அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம்

.
அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம்

 எழுதியவர்/ மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

- M.S.M. இம்தியாஸ் ஸலபி
 மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபார ரீதியாக வருகைத் தந்தவர்கள். மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். அன்று முஸ்லிம்களிடம் நம்பிக்கை, நாணயம் பரந்து காணப்பட்டதால் இந்நாட்டு சிங்கள அரசர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கினார்கள். சிங்கள பெண்மணிகளை மணம் முடித்து பல பகுதிகளிலும் குடியமர்ந்தார்கள்.

இன்று முஸ்லிம் வியாபாரிகள் என்றால் எட்டி நின்று பார்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் செய்யப் பயப்படுகிறார்கள். வாக்களித்தால் மாறுசெய்கிறார்கள். நம்பினால் மோசடி செய்கிறார்கள். பேசுகின்ற பிரகாரம் நம்பிக்கையுடன் நடப்பதில்லை. சில்லறை வியாபாரம் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை ஏமாற்று வியாபாரம் தான்! நாணயம் மறைந்து மோசடி நிறைந்து காணப்படுகின்றது என்ற ஆதங்கம் பரவலாக காணப்படுகின்றது.

வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்து கொண்டே காசோலையை எழுதி கொடுப்பார்கள். போலியான ஒரு காசோலையை கொடுத்து ஆயிரக்கணக்கில் வியாபாரம் செய்வார்கள். ஏன் ஹஜ்ஜுக்கு கூட செல்வார்கள். உரிய திகதியில் திருப்பித் தருவதாக கூறி பணத்தை எடுத்துச் செல்வார்கள். பிறகு அந்தப் பக்கமே திரும்பி பார்க்க மாட்டார்கள்.

250கிராம் எடையுள்ளதாக கூறி ஒரு பொருளை அளந்து விற்பார்கள். மறுபடியும் அளந்து பார்த்தால் அதில் 25கிராம் குறைவுள்ளதாக இருக்கும். அழுகிப்போன பொருளை அழகு படுத்தியும், குறையுள்ள பொருளை மூடி மறைத்தும் பேரம் பேசுவார்கள்.

ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தால் மக்களை அவசரப்படுத்தி வியாபாரம் ஓகோ என்று நடப்பது போல் பாவனை செய்து, பணத்தை கூடுதலாக சுருட்டி விடுவார்கள். ஒரு பொருளை பார்த்து அதனை வாங்காது விட்டால், அசிங்கமாக திட்டுவார்கள். அல்லது எவனது தலையிலாவது கட்டிவிடுவார்கள்.

எடுத்த பொருட்களுக்கோ அல்லது சாப்பிட்ட பொருட்களுக்கோ உரிய விலையை எடுக்காமல் கூடுதலாக “பில்” போடுவார்கள். நுகர்வோரிடம் பொருளை காட்டி விலைபேசி, போலியான பொருளை கொடுத்து பணம் வாங்குவார்கள்.

இப்படி ஆயிரமாயிரம் குறைபாடுகள், மோசடிகள் நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லிம்களிடம் மாத்திரமல்லாமல் முஸ்லிமல்லாதவரிடத்திலும் காணப்படுகிறது.

ஆனாலும் முஸ்லிம்களிடம் மோசடி கூடுதலாக காணப்படுகிறது என்று பரவலான குற்றச்சாட்டு முஸ்லிம்களாலேயே முன் வைக்கப்படுகிறது. அதிகமான முஸ்லிம்கள் கூட தங்களது வியாபாரங்களை, கொடுக்கல் வாங்கலை முஸ்லிமல்லாத சகோதரர்களுடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். முஸ்லிம்களது தவறான நடவடிக்கைகளை பார்த்து அடுத்த சமுதாயத்தினரும் விலகிப்போகின்ற நிலையை உருவாக்கின்றது.

