மெலளவி எஸ்.எல். நவ்பர் அவர்கள் மாவனல்லை தல்கஸ்பிடியைச் சேர்ந்தவர். 1988ம் ஆண்டு கபூரிய்யா அறபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறினார். 1989ம்
ஆண்டு சவூதி மலிக் ஸுஊத் பல்கலைக்கழகத்தில் அறபுத்துறையில் விஷேட பட்டம்
பெற்றதோடு ஆசிரியர்களுக்கான அறபுப் பயிற்சி கற்கைநெறியையும் பூர்த்தி
செய்தார். 1993ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை சவூதி அறேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் தமிழ் பிரிவிற்கும் தஃவா பிரிவிற்கும் பொறுப்பாக இருந்து கடமையாற்றினார்.
1999ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து ஐஐகீˆ நிறுவனத்தின் பணிப்பாளராக 2010ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2010ம்
ஆண்டு முதல் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப பொருளாளராகவும் செயற்பட்டு
வருகிறார். மௌலவி நவ்பர் அவர்கள் இஸ்லாமிய தஃவா துறையிலும் சமூக சேவையிலும்
மிகுந்த அனுபவம் கொண்டவர். அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை
வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்பு : இன்ஸாப் ஸலாஹுதீன்
* நீங்கள் தற்பொழுது பணியாற்றுகின்ற நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட முடியுமா?
நிதாஉல்
ஹைர் நிறுவனம் சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு நிறுவனமாகும்.
இது பொதுநல சேவைகளை முன்னிறுத்திச் செய்யக்கூடிய ஒரு அமைப்பாகும்.
அதேநேரம் கல்விக்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொள்கின்றது. எல்லா
அமைப்புக்களையும் இணைத்து செயற்படுவதற்கு ஒரு பொது நிறுவனம் வேண்டும் என்ற
அடிப்படையில் நிதாஉல் ஹைர் அமைப்பின் ஒரு கிளையாக இலங்கையில் இந்த நிறுவனம்
2008 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பாரிய பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். சுமார் 50ற்கும் மேற்பட்ட மஸ்ஜித்களைக் கட்டி முடித்திருக்கின்றோம். இன்னும் 10 மஸ்ஜித்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று 800 ற்கும் மேற்பட்ட தண்ணீர் கிணறுகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சுமார் 230
ற்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கிவருகிறோம்.
கல்வியைப் பொறுத்தவரையில் அறபு மத்ரஸாக்களின் தரத்தை உயர்த்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உலமாக்களுக்கான 15 இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறோம்.
மேலும் மத்ரஸாக்களின் நிரந்தர வருமானத்திற்காக பேக்கரிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். நிதாஉல் ஹைர் நிறுவனம் World Cultural Centre for Development and Training என்ற பிரிவை கல்விக்காக ஆரம்பித்திருக்கின்றது.
* சமூக சேவையில் அதிக அனுபவம் கொண்டவர் என்ற வகையில் எமது சமூகத்தில் பொதுநல சேவைகளுக்கான தேவைப்பாடு எப்படி இருக்கின்றது?
சமூக
சேவையில் ஈடுபடுவது என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு பாக்கியம்
எனக்கருதுகின்றேன். அதில் ஈடுபடுகின்றவர்கள் தூய்மையோடும் சுயநலமில்லாமலும்
ஈடுபட வேண்டும். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில்
சமூக சேவையின் தேவை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. வட மாகாண
முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு சகல அமைப்புகளும் ஒத்துழைத்து
அவர்களை மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வைப்பது ஒரு முக்கிய கடமையாகும்.
மற்றது, கொழும்பின்
சேரிப்பகுதிகளில் வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக
இருக்கின்றது. கிராமப் புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் வசதி
வாய்ப்புக் களைக் கூட கொழும்பின் சேரிப் புறங்களில் வசிக்கும் முஸ்லிம்கள்
அனுபவிப்பதில்லை. எல்லா நிறுவனங்களும் கொழும்பில் இருக்கின்றன. ஆனால்
கொழும்பு முஸ்லிம்கள் அவற்றால் பயன் பெறுகிறார்களா என்பது
கேள்விக்குறிதான். எனவே, இந்த விடயம் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
அதேபோன்று
எமது உலமாக்களின் விடயத்திலும் நாம் பொதுப் பணி செய்ய வேண்டிய நிலையில்
இருக்கிறோம். அவர்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத் தொழில்களிலும் ஏனைய
நிறுவனங்களிலும் இருக்கின்றனர்.
