நாட்டின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இனவாதம் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது

.



Sritharanபிரச்சினைகளின் நதிமூலம் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் தோழர் சுகு சிறீதரன்
இலங்கையின் முன்னேற்றம் அல்லது சுபிட்சம், பிரகாசமான எதிர்காலம் என்பதெல்லாம் இலங்கையர்களின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தலிலேயே தங்கியுள்ளது. இலங்கையில் வாழும் ஒரு பகுதி மக்கள் தாம் இலங்கையர்கள் என்று மானசீகமாக சிந்திக்காத நிலை காணப்படுகிறது. இது மிகவும் அவலமானதாகும்.
பேரினவாத மேலாதிக்க மனோபாவமே மக்களில் ஒரு பகுதியினரை அவ்வாறு சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இது இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் ஜனநாயக விரோதப் போக்காகும். தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இதன் போக்காக இருந்தது.
இந்தப் போக்கின் எதிர்வினையாகவே தமிழர்கள் மத்தியில் அகிம்சைப் போராட்டம் காலாவதியாகி ஆயுதம் தாங்கிய எழுச்சி உருவானது. அது பின்னர் தமிழ்ப் பாசிசமாக மாறி, பெருநாசத்தை தமிழ் சமூகத்திற்கும், சகோதர சமூகங்களுக்கும் விளைவித்தது என்பது வேறு கதை.
ஆனால் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதம்தான் இருந்தது இங்கு வேறொன்றும் இருக்கவில்லை. அந்தப் பயங்கரவாதப் பிரச்சினை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப கூறிவருகிறார்கள்.
ஆனால், இந்த நாட்டில் தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாறி மாறி வந்த அரசுகள் வெவ்வேறு அளவில் இதனை செய்திருக்கின்றன என்பது வரலாறு.
கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப இதனை கூற முடியாது. எனினும், சில விடயங்களை நாம் தொடாமல் செல்ல முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்றது என்று சொல்லப்பட்ட நாட்களின் மறுகணங்களிலேயே மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை, பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தனிச் சிங்கள சட்டமானது, தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது ரவுடிகளை ஏவி தாக்குதல் புரிந்தது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக போடப்பட்ட பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. 1960 களின் முற்பகுதியில் அகிம்சை வழியில் காட்டப்பட்ட எதிர்ப்பு இயக்கம் இராணுவ, பொலிஸ் பலம் கொண்டு வன்முறை வழியில் அடக்கப்பட்டது.
1958, 1977, 1981, 1983 என திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தது. 1978, 1979 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் போராடும் தமிழ் மக்களை கொல்வதற்கும் காணாமல் செய்வதற்குமான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது.
கலவரங்களின்போது பிற சந்தர்ப்பங்களிலும் சகட்டு மேனிக்கு தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும், ஏனைய வன்முறைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு பல உயிரழிவுகளுக்கு காரணமாக இருந்தது.
வடக்கிலும், தெற்கிலும் மலையகத்திலும் மக்களைத் தாக்கி துன்புறுத்தி தீ வைத்து தாக்குதல்களை அவ்வப்போது நடத்தியது. சிறைப்படுகொலைகள் என்பனவெல்லாம் இங்கு எளிதில் மறந்துவிடக் கூடிய சங்கதிகள் அல்ல.
எனவே, புலிப் பயங்கரவாதம் எதோ திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் அசரீரியாக தோன்றியது என்ற புலுடா கதைகளை ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு தேவையில்லை, நாட்டை அபிவிருத்தி செய்தால் போதும் அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் பகிரப்பட முடியாது, நிலத்தின் மீதான அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன பகிரப்பட முடியாது என்ற 60 ஆண்டுகால அனுபவம், யதார்த்தம், நீதி, நியாயம் இவற்றுக்குப் புறம்பான கதைகளையே ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிரந்தரமாக வைத்திருப்பதும், திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதும் மிக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது விவசாயிகளதும், மீனவர்களினதும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இது மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் விதிவிலக்கல்ல.
கிழக்கில் மக்கள் மத்தியில் பேதங்களை தோற்றுவிப்பது, மோதல்களை ஏற்படுத்துவது என்ற நிலமைகள் காணப்படுகின்றன. காந்தியடிகள், சுவாமி விபுலானந்தர், பேடன் பவல் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது இப்போது மாத்திரமல்ல கடந்த 30 ஆண்டுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் காணப்பட்டது.
பேரினவாத சக்திகள் பலவீனப்பட்டதாகவோ தெற்கின் ஆட்சியாளர்களின் சிந்தனைப் போக்கு மாறியதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. நிர்வாகத்துறையில் தமிழர்கள் எவரும் பதவி நிலைகளில் இல்லை. ஒன்று இரண்டு பேர் இருக்கலாம். இராணுவம், மத்தியப்பட்ட அதிகார மையம் என்பவற்றைக் கொண்டு ஒரு அகங்கார ஆட்சியை நாட்டில் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எரிபொருள் விலையேற்றம், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உயர் கல்வி தனியார் மயமாக்கம் என்பன மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆட்கடத்தல், காணாமல் போதல் இன நல்லுறவுகளை சீர்குலைக்கும் பேச்சுக்கள் என்பன மக்களை விரக்தியடைய வைத்துள்ளன.
சமகால உலகில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த சிறப்பிடம் காணப்படுகிறது. எகிப்து, மியன்மார் போன்ற நாடுகளில் அவை உணர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள், காலாவதியானவற்றை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டிய வற்றை காவித் திரிகிறார்கள்.

0 comments :

Post a Comment