எந்தவொரு நல்ல விஷயத்தையும் யாருடனும் மேற்கொள்ளலாம். இதில் இன, மத, பேதம் பார்க்கக்கூடாது. மாற்றுமத சகோதரர் கூட நாணயமாக வியாபாரம் செய்வாரேயானால் அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவில்லை. இந்த நாணயமும் நம்பிக்கையும் முஸ்லிமிடம் இருக்க வேண்டியவை. அது இறை நம்பிக்கையின் ஓர் அம்சம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை வியாபாரங்கள் உட்பட தங்களது எல்லா காரியங்களையும் இஸ்லாம் சொல்லுகின்ற பிரகாரம் அமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி அவர்கள் செய்வார்களேயானால் முஸ்லிம்கள் பற்றி இந்நாட்டில் இனவாதிகளால் பரப்பப்பட்டு வரும் தவறான குற்றச்சாட்டுக்களை முறியடிக்கக் கூடியதாக அமையும்.

முஸ்லிம்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம். அவர்களது வியாபாரத்தை வளர்க்க வேண்டாம். அவர்களை அன்னியப்படுத்தி வையுங்கள் என்ற தீய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு போட்டியாக பெரும் பெரும் வியாபாரக் கடைகள், நிறுவனங்கள், சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த பரகசியம். முஸ்லிம்கள் பெரும்பான்மைகளாக இருந்து வியாபாரம் செய்த இடங்கள் இன்று கைநழுவிப் போயுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் முஸ்லிம்களுடைய தவறான அணுகுமுறைகள் மற்றும் வியாபார ரீதியான யுக்திகள் நவீன கல்விமுறைகளுடன் சார்ந்த அறிவு (சந்தைப்படுத்தும் முறைமைகள்) அறியாமையும் காரணமாகும்.

இவ்வேளையில், முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து நீதமாக செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

எந்த செயற்பாட்டினால் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்களோ, அதே செயற்பாட்டினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டால் எதிர்காலம் ஆபத்தானதாக அமையும். எனவே வியாபார முறைப்பற்றி இஸ்லாம் எமக்கு போதிக்கின்ற கட்டளைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பொருளீட்டும் போது அடுத்தவனின் பொருளாதாரத்தை சுரண்டாமலும், ஏமாற்று மோசடிகளில் ஈடுபடாமலும் நேர்மையாக சம்பாதிக்குமாறு இஸ்லாம் கண்டிப்பான கட்டளையை இடுகிறது.

அளவை நிறுவையில் மோசடி
 அல்லாஹ் கூறுகிறான்:

அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றனர். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்து கொடுத்தாலோ குறைவு செய்கின்றனர். மகத்தான நாளில் (மறுமை நாளில்) அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 83:1-3)

அளக்கும்போது நிறைவாக அளவுங்கள். நேரான தராசைக் கொண்டு எடை போடுங்கள். இதுவே மிக சிறந்ததும் அழகிய முடிவுமாகும். (அல்குர்ஆன் 17:35 6:152)

அளவையை பூர்த்தியாக அளந்து நிறுவையை சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 7:85 11:84,85 26:181, 55:8,9)

பொய்ச் சத்தியம்
 மக்களை ஏமாற்றி கள்ள தரகர்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம். உலகத்தில் அதிக இலாபத்தை தந்தாலும் மறுமையில் நரக நெருப்பை சந்திக்க வரும் என்பதை மறக்கக் கூடாது.

அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களுக்கிடையில் திருப்தியுடன் சம்மதத்தின் பெயரில் செய்யும் வியாபாரத்தை தவிர உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி அழுகிய பொருட்களை தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)

விற்கப்படுகின்ற ஒரு பொருளில் ஏதாவது குறைகள் இருக்குமாயின் அதனை எடுத்துக்காட்டி விற்க வேண்டும். மாறாக அந்தக் குறையை மறைத்து விற்பதாயின் அவர் முஹம்மது நபியை பின்பற்றக்கூடிய ஒருவராக இருக்கமாட்டார் என நபியவர்கள் கண்டிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதுக்கல்
 சிலர் வியாபார பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது போல் காட்டிக்கொண்டு பொருட்களை பதுக்கிவிட்டு கொள்ளை இலாபமிட விலையை ஏற்றி விடுவார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி விடுகிறார்கள். இந்த மோசடி வியாபாரத்தையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.