மற்றொரு
பிரிவினர் மத்ரஸாக்களிலும் பள்ளிவாயல்களிலும் இருக்கின்றனர். இவர்களை சமூக
ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உயர்வடையச் செய்வது இந்த நாட்டில்
இருக்கக்கூடிய அமைப்புக்களின் பொறுப்பு என நான் கருதுகிறேன்.
அதேபோன்று அனாதைகள், விதவைகளின்
தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும். உதவி செய்யக்கூடிய நிறுவனங்களும்
அவர்களுக்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர். ஆனால் அது
ஒழுங்குபடுத்தப்படுகின்றதா, வழிகாட்டப்படுகின்றதா என்பதும் கேள்விதான்.
* பொதுப் பணிகளில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கிடையிலான பொது இணைப்பு பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அழகான
ஒரு கேள்வி. உண்மையில் சர்வதேச நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும்
இந்த நாட்டிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்றுபட்டால் பணிகளை
விசாலமாகவும் அழகாகவும் திட்டமிட்டுச் செய்யலாம். ஒவ்வொரு பகுதியையும்
ஒவ்வொரு நிறுவனம் பொறுப்பெடுத்தாலும் கூட பணிகளைப் பூரணமாகச் செய்ய
முடியும். நாங்கள் அத்தகையதொரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். எனவே
வருடத்தில் ஒரு தடவையாவது எல்லா நிறுவனங்களும் தமது வேறுபாடுகளை ஒரு
பக்கத்தில் வைத்துவிட்டு பொதுப்பணியில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய ஒரு
கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
* எமது நாட்டைப் பொறுத்த வரை பல இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்குகின்றன. அவற்றின் பணி எவ்வாறு அமைய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
உண்மையில்
இங்கு பல அமைப்புக்களில் தஃவாப் பணியிலே ஈடுபடுகின்றனர். ஏனைய நாடுகளுடன்
ஒப்பிடும் போது ஒரு ஆரோக்கியமான சூழலைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.
அத்தோடு தஃவாவில் ஈடுபடுகின்றவர்கள் ஒவ்வொருவரும் ‘சுவர்க்கத்தின் டிக்கட் எனது பொக்கட்டில் தான் இருக்கிறது’ என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிலே இஹ்லாஸ் இருக்க வேண்டும். அதனை அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.
அடுத்த
சகோதரர்கள் செய்யக்கூடிய பணியை எங்களால் செய்ய முடியாமல் இருக்கலாம்.
அதனைச் செய்யும் அவர்களை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். மற்றது, கொள்கையில்
சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட அவற்றை ஆரோக்கியமான
வார்த்தைகளைக் கொண்டுதான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நரகவாதிகள்
என்றோ, இவர்கள் பாவிகள் என்றோ விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.
மற்றது, தஃவாவில்
ஈடுபடக்கூடிய எல்லோரும் மற்ற மதத்வர்களுக்கு இஸ்லாம் குறித்துச் சொல்ல
முன்வர வேண்டும். மேலும் பெண்களுக்கான தஃவாவும் முன்னிலைப்படுத்தப்பட
வேண்டும். மற்றது, இயக்கங்கள்
மஸ்ஜித்களை மையமாக வைத்து பணியாற்றும்போது நிதானமாகவும் நடுநிலை யோடும்
தூரநோக்குடனும் பணியாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.
* உங்களது பார்வையில் எமது சமூகத்தில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பணியாக எதனைக் கருதுகிறீர்கள்?
எமது
சமூகத்திற்குப் பல தேவைகள் இருந்தாலும் கல்வி ரீதியாக சமூகத்தை உயர்த்தி
வைப்பதுதான் எமது முதன்மைப் பணி என நான் நினைக்கிறேன். எமது பாடசாலைகளில்
நிறையத்தேவைகள் இருக்கின்றன. அரசாங்கம்தான் அவற்றையெல்லாம் செய்ய வேண்டும்
என்பதை ஒருபுறம் வைக்க வேண்டும். தங்களுடைய ஸதகாக்களை, வக்புகளை
அறபு மத்ரஸாக்களுக்கும் மஸ்ஜித்களுக்கும் கொடுத்தால்தான் நன்மை என்று
மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார் கள். அரசாங்கப் பாடசாலைகளுக்குக்
கொடுப்பதும் வக்பு தான் என்பதை சமூகத்திற்கு விளங்கப்படுத்த வேண்டும்.
எனவே, கல்வி ரீதியாக சமூகத்தை உயர்த்திவிட முடியுமென்றால் ஏனைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது தீர்வாக அமைய முடியும் என நான் கருதுகிறேன்.
Thanks to meelpaarvai.net
Thanks to meelpaarvai.net
0 comments :
Post a Comment