அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும்

.

அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும்

ACJU-Dambullahஜம்இய்யதுல் உலமா கூட்டத்தில் தீர்மானம்
தம்புள்ளையில் மஸ்ஜிதுல் ஹைரியா சேதமாக்கப்பட்டதற்குப் பின்னரான ஆடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில் அதே இடத்தில் பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. மாற்றுக் காணியில் பள்ளிவாசலை அமைக்க முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனை திட்டவட்டமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நாளை மறுநாள் திங்கட்கிழமை தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இது தொடர்பாக இடம்பெறவுள்ளதாக கூறப்படும் கூட்டத்தை பகிஷ்கரிப்பதென இங்கு கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

முஸ்லிம்களது பள்ளிவாசல்களும் புனித தலங்களும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சதி நடவடிக்கைகள் இடம்பெறாத வண்ணம் போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பாக எடுத்த சாதகமான நடவடிக்கைகளுக்கு இங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அல்ஜெஸீரா, பி.பி.சி. போன்ற ஊடகங்களில் வெளிவந்ததன் பின்னர், இது தொடர்பான அழுத்தம் சம்பந்தப்பட்ட சக்திகளுக்கு ஏற்பட்டது குறித்தும் இங்கு கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர், செயலாளர் உட்பட உலமாக்களும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to  meelparvai

0 comments :

Post a Comment