”பாவிகளைத் தவிர மற்றவர்கள் பதுக்க மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்” (நூல் – திர்மிதி)

இடைத் தரகர்களின் மோசடி
 மக்கள் வியாபாரியிடம் ஒன்று கூடும்போது, அந்த வியாபாரி தனது இடைத் தரகர்களை ஏவிவிட்டு குறித்த பொருளின் விலையை ஏற்றிவிட்டு நழுவி விடுவார்கள். எதையும் அறியாத அப்பாவி மக்கள் இந்த மோசடியில் மாட்டிக் கொண்டு கூடுதல் விலை கொடுத்து அற்பமான ஒரு பொருளை தரம் வாய்ந்த பொருள் என நம்பி வாங்கிச் செல்வார்கள்.

(வாங்கும் எண்ணமின்றி) விலையை அதிகம் கேட்க வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) நூல்:- புகாரி)

இருவருக்கிடையில் வியாபாரம் நடக்கும்போது மூன்றாம் நபர் குறுக்கிட்டு விலை பேசுவதையும் அடுத்தவன் தொழிலில் மண்ணை போடுவதையும் பார்க்கிறோம்.

உங்களில் சிலர் சிலரது வியாபாரத்தில் குறுக்கிட வேண்டாம். சிலர் (திருமணத்திற்காக) பெண் பேசும்போது வேறு சிலர் அதில் குறுக்கிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல்:- புகாரி)

கால்நடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக, அந்த கால்நடையிடம் (ஆடு, மாடுகளிடம்) பால் கரக்காமல் சில நாட்களுக்கு விட்டுவிட்டு அந்த கால் நடையின் பால் மடு பெரிதாக இருப்பது போல் காட்டி விடுவார்கள்.

பால் மடு பெரிதாக இருப்பதைக் கண்டு அதனை வாங்குபவர் அதிக விலை கொடுத்து வாங்கி விடுவர். இந்த மோசடியையும் நபியவர்கள் தடுத்தார்கள். வணிகக் கூட்டம் (சந்தைக்கு வரும் முன்) எதிர் கொள்ளாதீர்கள். சில நாட்கள் பால் கரக்காமல் விட்டுவிட்டு கால் நடைகளை விற்காதீர்கள். சிலர் சிலருக்கு (உதவுவதற்காக கூறி) விலையை ஏற்றி விடாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் – திர்மிதி.)

வாடிக்கையாளரை அச்சுறுத்தல்
 சந்தைக்கு அல்லது துணிக்கடைக்குச் சென்று குறித்த ஒரு பொருளை தொட்டுப் பார்த்து விட்டால் அந்தப் பொருளை தொட்டுபார்த்தவர் வாங்கி விட வேண்டும் என்று வியாபாரிகள் நிர்ப்பந்திப்பதை பார்க்கிறோம். எப்படியாவது அப்பொருளை வாங்கியே ஆகவேண்டும் என்பதற்காக அதை பார்சல் பண்ணி தந்துவிடுவார்கள்.

இந்த வியாபாரத்தை முனாபதா, முலாமஸா என அரபியில் கூறப்படும். இந்த வியாபார முறையை நபி (ஸல்) தடுத்தார்கள் (நூல்: புகாரி)

நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் தனக்கு விரும்பிய ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கும் வேண்டாம் என கூறி விடுவதற்கும் உரிமையுண்டு. பார்த்தப் பொருளை வாங்கியே ஆக வேண்டும் என வியாபாரி நிர்ப்பந்திப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது.

வியாபாரத்தில் வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறி நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது.

ஒருவரது நடத்தையை வைத்துதான் அவரது நம்பகத்தன்மையையும் அவர் சார்ந்திருக்கின்ற சமூகத்தினதும், மார்க்கத்தினதும் நம்பகத்தன்மை உரசிப் பார்க்கப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும்.

முஸ்லிம்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு வியாபாரங்களை நடாத்த வேண்டும். மறுமை நாளை அவர்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. (தொடரும் இன்ஷா அல்லாஹ்)

0 comments :

Post a Comment