Showing posts with label Quraan. Show all posts
Showing posts with label Quraan. Show all posts

Tuesday, November 13, 2012

அல்பாத்திஹா (தோற்றுவாய்)



Post image for அல்பாத்திஹா (தோற்றுவாய்)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
 1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
    இறக்கப்பட்ட வரலாறு 
    நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது.  இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல்என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப்பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.
ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும்.
உலகில் அவனது அடிமைகள் செய்யும் குற்றங்களுக்கு அளவு கிடையாது. அவ்வாறு இருந்தும் கூட அல்லாஹ் அளவற்ற அருளாளனாகவே இருந்து வருகின்றான். திருமறையில் அல்லாஹ் “என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. (7:156) அடியார்கள் குற்றங்கள் செய்தாலும் அவர்களது நன்றியை எதிர்பார்க்காமலும் மீண்டும் மீண்டும் அருள்புரிந்துகொண்டு வரக்கூடியவனே “ரஹ்மான்” அளவற்ற அருளாளன்.
“அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர யாரும் (அதுசமயம்) பேசமாட்டார்கள்” (அல்குர்ஆன் 79:38) என்ற இறைவனின் வாக்குப்படி அல்லாஹ் அனுமதித்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் பேசுவதற்கு திராணியற்ற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் அந்நாளில் அவனேதான் எஜமானன்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்’

என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்கு மாற்றமாக வணக்கத்திற்கு தகுதியானவன் வேறுயாரும் உண்டு என்று நம்புவதும்  அவர்களுக்கு வணக்கம் செய்வதும் அவனைத் தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டு என்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க்(இணைவத்தல்)என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலோ, குத்போ,வலியோ,யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும் அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இதைப் போல் நட்சத்திரங்களுக்கோ, நாட்களுக்கோ, சகுனங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டு என்று நம்புவதும் கடுமையான குற்றமாகும். ஒவ்வொருவரும் தனது சிறு தேவை முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும்  நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் “செருப்பின் வார் அறுந்துபோனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனக் கூறினார்கள் (திர்மிதீ)
வருங்காலத்தை அல்லாஹ்வைத் தவிர வேறும் யாரும் அறியமுடியாது. ஜோசியத்தின் மூலமாகவோ குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைப்பெறப் போகும் காரியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் அன்று நம்புவது இணைவைத்தல் ஆகும். இதைக் குறித்தே நபி(ஸல்)அவர்கள் “(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கீகரிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம் (முஸ்லிம்)
நாட்களாலும் நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெறும் குற்றமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும் இன்னின்ன நட்சத்திரங்களால் தான் மழை பெய்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு  செய்தவன் என்றும் கூறினார்கள்” ஹதீஸ் சுருக்கம் (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் அடியார்களில் அவனது அருள் பெற்றவர்கள், அவனின் கோபத்த்திற்கு ஆளானவர்கள், வழி தவறியவர்கள் ஆகிய மூன்று வகையினர். அல்லாஹ்வின் அருள்பெற்ற முதல் பிரிவினர் வழியிலெயே தன்னையும் நடத்தும்படி ஒவ்வொரு அடியானும் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பதை 6 வது வசனம் கூறுகிறது.
உண்மைக் கொள்கைகளுடன் தப்பான கொள்கைகளையும் விசுவாசம் கொண்டு, இறைவனுடைய கட்டளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவற்றிற்கு மாறு செய்ததன் காரணமாக இறைவனுடைய கோபத்திற் குள்ளானவர்கள்  இரண்டாவது பிரிவினர்.
அடிப்படையான உண்மையான கொள்கைகளில் விசுவாசம் கொள்ளாமல் நேர்வழியை விட்டும் விலகி நடந்தவர்கள் மூன்றாவது பிரிவினர்.
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களையுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். (அல் குர்ஆன் 4:69)
கடைசியாக சூரா ஃபாத்திஹாவில் ஆமீன் என்ற  இவ்வாக்கியம் இந்த அத்தியாயத்தில் சேர்ந்த்தல்ல எனினும் இந்த சூராவை ஓதி முடித்தவுடன் ‘ஆமின்’ என்று கூறும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது அருள் பெற்றவர்கள் சென்ற வழியில் நம்மை நடத்தி அருள் புரிவானாக ஆமீன்!
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்

Thursday, June 7, 2012

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

 அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள்​. அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

 சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

 “இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

 பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

 எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:

 ஆழ் கடலில் அலை

 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

 நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை

 திருப்பித் தரும் வானம்

 பெருவெடிப்புக் கொள்கை

 முகடாக வானம்

 வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி

 விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

 சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்

 வானத்திலும் பயணம் செய்ய வழிகள்

 முளைகளாக மலைகள்

 பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை

 பூமி உருண்டை

 பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்

 ஓரங்களில் குறைந்து வரும் பூமி

 மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்

 புவி ஈர்ப்பு சக்தி

 விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்

 கலப்பு விந்து

 கர்ப்ப அறையின் தனித்தன்மை

 வேதனையை உணரும் நரம்புகள்

 தேன் உற்பத்தி

 இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.

 தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:

 அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)





 மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.

 அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.

 வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:

 வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)

 பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.







 இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.



 இறைவன் வழங்கிய அற்புதமான திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா அல்லாஹ் —

Monday, November 14, 2011

Tamil Quran - 78 Surat An-Naba' (The Tidings) - سورة النبإ

 soorah al- nabaa