பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?

.
வஹியின் வாழ்வு: பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?: பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?   எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனது இறுதித் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்...
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனது இறுதித் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.


சமகாலத்தில் மிகவும் தேவையான ஒரு விடயம் பற்றி இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். பெண்களுக்குப் பிரச்சாரம் நடைபெறும் எல்லா இடங்களிலும் இதே வினா எழுப்பப்படுவது வழக்கம். இவ்விடயம் இன்று கருத்து வேறுபாடுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மார்க்க அறிஞர்கள் ‘பெண்களுக்கு திரையின்றி மார்க்கப் பிரச்சாரம் நடத்தலாம்’ என்ற கருத்தைக் கொண்டுள்ள அதே வேளை, இன்னும் சில அறிஞர்கள் ‘பெண்களுக்கு திரையின்றி பிரச்சாரம் நடத்தக் கூடாது’ என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.


இந்த இரு கருத்துக்களிலும் எது மிகவும் சரியானது என்பதை அல்லாஹ்வும் இறுதித் தூதரும் மாத்திரமே தீர்மானிக்க வேண்டும். எந்தவொரு அறிஞருக்கும் - எந்தவொரு மௌலவிக்கும் எந்தவொரு ஜமாஅத்துக்கும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் கருத்துக்கள் சொல்வதற்கோ மார்க்கத்தை தீர்மானிப்பதற்கோ மார்க்கத்தில் உரிமை இல்லை.


இப்பொழுது நாங்கள் பார்க்க வேண்டிய விடயம், திரை விடயத்தில் அல்லாஹ் ஆண்களுக்கு என்ன கட்டளையிடுகிறான்? என்பதே. பெண்களுடன் ‘திரைக்குப் பின்னால்’ பேச சொல்கிறானா? அல்லது ‘திரை இன்றி’ பேசச் சொல்கிறானா?


அல்லாஹ் கூறுகிறான்:


“விசுவாசம் கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டாலே தவிர உண்பதற்கு நுழைந்து விடாதீர்கள்! அவரது பாத்திரத்தை பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் நுழையுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் இலயித்து விடாதீர்கள்! இது நபிக்கு தொந்தரவாக இருக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்(க நேரிட்)டால் திரைக்குப் பின்னாலிருந்தே கேளுங்கள். இதுவே, உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகக் கடுமையான (பாவமான) காரியமாகும்.
((சூரா அல் அஹ்ஸாப் அத்தியாயம்: 33, வசனம் 53))


இவ்வசனத்திற்கு திரையுடைய வசனம் (ஆயதுல் ஹிஜாப்) என்று சொல்லப்படுகிறது. ஹிஜாப் இவ்வசனம் மூலம் தான் கடமையாகியது.


நபியின் மனைவியரிடம் ஏதேனும் ஒரு பொருளை விசுவாசியான ஆண்கள் கேட்கும் போது ‘திரைக்குப் பின்னாலிருந்து’ கேட்குமாறு அல்லாஹ் இங்கே கட்டளையிடுகிறான். பேச்சிலே உள்ள ஒரு வடிவம் தான் கேள்வி (கேட்பது). ‘கேளுங்கள்’ என்ற வார்த்தையில் ‘பேசுங்கள்’ என்ற அர்த்தம் மறைந்துள்ளது. எனவே, நபியின் மனைவியரிடம் மார்க்கம் அனுமதித்த ஏதேனும் ஒரு விடயத்தை விசுவாசியான ஆண்கள் பேசும் போது திரைக்குப் பின்னாலிருந்து தான் பேச வேண்டும் என்பது தெளிவாகிறது.


இதே போன்று, நபியின் மனைவியரல்லாத ஏனைய விசுவாசியான பெண்களிடம் விசுவாசியான ஆண்கள் பேசும் போது எவ்வாறு பேச வேண்டும்? என்ற கேள்வி இங்கே எழுகிறது.


விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து பேச வேண்டும் என்ற சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் உரியது அல்ல. காரணம்:


1- மேற் கூறப்பட்டுள்ள வசனத்தில் இச்சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் எனக் குறிப்பிடப்படவில்லை.


