கலாநிதி முஹம்மத் முர்ஸி: சில அறிமுகக் குறிப்புகள்

.

Morsiஎகிப்தில் மே மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சேர்ந்த கலாநிதி முஹம்மத் முர்ஸி சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றார் எகிப்தின் புதிய அதிபர் மொஹமட் முர்ஸி கடந்த சனிக்கிழமை பதவியை பொறுப்பேற்றார்.  அவரைப்பற்றி சில குறிப்புக்கள் இதோ ........
 
கலாநிதி முஹம்மத் முர்ஸி இஹ்வான்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். அத்துடன் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் மக்தபுல் இர்ஷாத்என அழைக்கப்படும் உயர் வழிகாட்டல் சபையின் அங்கத்தவராகவும் இருந்தவர்.
அரசியல் கட்சி உருவாக்கப் பட்ட பின்னர், முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காக இயக்கத்தின் வேண்டுகோளின் பெயரில் மக்தபுல் இர்ஷாதிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இயக்கத்தின் முன்னணி அரசியல் தலைவர்களுள் ஒருவராகவும் இவர் காணப்படுகிறார். கடந்த தசாப்தத்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் இவர் முக்கிய பங்கெடுத்தார்.
2000-2005 வரையான காலப் பகுதியில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் கலாநிதி முர்ஸி செயற்பட்டார். அத்துடன் ஸகாஸிக் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் சடப்பொருள் விஞ்ஞான (–Material Science) துறையின் தலைவராகப் பணி யாற்றினார்.
அவரது முழுப்பெயர் முஹம்மத் முஹம்மத் முர்ஸி ஈஸா அய்யாத். 1951 ஓகஸ்டில் எகிப்தின் கிழக்கு மாகாணமான ஷர் கிய்யாவில் அவர் பிறந்தார்.
1975 இல் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 1978 இல் பொறியியல் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1982 இல் அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
கெய்ரோ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தென் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் ஆசிரிய உதவியாளராகவும் அவர் பணியாற்றினார். அத்துடன் 1982 தொடக்கம் 1985 வரை கலிபோர்னியாவிலுள்ள நோர்த் ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் அவர் பணிபுரிந்தார்.
பின்னர் எகிப்திலுள்ள ஸகாஸிக் பல்கலைக்கழகத்தில் 1985 தொடக்கம் 2010 வரை பல பொறுப்புகளை வகித்துள்ளார். அங்கு பேராசிரியராகவும் சடப்பொருள் பொறியியல்துறை தலைவராகவும் விளங்கினார். ஸகாஸிக் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திலும் அவர் அங்கம் வகித்தார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளினது சர்வதேச மாநாட்டில் அவர் அங்கம் வகித்தார். சியோனிஸத்தை எதிர்க்கும் எகிப்திய திட்டக் குழுவின் ஸ்தாபக அங்கத்தவராகவும் விளங்குகிறார்.
கலாநிதி முர்ஸி கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர் பணியாற்றிய பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்போடு செயற் பட்டு, சிறந்து விளங்கினார். சிறந்த அரசியல் தலைவரான அவர், தனது ஆற்றல்களையும் திறன்களையும் நடைமுறையில் நிரூபித்தார்.
நடைமுறை உற்பத்தித் தீர்வுகள் தொடர்பாக, எகிப்திய கைத்தொழில் துறையில் அவர் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். உலோக மேற்பரப்பு செயற்பாடு தொடர்பான பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார். இது தொழிற் துறைகளில் செய்யப் படும் ஒரு விஞ்ஞானக் கணிப்பாகும். 80 களின் ஆரம்பத்தில் விண்கல என்ஜின் உருவாக்கம் தொடர்பாக அமெரிக்காவிலுள்ள நாஸாவில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தபோதே இந்தக் கணிப்பில் ஈடுபட்டார்.
எகிப்திய மக்களால் தூக்கி வீசப்பட்ட அரசாங்கத்தின் ஆக்கி ரமிப்பு நடவடிக்கைகள், கொடுங்கோன்மைக்கு எதிராக உறுதியாக செயல்பட்டதன் காரணமாக, கலாநிதி முர்ஸி பலமுறை கைது செய்யப்பட்டார்.
2005 தேர்தல் முறைகேட் டுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளானபோது, அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலாநிதி முர்ஸி முக்கிய பங்கெடுத்தார். அவர் நீதிபதிகளின் சுதந்திரத்தை ஆதரித்து செயற்பட்டார். தேர்தல் ஊழல்கள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசிய நீதிபதிகளைத் தண்டிப்பதையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.
