உங்களுக்கொரு கடிதம்

.


Post image for உங்களுக்கொரு கடிதம்

சகோதரர்களே! ஒரு வகையில் முஸ்லிம்கள் நற்பேறு பெற்றவர்களே! அவர்களிடம்தான் இறைவனின் வாக்கான அல்குர்ஆன் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அதே நிலையில் இருக்கிறது.
    மற்றொரு வகையில் இன்றைய உலகில் முஸ்லிம்கள் துர்பாக்கியசாலிகளே! இறைவனின் வாக்கான திருகுர்ஆனை தம்மிடம் வைத்திருக்கும் அவர்கள் அதன் ஆசிகளையும் வரம்பிட முடியாத அருட்பேறுகளையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள். இறைவன் அதனை இறக்கியருளியதின் நோக்கம் அதனை அவர்கள் ஓதியுணர்ந்து அதன்படி நடக்கவேண்டும் என்பதுதான். அது அவர்களுக்கு கண்ணியத்தையும் வலிமையையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறது. உலகத்துக்கு இறைவனுடைய பிரதிநிதியாக ஆக்குவதற்கு அது வந்திருக்கிறது. இதற்கு வரலாறு சான்று கூறுகிறது. அதன் அறிவுறைகளுக்கு தக்கவாறு செயல்பட்டபோது அவர்களை அது உலகத்திற்கு தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் உயர்த்தியது.
    ஆனால் இப்போது அது அவர்களிடத்தில் இந்த நிலையில் இல்லை. அதனை வீட்டில் வைத்து ஜின்னையும் பூதத்தையும் விரட்டுவது, அதில் உள்ள வசனங்களை எழுதிக் கழுத்தில் கட்டுவது, கரைத்து குடிப்பது, நற்கூலிக்காக பொருள் தெரியாமல் ஓதுவது போன்ற செயல்களில்தான் அது இன்று பயன்படுத்தப்படுகிறது. தமது வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளுக்கு அவர்கள் வழிகாட்டியாய் அதனைக் கொள்வதைல்லை.
    எங்கள் கொள்கை எப்படி இருக்கவேண்டும்; எங்கள் நடத்தை எவ்வாறு அமையவேண்டும்; எங்கள் நற்குண நல்லொழுக்கமுள்ள பண்புகள் எப்படி இருக்கவேண்டும்; வியாபரத் தொடர்புகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்; நட்பிலும் பகமையிலும் எந்தச் சட்டத்தை பின்பற்றவேண்டும். எமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கின்ற கடமைகள் யாவை; எது சத்தியம், எது அசத்தியம் எதை நாங்கள் பின்பற்ற வேண்டும் எதை நாங்கள் விட்டுவிட வேண்டும். யார் யாருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், நன்பர் யார், பகைவர் யார், கண்ணியமும் வெற்றியும் நற்பயனும் எதில் இருக்கின்றன? என்றெல்லாம் அவர்கள் அதனிடம் கேட்பதில்லை.
    இந்தப் பிரச்னைகளை எல்லாம் திருகுர்ஆனிடம் கேட்பதை இன்று முஸ்லிம்கள் கைவிட்டு விட்டார்கள். ஆனால் உலகாயதவாதி, நாத்திகர், இணைவைப்பவர், இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், ஆகியவர்களிடம் இந்தப்பிரச்னைகளைப் பற்றி இன்று முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே நடக்கிறார்கள்.
    எனவே இறைவனின் கட்டளைகளை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவு இன்று அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
    இறைவன் அருளிய திருமறையுடன் முஸ்லிம்கள் நடந்துகொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும் நகைப்புக்கிடமானவையாக இருக்கின்றன. இதே செயல்களை வேறொரு மனிதன் வேறொரு பணியில் செய்யக்கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவார்கள். பைத்தியக்காரன் என்று பட்டம் சூட்டுவார்கள்.
    நீங்களே சொல்லுங்கள்; ஒரு மனிதன் மருத்துவரிடம் சென்று மருந்தொன்றை குறித்துக்கொண்டு வருகிறான். அதனை அவன் துணியில் மடித்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான். அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கிறான் என்றால் அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?
    எல்லோரையும் விடவும் சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிக்ரற்ற மருந்தையும் அருட்கொடையையும் குறித்துக் கொடுத்திருக்கிறான். அந்த குறிப்புகளுக்கு உங்கள் கண்கள் முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் அதைப் பார்த்து யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. மருத்துவரின் குறிப்பு கழுத்தில் மாட்டிக்கொள்வதற்கோ கரைத்துக் குடிப்பதற்கோ உள்ளதல்ல. அதன்படி மருந்தை உபயோகிப்பது அவசியம் என்பதை யாரும் யோசிப்பதில்லை.
    நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றைக் கொண்டு வந்து படிக்கிறான். அதனைப் படித்தால் மட்டும் நோய் நீங்கிப் போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய மூளை கெட்டு விட்டது அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கள் என்று சொல்ல மாட்டீர்களா?
    ஆனால் நோய்களுக்காக அனுப்பித் தந்த தெய்வநூலை நீங்கள் இந்த நிலையில்தான் வைத்திருக்கிறீர்கள். அதனை ஓதும் நீங்கள் ஓதுவதால் மட்டுமே எல்லா நோய்களும் பறந்து போகும் என்றும், அதனுடைய கட்டளைப்படி நடக்க வேண்டியதுமில்லை என்றும், அது தீங்கு என்று காட்டக்கூடியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியதுமில்லை என்று நினைக்கிறீர்கள். தன்னுடை நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்தத் தீர்ப்பை வழங்குகிறீர்களோ அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை?
    உங்களுக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் உங்களுக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவர்களிடம் ஒடோடிச் செல்கிறீர்கள். அதிலுள்ள பொருளை நீங்கள் தெரிந்து கொள்ளும்வரை உங்களுக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதரணக் கடிதங்களைப் பொறுத்த மட்டில் நீங்கள் நடந்துகொள்ளும் முறை இது.
    ஆனால் இம்மை மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து உங்களுக்கு வந்திருக்கிற கடிதத்தை அப்படியே போட்டு வைத்துக் கொள்கிறீர்கள்! அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் துடிப்பு உங்களுக்கு ஏற்படுவதில்லை. இது ஆச்சரியப்படக்கூடிய விசயமல்லவா?
அபுல் அஃலா மெªதூதி

0 comments :

Post a Comment