2- பொதுவாகவே ஒரு சாராருடன் சம்பந்தப்பட்டு இறங்குகின்ற ஒரு சட்டம் அச்சாராருக்கு மட்டுமல்லாது இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் பொருந்தும் என்பது அல் குர்ஆனின் நடைமுறையாகும்.


3- விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னாலிருந்து ஏன் பேச வேண்டும்? என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தும் போது, அதே வசனத்தில் ‘இதுவே உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது’ எனக் கூறுகிறான்.


மேலுள்ள வார்த்தையில் வரும் ‘உங்கள் உங்களுக்கும்’ என்பது ஸஹாபாக்களில் உள்ள ஆண்களைக் குறிக்கிறது. ‘அவர்களின் உள்ளங்களுக்கும்’ என்பது நபியின் மனைவிமார்களைக் குறிக்கிறது. ஸஹாபாக்களுக்கு தேவைப்படுகின்ற இவ்வுளத் தூய்மை நமது ஆண்களுக்கு தேவைப்படாதா??
நபியின் மனைவிமார்களுக்கு தேவைப்படுகின்ற உளத் தூய்மை நமது பெண்களுக்குத் தேவைப்படாதா??


இவ்வுளத் தூய்மை ஸஹாபாக்களுக்கே தேவையென்றால் நபியின் மனைவியருக்கே தேவையென்றால் அவர்களை விட அதிகம் தப்புகள் செய்ய வாய்ப்புள்ள நமது ஆண்களுக்கும் நமது பெண்களுக்கும் எவ்வளவு உளத் தூய்மை தேவை என்பதை சிந்தித்தாலே விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து பேச வேண்டும் என்ற சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் உரியதல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.


4- அத்துடன், திரையின் (ஹிஜாபின்) ஓர் அம்சம் தான் ஜில்பாப். திரையுடைய வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்குப் பிறகு ஜில்பாபைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான். ஆவ்வசனத்தின் மூலம் திரை (ஹிஜாப்) நபியின் மனைவியருக்கு மட்டும் உரியதல்ல அனைத்து விசுவாசியான பெண்களுக்கும் உரியது என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


அல்லாஹ் கூறுகிறான்:
நபியே! உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் நம்பிக்கை கொண்டோரின் பெண்களுக்கும் தமது ‘ஜில்பாப்களை’ தொங்க விடுமாறு கூறுவீராக. அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்”


இப்போது, விசுவாசியான ஆண்கள் விசுவாசியான பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது எவ்வாறு நடந்து கொள்வது? என்பதைக் கவனிப்போம்.


அல்லாஹ்வின் வசனங்களை சரியான முறையில் விளங்கி, உள்ளத்தால் ஏற்று, வாழ்வில் நடைமுறைப்படுத்த விரும்பும் எல்லா விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கூறும் ஒரே உபதேசம் திரைக்குப் பின்னாலிருந்து தான் விசுவாசியான பெண்களுடன் பேச வேண்டும் என்பதே.


எனவே, விசுவாசியான ஆண்கள் விசுவாசியான பெண்களுக்கு நடாத்தும் பிரச்சாரமும் திரைக்குப் பின்னாலிருந்து தான் செய்யப்பட வேண்டும் என்பது இங்கே தெளிவாகிறது.
‘திரைக்குப் பின்னாலிருந்து’ எனும் வாசகத்தை அல்லாஹ் மிகத் தெளிவாகப் பயன்படுத்தியிருக்கும் போது அல்லாஹ் பயன்படுத்தாத ‘திரை இன்றி’ என்ற வாசகத்தை நாம் நடை முறைப்படுத்த முடியுமா?


ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் பார்க்கலாமா?





ஆண்கள் பெண்களுக்கு திரையின்றி மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது ஆண்கள் பெண்களைப் பார்க்க வேண்டிய நிலையும் பெண்கள் ஆண்களைப் பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இதனை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இவ்விடயத்தில் சிலர், இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற ஆய்வைப் பார்ப்பதற்கு முன்னரே ‘அனுமதிக்கத் தான் வேண்டும்’ என்ற முடிவை எடுத்து விடுகின்றனர். இதனால் தான் இவ்விடயத்தில் சரியான விளக்கத்தைப் பெற்றவர்களும் கூட இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. இது உண்மை முஸ்லிமுக்கு பொருத்தமானதல்ல.


