சிரியா மீது அவதானத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் சிவில் யுத்தம் உருவாகுவதைத் தடுக்க முடியாது

.



Mideast-Syriaசிரியாவில் முன்னெடுக்கப்படும் அமைதி செயற்பாடு அங்கு சிவில் யுத்தத்தை தவிர்க்கும் கடைசி முயற்சி என ஐ. நா. மற்றும் அரபு லீக் விசேட தூதுவர் கொபி அனான் பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளித்துள்ளார்.
பாதுகாப்புச் சபையின் நிறைவு கூட்டத் தொடரின் போது சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் இருந்து கொபி அனான் சிரியா விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அதில் சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெறுவதாக அனான் குறிப்பிட்டார். எனினும் சிரிய இராணுவம் தற்போது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை குறைத்திருப்பதாக அவர் கூறினார்.

சிரியாவில் நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 27 மில்லியன் டொலர்களை செஞ்சிலுவை சங்கம் கோரியுள்ள நிலையிலேயே அனானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் இயங்கும் ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம், சிரியாவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோர் மனிதாபிமான உதவிகளை வேண்டிநிற்பதாக அறிவித்துள்ளது.

இதில் சிரியாவில் தீவிரமடைந்திருக்கும் துன்புறுத்தல்கள், கைதி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாக கொபி அனான் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்துவது ஜனாதிபதி பஷர் அல் அஸதின் கையில்தான் இருக்கிறது என்று பாதுகாப்புச் சபையை அறிவுறுத்தினார்.

பாதுகாப்புச் சபை உரைக்கு பின்னர் நடந்த ஊடக மாநாட்டில் கருத்துக்கூறிய கொபி அனான், யுத்த நிறுத்த கண்காணிப்பு செயற்பாடே சிரியாவில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் ஒரே வாய்ப்பு என்று கூறினார். சிரியா தொடர்பில் நாம் ஆழ்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அங்கு சிவில் யுத்தம் ஒன்று உருவாவதை தவிர்க்க முடியாமல் போகும். அவ்வாறு நிகழ நாம் இடமளிக்க மாட்டோம்’’ என்ற அனான் குறிப்பிட்டார்.

சிரியாவில் வன்முறைகளை நிறுத்தும் அனானின் 6 அம்ச அமைதி முயற்சிக்கு அனைத்து தரப்பும் ஒரு மாதத்திற்கு முன்னர் இணக்கம் வெளியிட்டன. இதன்படி அங்கு 300 ஐ. நா. கண்காணிப்பாளர்களை நிலைநிறுத்த ஏற்பாடாகியுள்ளது. எனினும் அங்கு வன்முறைகளை நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்து வருகிறது.

இதனிடையே சிரியாவின் ஒரு சில பகுதிகளில் தற்காலிக அமைதி நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் முடிவுக்கு வரவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொபி அனானின் அமைதி முயற்சி சிரியாவில் வெற்றியளித்துள்ளதா என்பது குறித்து செஞ்சிலுவை சங்க தலைவர் ஜகப் கெல்லன்பெர்கர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எனினும் செஞ்சிலுவை சங்கத்துக்கு அங்குள்ள அலப்போ சிறைக்கு செல்ல அனுமதித்தது சிரிய நிர்வாகத்தின் சாதகமான செயற்பாடு என அந்த அமைப்பு கூறியுள்ளது. எனினும் சிரியாவில் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கைது செய்யப்பட்டவர் தொகை குறித்த தெளிவான தகவல் இல்லை.
ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருப்பதாகவும் பெரும்பாலானோருக்கு தனது குடும்பத்தினரை பார்க்கவும் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

thanks to meelpaarvai

0 comments :

Post a Comment