Sawthul Furqan: தொழிலில் உள்ள அக்கறை தொழுகையில் உள்ளதா?

.
Sawthul Furqan: தொழிலில் உள்ள அக்கறை தொழுகையில் உள்ளதா?:

இலங்கை மண்ணில் எத்தனையோ முஸ்லிம் ஊர்கள் உள்ளன. இவ்வூர்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், தொழிற்சாலைகள் என வருமானத்தை ஈட்டித் தரும் இடங்கள் உள்ளன. இதே ஊர்களில் ஐவேளைத் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில் புரியும் இவர்களிடம் உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று தொழும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் வெள்ளிக் கிழமை தினங்களிலும் கடைசி நேரத்தில் தான் வந்து சேருகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக தொழுகை விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.” (4:103)

எமது சமூகத்தில் உள்ளவர்களில் உரிய நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்கள் எத்தனை பேர்? தொழுகைக்காக அதான் கூறப்பட்டால் அதானுக்கு பதில் கூறி, அதானுக்குப் பின்னால் நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதுபவர்கள் எத்தனை பேர்? ‘தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்’, ‘வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டதும் கடைகளை மூடிவிட்டு பள்ளிக்கு விரைபவர்கள் எத்தனை பேர்?
தொழுகை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை அல்லவா? தொழுவதற்குரிய நேரத்தை ஊழியர்களுக்கு வழங்குவது, கடை உரிமையாளர்களின் பொறுப்பு அல்லவா?

அல்லாஹ்வுக்கு சுஜூத் செய்வதற்கு இம்மையில் போன்றே மறுமையிலும் மனிதர்கள் அழைக்கப்படுவர். இம்மையின் அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள், மறுமையின் அழைப்புக்கு பதிலளிக்கவும் சுஜூது செய்யவும் சக்தி பெற மாட்டார்கள் என்பதை பின்வரும் குர்ஆனிய வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:
கெண்டைக்காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் அவர்களோ சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர். ஆனால், அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.
அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவைகளாக இருக்கின்ற நிலையில் இழிவு அவர்களை சூழ்ந்து கொள்ளும். (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம்பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்படுபவர்களாக இருந்தனர்.” (68:42,43)


இந்நாடு முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடாக இருந்தும் கூட சுதந்திரமாக அல்லாஹ்வுக்கு சுஜூத் செய்ய இடம் தரப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத ஊர்களிலும் தொழுகையை நிறைவேற்ற அரசாங்கம் அங்கீகாரம் தந்துள்ளது. நிச்சயம் அல்லாஹ் இந்த அருட்கொடை பற்றியும் நம்மிடம் வினவாமல் விட மாட்டான் என்பதை மறந்து விடக் கூடாது.

பணம், பணம் என்று பணத்திலேயே நோக்கம் உள்ளவர்கள் தன் மரணத்தைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளனர். இம்மைக்காக சம்பாதித்தவை மரணத்தோடு முடிவடைந்து விடும். ஆனால், மறுமைக்காக சம்பாதிப்பவை மரணத்திற்கு பின்னாலும் நம்மோடு வரும்.
நாம் நமது தாயின் வயிற்றில் இருக்கும் போதே நமது ‘ரிஸ்கை’ அல்லாஹ் எழுதி விட்டான். அவன் தர இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுப்பதை யாராலும் தரவும் முடியாது.

எனவே, பணத்தின் பக்கம் நெருங்குவதை விட பணத்தை தருகின்ற அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவோம். தொழிலை விட தொழுகையில் அக்கறை காட்டுவோம்.
அல்லாஹ்வின் பேரருளால் சில நல்ல மனிதர்கள் அதான் சொன்னவுடன் கடைகளை அடைத்து விட்டு பள்ளிக்கு விரைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் ‘CLOSED FOR PRAYER’  ‘தொழுகைக்காக மூடப்பட்டுள்ளது’ என போட் போடுகின்றனர். இவர்களது தொழிலில் அல்லாஹ் மெம்மேலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக!

இப்படியானவர்களின் ஈமான் நிச்சயம் உயரத்தில் தான் இருக்கிறது. இவ்வாறான நல்ல மனிதர்களாக நாமும் மாற வேண்டும். பிறரையும் மாற்ற வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
 ‘நிச்சயமாக அல்லாஹ் எந்தவொரு சமுதாயத்திற்குரியதையும் அவர்கள் தங்களுக்குரியதை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ் (அதனை) மாற்றுவதில்லை.” (13:11)

நஸ்ரி ஜிப்ரி (ஸலபி), திஹாரிய.
njsrilanki@yahoo.com

0 comments :

Post a Comment