைவன் அதனை இறக்கியருளியதின் நோக்கம் அதனை அவர்கள் ஓதியுணர்ந்து அதன்படி நடக்கவேண்டும் என்பதுதான். அது அவர்களுக்கு கண்ணியத்தையும் வலிமையையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறது. உலகத்துக்கு இறைவனுடைய பிரதிநிதியாக ஆக்குவதற்கு அது வந்திருக்கிறது. இதற்கு வரலாறு சான்று கூறுகிறது. அதன் அறிவுறைகளுக்கு தக்கவாறு செயல்பட்டபோது அவர்களை அது உலகத்திற்கு தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் உயர்த்தியது.
    ஆனால் இப்போது அது அவர்களிடத்தில் இந்த நிலையில் இல்லை. அதனை வீட்டில் வைத்து ஜின்னையும் பூதத்தையும் விரட்டுவது, அதில் உள்ள வசனங்களை எழுதிக் கழுத்தில் கட்டுவது, கரைத்து குடிப்பது, நற்கூலிக்காக பொருள் தெரியாமல் ஓதுவது போன்ற செயல்களில்தான் அது இன்று பயன்படுத்தப்படுகிறது. தமது வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளுக்கு அவர்கள் வழிகாட்டியாய் அதனைக் கொள்வதைல்லை.
    எங்கள் கொள்கை எப்படி இருக்கவேண்டும்; எங்கள் நடத்தை எவ்வாறு அமையவேண்டும்; எங்கள் நற்குண நல்லொழுக்கமுள்ள பண்புகள் எப்படி இருக்கவேண்டும்; வியாபரத் தொடர்புகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்; நட்பிலும் பகமையிலும் எந்தச் சட்டத்தை பின்பற்றவேண்டும். எமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கின்ற கடமைகள் யாவை; எது சத்தியம், எது அசத்தியம் எதை நாங்கள் பின்பற்ற வேண்டும் எதை நாங்கள் விட்டுவிட வேண்டும். யார் யாருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், நன்பர் யார், பகைவர் யார், கண்ணியமும் வெற்றியும் நற்பயனும் எதில் இருக்கின்றன? என்றெல்லாம் அவர்கள் அதனிடம் கேட்பதில்லை.
    இந்தப் பிரச்னைகளை எல்லாம் திருகுர்ஆனிடம் கேட்பதை இன்று முஸ்லிம்கள் கைவிட்டு விட்டார்கள். ஆனால் உலகாயதவாதி, நாத்திகர், இணைவைப்பவர், இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், ஆகியவர்களிடம் இந்தப்பிரச்னைகளைப் பற்றி இன்று முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே நடக்கிறார்கள்.
    எனவே இறைவனின் கட்டளைகளை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவு இன்று அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
    இறைவன் அருளிய திருமறையுடன் முஸ்லிம்கள் நடந்துகொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும் நகைப்புக்கிடமானவையாக இருக்கின்றன. இதே செயல்களை வேறொரு மனிதன் வேறொரு பணியில் செய்யக்கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவார்கள். பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள்.
    நீங்களே சொல்லுங்கள்; ஒரு மனிதன் மருத்துவரிடம் சென்று மருந்தொன்றை குறித்துக்கொண்டு வருகிறான். அதனை அவன் துணியில் மடித்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கிறான் என்றால் அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?
    எல்லோரையும் விடவும் சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிக்ரற்ற மருந்தையும் அருட்கொடையையும் குறித்துக் கொடுத்திருக்கிறான். அந்த குறிப்புகளுக்கு உங்கள் கண்கள் முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் அதைப் பார்த்து யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. மருத்துவரின் குறிப்பு கழுத்தில் மாட்டிக்கொள்வதற்கோ கரைத்துக் குடிப்பதற்கோ உள்ளதல்ல. அதன்படி மருந்தை உபயோகிப்பது அவசியம் என்பதை யாரும் யோசிப்பதில்லை.
    நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றைக் கொண்டு வந்து படிக்கிறான். அதனைப் படித்தால் மட்டும் நோய் நீங்கிப் போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய மூளை கெட்டு விட்டது அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கள் என்று சொல்ல மாட்டீர்களா?
    ஆனால் நோய்களுக்காக அனுப்பித் தந்த தெய்வநூலை நீங்கள் இந்த நிலையில்தான் வைத்திருக்கிறீர்கள். அதனை ஓதும் நீங்கள் ஓதுவதால் மட்டுமே எல்லா நோய்களும் பறந்து போகும் என்றும், அதனுடைய கட்டளைப்படி நடக்க வேண்டியதுமில்லை என்றும், அது தீங்கு என்று காட்டக்கூடியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியதுமில்லை என்று நினைக்கிறீர்கள். தன்னுடை நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்தத் தீர்ப்பை வழங்குகிறீர்களோ அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை?
    உங்களுக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் உங்களுக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவர்களிடம் ஒடோடிச் செல்கிறீர்கள். அதிலுள்ள பொருளை நீங்கள் தெரிந்து கொள்ளும்வரை உங்களுக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதரணக் கடிதங்களைப் பொறுத்த மட்டில் நீங்கள் நடந்துகொள்ளும் முறை இது.
    ஆனால் இம்மை மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து உங்களுக்கு வந்திருக்கிற கடிதத்தை அப்படியே போட்டு வைத்துக் கொள்கிறீர்கள்! அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் துடிப்பு உங்களுக்கு ஏற்படுவதில்லை. இது ஆச்சரியப்படக்கூடிய விசயமல்லவா?
அபுல் அஃலா மெªதூதி

