அல்பாத்திஹா (தோற்றுவாய்)

.


Post image for அல்பாத்திஹா (தோற்றுவாய்)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
 1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
    இறக்கப்பட்ட வரலாறு 
    நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது.  இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல்என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப்பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.
ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும்.
உலகில் அவனது அடிமைகள் செய்யும் குற்றங்களுக்கு அளவு கிடையாது. அவ்வாறு இருந்தும் கூட அல்லாஹ் அளவற்ற அருளாளனாகவே இருந்து வருகின்றான். திருமறையில் அல்லாஹ் “என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. (7:156) அடியார்கள் குற்றங்கள் செய்தாலும் அவர்களது நன்றியை எதிர்பார்க்காமலும் மீண்டும் மீண்டும் அருள்புரிந்துகொண்டு வரக்கூடியவனே “ரஹ்மான்” அளவற்ற அருளாளன்.
“அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர யாரும் (அதுசமயம்) பேசமாட்டார்கள்” (அல்குர்ஆன் 79:38) என்ற இறைவனின் வாக்குப்படி அல்லாஹ் அனுமதித்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் பேசுவதற்கு திராணியற்ற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் அந்நாளில் அவனேதான் எஜமானன்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்’

என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்கு மாற்றமாக வணக்கத்திற்கு தகுதியானவன் வேறுயாரும் உண்டு என்று நம்புவதும்  அவர்களுக்கு வணக்கம் செய்வதும் அவனைத் தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டு என்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க்(இணைவத்தல்)என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலோ, குத்போ,வலியோ,யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும் அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இதைப் போல் நட்சத்திரங்களுக்கோ, நாட்களுக்கோ, சகுனங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டு என்று நம்புவதும் கடுமையான குற்றமாகும். ஒவ்வொருவரும் தனது சிறு தேவை முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும்  நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் “செருப்பின் வார் அறுந்துபோனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனக் கூறினார்கள் (திர்மிதீ)
வருங்காலத்தை அல்லாஹ்வைத் தவிர வேறும் யாரும் அறியமுடியாது. ஜோசியத்தின் மூலமாகவோ குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைப்பெறப் போகும் காரியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் அன்று நம்புவது இணைவைத்தல் ஆகும். இதைக் குறித்தே நபி(ஸல்)அவர்கள் “(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கீகரிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம் (முஸ்லிம்)
நாட்களாலும் நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெறும் குற்றமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும் இன்னின்ன நட்சத்திரங்களால் தான் மழை பெய்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு  செய்தவன் என்றும் கூறினார்கள்” ஹதீஸ் சுருக்கம் (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் அடியார்களில் அவனது அருள் பெற்றவர்கள், அவனின் கோபத்த்திற்கு ஆளானவர்கள், வழி தவறியவர்கள் ஆகிய மூன்று வகையினர். அல்லாஹ்வின் அருள்பெற்ற முதல் பிரிவினர் வழியிலெயே தன்னையும் நடத்தும்படி ஒவ்வொரு அடியானும் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பதை 6 வது வசனம் கூறுகிறது.
உண்மைக் கொள்கைகளுடன் தப்பான கொள்கைகளையும் விசுவாசம் கொண்டு, இறைவனுடைய கட்டளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவற்றிற்கு மாறு செய்ததன் காரணமாக இறைவனுடைய கோபத்திற் குள்ளானவர்கள்  இரண்டாவது பிரிவினர்.
அடிப்படையான உண்மையான கொள்கைகளில் விசுவாசம் கொள்ளாமல் நேர்வழியை விட்டும் விலகி நடந்தவர்கள் மூன்றாவது பிரிவினர்.
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களையுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். (அல் குர்ஆன் 4:69)
கடைசியாக சூரா ஃபாத்திஹாவில் ஆமீன் என்ற  இவ்வாக்கியம் இந்த அத்தியாயத்தில் சேர்ந்த்தல்ல எனினும் இந்த சூராவை ஓதி முடித்தவுடன் ‘ஆமின்’ என்று கூறும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது அருள் பெற்றவர்கள் சென்ற வழியில் நம்மை நடத்தி அருள் புரிவானாக ஆமீன்!
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்

0 comments :

Post a Comment