நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு மஹர்
கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின்
அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை
முழுக்க முழுக்க பின்பற்றி அல்லாஹ்(ஜல்)வின் அன்பையும் நேசத்தையும் பெற்ற
இமாம்கள், வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர், கைக்கூலி வாங்கி
மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை.
அப்படியானால் நம்முடைய முன்னோர்களில்
யாருமே செய்திராத, நமக்குக் காட்டித்தராக ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு
நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால், அது அந்நியருடைய
பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து
சகோதரர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. முன்காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி
தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை. ஆகவே திருமண
சமயத்தில் கைக்கூலியாகவும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க
வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் பழக்கமாகும்; ஆனால் தகப்பனுடைய
சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம்
தெளிவாகக் கூறியிருக்கும் போது, இக்கைக்கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற
வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய
சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி, இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால்
ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல. பல; அவைகளில் சிலவற்றை இங்கு
குறிப்பிடுவோம்.
ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின்
ஆண்கள் கையில்தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள்
சுறுசுறுப்புள்ளவர்களாகவும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும்,
ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில்
ஐயமில்லை. ஆனால் இக்கைக் கூலிப் பழக்கமானது நமது ஆண்வர்க்கத்தை முழுச்
சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. ஆண்களின் இளம்
பிராயத்திலேயே உழைக்க வேண்டும். பொருள் தேடவேண்டும் என்ற ஆர்வம் உண்டானால்
தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறுபிராயத்திலிருந்தே
பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம்.
பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும்
பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இன்று நடக்கும்
பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால், ஒரு வெட்கக் கேடான நிகழ்ச்சியைக்
கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண
செலவுக்காக வேண்டிய பணத்தையும், பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை
எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில், உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று
மார்தட்டிக் கொள்ளும் ஆண்கள், வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தனது
கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண்வீட்டார்
கைக்கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன்
பிறந்த மேனியைத் தவிர இதரவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால்
ஆனவைகளே. திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன்.
திருமணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடியாத
ஒன்று.
இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல்,
திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவள் கொண்டு வந்த நகைகளையும் விற்றுச்
சாப்பிட்டுவிட்டு, அவளை தாய்வீட்டுக்குத் துரத்தத் துணிந்துவிடுகிறான்.
அல்லது அவளது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை
விற்றுக் காலந்தள்ளுகிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால்
முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி, முஸ்லிம்
அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இக்கைக்கூலி
பழக்கம் நம் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமானால், நம் சமூகமே பிச்சைக்கார
சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். விதிவிலக்காக
ஒருசிலர் உழைக்க முன்வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில்,
விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடிவதில்லை;
இதற்குக் காரணம் உண்டு.
எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு
கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கைக்கூலி அதாவது பெண் வீட்டாரிடம்
கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசைவிட, மலத்தைச் சுமந்து கூலியாகப்
பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை
வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தியைக்
காணமுடியும்? அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை
அவன் வீணாக்குவதுமில்லை; அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து படைப்புகளிடம்
கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை. ஆகவே கைக்கூலிப் பிச்சை
வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ்(ஜல்) உருப்படச் செய்வதில்லை.
எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில்
நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில், கல்யாண
செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார முதலீட்டில் போய்ச் சேரும்.
அவ்வளவுதான்! அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும்
அழித்துவிடும். இப்படி ஒட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக்கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில்
தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதாரம் நிலை ஒருபோதும் உயரப்
போவதில்லை என்பது திண்ணம்.
அடுத்து கைக்கூலி பழக்கம் சமூகப் பண்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள கெடுதிகளைப் பார்ப்போம்.
சமூகப் பொருளாதார நிலை எப்படி ஆண்கள் கைகளில் தங்கி
இருக்கிறதோ, அதே போல் அச்சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள் பெண்களின்
கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது
ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக, கற்புடையவர்களாகத்
திகழ்கிறார்களோ, அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக
இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம், நம் சமூகப் பெண்களுக்கு
மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையும் சொல்லித்தான்
ஆக வேண்டும். திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் தங்கள்
கணவன்மார்களால் தங்கள் பிறந்தகங்களுக்கு விரட்டப்பட்டு வாழ்விழந்து வழி
தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும்,
குணமிருந்தும் எல்லாம் இருந்தும், பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம்
செய்து கொடுக்கப்படாது பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள்
அடைபட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான்
இருக்கிறோம். இப் பெண்களின் தவறு அவர்களுடைய குற்றமல்ல. சமுதாயத்திலுள்ள
ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும்.
ஒரு மனிதனை ஒரு அறையில் சில நாட்கள் அடைத்து வைத்துக்
கொண்டு, உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை
மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே
சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைபட்டுக்
கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை
அல்லாஹ்(ஜல்)வுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
அது மாத்திரமல்ல. அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பதுஆவிற்கும் ஆண்கள்
இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அநியாயம்
செய்யப்பட்டவர்களுடைய பதுஆவிற்கும் அல்லாஹ்வுக்கும்(ஜல்) இடையில் திரை
இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஆண்களால் அனியாயஞ்
செய்யப்பட்ட பெண்களின் அவர்களுடைய பெருமூச்சுகளினால் ஏற்படும் அழிவுகளை
இந்தக் கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களின் அவலநிலைகளை நோட்டமிடுபவர்கள்
சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக்
கேடுகளை நோக்கும்போது, அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன்
வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை
உயிரோடு புதைத்த கொடுஞ்செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல
வேண்டும் இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து
நீடிக்குமானால், கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம்,
நமக்குப் பிறக்கும் பொன் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக்
கொன்றுவிட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.
K.M.H
©2013, copyright Dharulhuda
0 comments :
Post a Comment