2006 மே 18 ஆம் திகதி காலை கலாநிதி முர்ஸி மக்கள் விரோத இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டார். மத்திய கெய்ரோவிலுள்ள அல்ஜலாஹ் நீதிமன்ற தொகுதிக்கு முன்னேயும், வட கெய்ரோ நீதிமன்றத்திற்கு முன்னேயும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது அவர் உட்பட 500 இஹ்வான்கள் கைதுசெய்யப்பட்டனர். கலாநிதி முர்ஸி ஏழு மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்.
அவர் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஜனவரி 28, 2011 அன்று கோபத்திற்குரிய வெள்ளிக்கிழமைகாலை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன் பெருந் தொகையான இஹ்வான்களும் கைதுசெய்யப்பட்டனர். எகிப்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் இஹ்வான்களைக் கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும்.
புரட்சியின்போது சிறைகள் உடைக்கப்பட்டு, கைதிகள் பலர் தப்பினர். இதன்போது கலாநிதி முர்ஸி தனது சிறைக்கூடத்திலிருந்து வெளியேற மறுத்தார். அங்கிருந்தவாறு செய்மதி தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேவைகளை தொடர்புகொண்ட அவர், நீதித்துறை அதிகாரிகளை சிறைக்கு வந்து, கைதுசெய்யப்பட்ட இஹ்வான் தலைவர்களது சட்டநிலை தொடர்பாக ஆராயுமாறு வேண்டினார்.
அவர்களது கைதுக்கு ஏதேனும் சட்டரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்த பின்பே அவர்கள் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. ஏனெனில், அப்போது எந்தவொரு நீதித்துறை அதிகாரியும் அங்கிருக்கவில்லை.
கலாநிதி முர்ஸிக்கு இழைக் கப்பட்ட அநீதி அவரோடு மட்டும் நிற்கவில்லை. அவரது குடும்பத்தினரும் அதனால் பாதிக்கப்பட்டனர். அவரது மகன் கலாநிதி அஹ்மத், 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனது தந்தையின் நியமனம் அறிவிக்கப்படவுடன் கைதுசெய்யப்பட்டார். தனது தந்தை எகிப்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அஹ்மத் மூன்று தடவைகள் கைதுசெய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் ஆற்றிய சிறந்த அரசியல் பணியின் பின்னர், இஹ்வான்களது ஷூறா சபையின் அங்கத்த வராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் இயக்கத்தின் வழிகாட்டல் சபையின் அங்கத்த வராகவும் அவர் தெரிவானார்.
ஜனவரி 25 புரட்சிக்குப் பின்னர் இஹ்வான்களது ஷூறா சபையினால், புதிதாக உருவாக்கப்பட்ட சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராக அவர் தெரிவுசெய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டு எகிப்திய பாராளுமன்றத்தில் கலாநிதி முர்ஸி இஹ்வான்களது பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வாக்குமிக்க, முக்கிய பாத்திரத்தை வகித்தார்.
அப்போதைய பாராளுமன்றத்தில் செயற்திறனுள்ள மிகச் சிறந்த அங்கத்தவராகவும்
அவர் விளங்கினார். 2000 தொடக்கம் 2005 காலத்தில் அவரது பாராளுமன்ற செயற்திறன் காரணமாக, மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாக சர்வதேச ரீதியாக அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
2005 பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின்போது கலாநிதி முர்ஸி, தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விடவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றார். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தபோது அவரது போட்டி வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கலாநிதி முர்ஸி இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் பிரிவில் முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அத்துடன் அந்தப் பிரிவின் மேற்பார்வையாளராகவும் (முஷ்ரிப்) இருந்தவர். 2004 இல் இயக்கம் முன்னெடுத்த சீர்திருத்த முனைப்பின்போதும், 2007 இல் வெளியிட்ட அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின்போதும் இயக்கத்தின் அரசியல் பிரிவு முக்கிய பங்கு வகித்தது. 2010 பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவதில் அவர் முன்னணியில் இயங்கினார்.


thanks to meelpaarvai.net

0 comments :

Post a Comment