இப்போது நாம் ஆண் பெண்ணைப் பார்ப்பதிலும் பெண் ஆணைப்; பார்ப்பதிலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன முடிவைத் தந்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.


அல்லாஹ் கூறுகிறான்:
“(நபியே!) விசுவாசிகளான ஆண்களுக்கு தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக் காத்துக் கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்”.
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:30)


மேலும் கூறுகிறான்:


“(நபியே) விசுவாசியான பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவும் தன் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாது மறைத்துக் கொள்ளவும்……………. (வசனத்தை முழுமையாகப் பார்வையிடுக)
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:31)


மேலுள்ள இரண்டு வசனங்களிலும் ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ்வினால் கட்டளையிடப்படுகின்றனர். அதாவது, ஆண்கள் பெண்களைப் பார்க்கக் கூடாது. பெண்கள் ஆண்களைப் பார்க்கக் கூடாது.


இச்சையின்றி பார்ப்பது கூடுமா?



மனிதர்கள் பெண்கள் மீது இச்சையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதுவொரு பொதுவான விதி. இதனை அல்லாஹ் சூரா ஆல இம்ரான் அத்தியாயம்:3 வசனம்: 14 இல் தெளிவு படுத்துகிறான்.
அதே போன்று, பருவ வயதையடைந்த ஆண்களிலும் பெண்களிலும் இச்சையற்றவர்களும் இல்லாமலில்லை. இச்சையற்றவர்கள் யார் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.


- ஆண்களில் இச்சையற்றவர்கள்: ‘அத்தாபி ஈன ஙைரி உலில் இர்பதி மினர் ரிஜாலி’ (பெண்களில் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள்)
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:31)


- பெண்களில் இச்சையற்றவர்கள்: ‘அல் கவாஇது மினன் நிஸாஇல்லாதீ லா யர்ஜூன நிகாஹன்’ ((திருமண விருப்பமற்ற (மாத விலக்கு நின்று குழந்தைகள் பெறும் நிலையைத் தாண்டி விட்ட) முதிய வயதுப் பெண்கள்))
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:60)


மேல் குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் இச்சையுள்ளவர்களே. இச்சையுள்ளவர்களின் இச்சை தூண்டப்படுவதே பார்வையின் மூலம் தான். ஓர் ஆண் ஒரு பெண்ணை முதல் தடவையில் காணும் போது இச்சையுடன் காண மாட்டான். காரணம், அவன் அவளை காணுவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறோம் என்பது அவனுக்குத் தெரியாது. தான் கண்டது ஒரு பெண்ணைத் தான் என்று தெரிந்தவுடன் உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.


ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல் பஜலி என்ற நபித் தோழர் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் திடீர் பார்வை பற்றிக் கேட்ட போது அவர் என் பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நூல்: முஸ்லிம்


நபியவர்கள், திடீர் பார்வை பற்றி கேள்வி கேட்ட அந்த நபித் தோழரைப் பார்த்து ‘உனது பார்வையில் இச்சை இருந்தால் பார்வையைத் திருப்பிக் கொள். இச்சையில்லாவிட்டால் தொடர்ந்து பார்’ என்று கூறவில்லை. மாற்றமாக ‘பார்வையைத் திருப்பிக் கொள்’ என்று பொதுவாகத் தான் கட்டளையிடுகிறார்கள். இதிலிருந்து இச்சையின்றி பார்க்கலாம் தானே என்ற அனுமதி இல்லை என்பது நிரூபணமாகிறது.


மேலும், திடீர் பார்வைக்கு ஒரு சில செக்கன்கள் மட்டுமே எடுக்கும். அப்படிப்பட்ட பார்வையையே நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கும் போது 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், 60 நிமிடங்கள் என மார்க்கப் பிரச்சாரத்தின் போது ஒரு ஆண் பல பெண்களைப் பார்க்க முடியுமா? பல பெண்கள் ஓர் ஆணைப் பார்க்க முடியுமா? இதற்கு யார் அனுமதி தந்தது?
இன்ஷா அல்லாஹ் தொடரும்…


நஸ்ரி ஜிப்ரி ஸலபி
11.06.2011

1 comments :