Tuesday, November 13, 2012

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!



Post image for மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே!

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)
 மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!… (அல்குர்ஆன்11 :3)
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக (தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன் 66:8)
 அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும் அதிகமாக அல்லாஹுத் தஆலாவிடம் பிழை பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்து மீளுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
 மனிதர்களே! அல்லாஹுத் தஆலாவிடம் தவ்பாச் செய்யுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரே நாளில் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன் என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்தார்கள் என்றால்! ”நாம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்”? என்பதை எண்ணிப்பாருங்கள்.
 சிறந்தவர் யார்?
 எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
 அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)
 நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்ல அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
 தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)
 உலகத்தில் நாம் யாருக்காவது தவறிழைத்து விட்டால் அவர்களைவிட்டும் ஒளிந்து தூரமாகி விடுகின்றோம். ஆனால், பாவம் செய்த தன் அடியார்களைப் பார்த்து அவனின் பக்கம் திரும்பி பாவமன்னிப்புத் தேடும்படி அந்த வல்ல அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான். இதைவிட தயாளத் தன்மை வேறு என்னதான் இருக்க முடியும்? தனக்கு மாறு செய்தவர்களை இறக்கத்தோடு அழைக்கின்றான். ஆகவே உங்களின் பாவங்களை உடன் நிறுத்திவிட்டு அவன் பக்கம் மீண்டு தவ்பாச் செய்யுங்கள்.
 இன்னும் பாவங்களை தொடரத்தான் போகின்றீர்களா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொண்டு தவ்பாச் செய்ய போகின்றீர்களா? ஆம்! உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்பாகவே, உடனடியாக அந்த ரஹ்மானிடம் உங்களின் தவறுகளுக்காக மனம் கலங்கி! கதறி! கண்ணீர் வடியுங்கள்! வல்ல அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவன். மீதியுள்ள காலத்தையாவது அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஏவியவைகளையே செய்யுங்கள், அவ்விருவரும் தவிர்த்தவைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஈருலக வெற்றியாளர்கள்.
 அல்லாஹ்வின் திருப்திதான் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)
 மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
 யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.
 அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார் ; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.
 அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிப்படுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே!” என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது ”அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன்(பயபக்தியுடையவர்)களில் ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், ”(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (பதில் கூறப்படும்) ”மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.” (அல்குர்ஆன் 39:54-59)
 அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)
 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)
 இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
 (மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
 மேலே கூறப்பட்ட இறைவசனங்களையும், நபிமொழிகளையும், கவனமாகப் படித்தீர்களா? மீண்டும் பல முறை படித்துப்பாருங்கள். அமல்களில்லாமலும், தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிப்பவர்கள் தங்களின் ”சக்ராத்” நிலையில் கதறக்கூடிய கதறலுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எத்தனையோ நமது சகோதரர்கள் அவர்கள் மரணிக்கும் போது தாங்கள் உலகத்தில் செய்த தவறுகளைப்பற்றி கவலை அடைந்தவர்களாக அவர்களின் உயிர் பிரிந்ததை பார்த்திருக்கின்றீர்கள், கேள்விப்பட்டும் இருக்கின்றீர்கள். உங்களின் உயிரும் அப்படிப் பிரியக்கூடாது என்பதற்காக இப்போதனையை உங்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!
 யார் உடனடியாக பாவமன்னிப்புத் தேடாமல் மரணம் வரும்வரை பிற்படுத்துகின்றார்களோ அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மரணம் வரும் வரை தவ்பாவைப் பிற்படுத்துவதென்பது மரணத்தின் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதல்ல. இன்று தவ்பாச் செய்வோம், நாளை தவ்பாச் செய்வோம் என்று தவ்பாவை யார் அலட்சியப் படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு திடீர் என மரணம் வரும்போது அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வார்கள் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதாகும். ஆகவே உடனடியாக தவ்பாச் செய்து கொள்ளுங்கள். காரணம் நாம் எப்போது மரணிப்போம் என்பது யாருக்குமே தெரியாது.
 பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகள்
 மனிதர்களின் உரிமைகள் சம்பந்தப்படாது, அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் மாத்திரம் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் அவர் அதிலிருந்து தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும், மூன்று நிபந்தனைகள் உள்ளன.
 முதலாவது, தான் செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலுமாக நீங்கி விடுவது.
இரண்டாவது, தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதப்படுவது.
மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என உறுதிகொள்வது.
 மனிதனுக்கு, மனிதன் செய்த குற்றமாயின் மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது யாருக்கு நாம் அநியாயம் செய்தோமோ அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். உதாரணமாக பிறரது பொருளை அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
 உண்மையான தவ்பா
 இப்படி செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல் தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 இன்று முஸ்லிம்களில் பலர் தவ்பாவை ஒரு விளையாட்டாக கருதுகின்றார்கள். அதாவது அன்றாடம் பல பெரும் பாவங்களை செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக சினிமா மற்றும் ஆபாசக் காட்சிகளைப்பார்ப்பது, சூதாடுவது, லாட்டரியில் பங்கு கொள்வது மற்றும் வட்டி போன்ற பெரும் பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே தவ்பாவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தொழுகைக்கு வரக் கூடியவர் அத்தொழுகைக்கு முன்னால் செய்த பெரும்பாவத்துக்காக தவ்பாச் செய்கின்றார். தவ்பாச் செய்யும் போதே அதே பாவத்தை மீண்டும் செய்யலாம் என்ற எண்ணத்துடனேயே தவ்பாச் செய்கின்றார். தவ்பாவை முடித்து விட்டு தன் வீடு சென்றதும் அதே பாவத்தையே திரும்பவும் தொடருகின்றார். அடுத்த தொழுகையின் நேரம் வந்து விடுகின்றது , மீண்டும் தொழுகைக்கு வருகின்றார். தொழுகையை முடித்துவிட்டு தவ்பாச் செய்கின்றார், மீண்டும் அதே பாவத்தையே செய்கின்றார். இப்படி ஒவ்வொரு தொழுகைக்குப் பின் தவ்பாவும் பாவமுமாகவே தொடருகின்றன. இது எப்படி உண்மையான தவ்பாவாக இருக்க முடியும்? ஆகவே சற்றே சிந்தித்து, தான் செய்யும் தவறுகளை முற்றாக விட்டு விட்டு முன் சொல்லப்பட்ட நிபந்தனைகளோடு, தவ்பாச் செய்யுங்கள். நிச்சயம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான். இதுவே உண்மையான தவ்பாவாகும்.
 தவ்பாச் செய்வதின் சிறப்புக்கள்
 தவ்பாச் செய்வதினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அல்லாஹ் நம்மை நேசிக்கிறான். அவனுடன் நம்முடைய தொடர்பு அதிகரிக்கின்றது. அவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது.
நிச்சயமாக பச்சாதப்பட்டு மீளுகின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)
 உங்களில், ஒருவரது வாகனம் அதில்தான் அவருடைய உணவும், குடிநீரும் உள்ளது;அது காணமால் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவ்வாகனம் அவர் முன் திடீரனெத் தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்வடைவாரோ, அதனைவிட (பன்மடங்கு) அதிகமாக தன் அடியான் தன்னளவில் தவ்பாச் செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்வடைகிறான். அவர் தனது வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக, இறைவா! நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறிவிடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாவு தடுமாறி இவ்வாறு தவறாகக் கூறிவிடுகிறார். (இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியைவிட பன் மடங்கு அதிகமாக தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுத் தஆலா மகிழ்வடைகிறான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
 மரணிப்பதற்கு முன் உண்மையான தவ்பா செய்து, பாவமற்றவர்களாக மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.
தொகுப்பு: அபூஇப்ராஹீம்
sathyamargam.com

Tuesday, November 13, 2012

பழி சுமத்தும் இழி செயல்



Post image for பழி சுமத்தும் இழி செயல்

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி.  பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக!

Tuesday, November 13, 2012

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?


உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?



நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.


ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.





இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..

//Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.// -மர்யம் ஜமிலா.

இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

--------------------------------------------------------------------------

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36

'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25


பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

https://sites.google.com/site/earthrotation

http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/

http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)