இந்த இழிநிலைக்கு காரணம் யார்?

.

இந்த இழிநிலைக்கு காரணம் யார

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

தாயின் காலடியில் சுவனம்
, குடும்பத்தின் தலைவி, சொத்துரிமை, பேச்சு உரிமை, கல்வியில் உரிமை, திருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி, மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.

இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.

ஆனால் இன்று பெண்களின் நிலையோ???!!! தவறான பழக்க வழக்கத்தாலும், ஊடகங்களின் ஈர்ப்பாலும், உலக வாழ்வின் ஆக்கிரமிப்பாலும், போதைப் பொருளாக, சுகம் கொடுக்கும் கருவியாக, விளம்பர பொருளாக, பெற்ற பெண் மக்களை பணத்திற்காகவும், வறுமையை நீக்கவும் கொடுங்கிழார்களுக்கு பெற்றோர்களாலேயே விற்கப்படும் பொருளாக, இது போன்ற இன்னும் பிற இழிநிலைகளில் வாழ்கின்றனர் என்று சிந்திக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இதற்கு, ஒரு புறம் உலக வாழ்வும், மேலை நாட்டு மோகமும், கூடா நட்பும் காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெற்றோரும் இவர்களின் தவறான வழிக்கு முக்கிய காரணமாகின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை திருமண பந்தத்தில் இணைக்கும் வரை தாய்க்கும் தந்தைக்கும் பொறுப்புகள் பல இருந்தாலும், இதில் அதிக பொறுப்பும், அக்கறையும் தாய்க்கே உள்ளது என்பதை அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. இதையே நபி(ஸல்) பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்...
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்:முஸ்லிம்
இப்படி பட்ட சூழ்நிலையில், இன்று பெண் குழந்தை என்றாலே வயிற்றில் நெருப்பைக் கொண்டு வாழும் விதமாக நம் கலாச்சாரமும், சூழ்நிலையும் மாறி உள்ள இந்த காலத்தில், அவர்களை சரியான முறையில் ஒரு சிறந்த மூமீனாக (இறையச்சம் கொண்டவராக) வளர்க்க முதலில் பெற்றோர்கள் தங்களது இஸ்லாமிய அறிவை பலப்படுத்திக் கொள்வதும், அதன் படி தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் மிக முக்கியமான ஒன்று.
இதையே நபி (ஸல்) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:-
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்திலே பிறக்கிறது. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) நூல்:புஹாரி
ஆனால் இன்று எத்தனையோ பெற்றோர்கள் தன் பிள்ளையை சுதந்திரத்துடனும், வசதியுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கின்றனரே தவிர ஈமான் நிறைந்தவர்களாக வளர்க்க தவறிவிடுகின்றனர். மேலும் இதற்காகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு குழந்தை ஏழு வயதை அடைந்தவுடன் தொழுமாறு ஏவுங்கள், பத்து வயதை அடைந்ததும் தொழுகையை தவறவிட்டால் அடியுங்கள். (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்)
ஆனால் இன்று எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு மானக்கேடான செயலில் இருந்து தன்னை காக்கும் மிகப் பெரிய கருவியான தொழுகையை ஏவுகிறார்கள்??

அதை தவிர்த்துவிட்டு, கட்டுப்பாடும் வரைமுரையுமின்றி தன் பெண்பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற சுதந்திரத்தை அனுமதிக்கும் பெற்றோர்கள் இஸ்லாத்தையும், அதன் அழகிய வழி முறையையும் எடுத்து சொல்ல தவறிவிடுகிறார்கள். இதன் விளைவு இன்று எங்கு பார்த்தாலும், பள்ளி படிக்கும் மாணவி முதல் திருமணம் முடித்த பெண் வரை "காதலனுடன் ஓட்டம்" என்று செய்திகள் வெளியாவது கேட்பவர் நெஞ்சை பதை பதைக்கிறது.

இதுபோன்ற செயல்களுக்கு
இஸ்லாமிய அறிவை பெறாத பெற்றோரும் எப்படி காரணமாகிறார்கள் என்பதற்கும் பெண் பிள்ளைகளும் எப்படி பலியாகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்துடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.. இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ்....

உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

0 comments :

Post a Comment