புரோகிதமும்-பொருளாதாரமும்

.
புரோகிதமும்-பொருளாதாரமும்  

உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அதனால் தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர்.
பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதர்களை உயர்வானவர், தாழ்வானவர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒருவர் பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினார், சரியான வழியிலா? தவறான வழியிலா? என்று பார்க்கப்படுவதில்லை. ஒருவரிடம் எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது என்று மட்டுமே பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தைப் பெற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மக்கள் சுகபோகமாக வாழ பலர் பல வழிகளை நாடுகிறார்கள். நியாயமான முறையில் பல தொழில்கள், வியாபாரங்கள், வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதாரத்தைப் பெற்று நல்ல முறையில் வாழ்கிறார்கள்.
அதேபோல் தான் இஸ்லாமியர்கள் மத்தியில் சிலர், இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்று அந்த மார்க்கத்தை தனது வியாபாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அரபி மதரஸாக்களுக்கு செல்லக்கூடிய மாணவர்களில் பலர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். தந்தையில்லாதவர்கள், தாய் இல்லாதவர்கள், அதிகமான குறும்பு செய்பவர்கள், படிப்பில் விருப்பமில்லாதவர்கள் தான் மதரஸாக்களில் சேர்க்கப்படுகிறார்கள். சொற்பமானவர்கள் அதிகமான ஆண் மக்களைப் பெற்றவர்கள், நான் எனது மகன்களில் ஒருவனை ஆலிமாக ஆக்குவேன் என்று விரும்பி மதரஸாவிற்கு அனுப்புகிறவர்களும் உண்டு.
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் பலர், படிக்கும் போதே தனது திறமையை வெளிப்படுத்தி (துஆ-மவ்லிது ஓதுவதன் மூலம்) பணம் சம்பாதித்தும் மக்கள் அளிக்கின்ற பல் வேறு சுவைகளில் உணவும் சாப்பிட்டு, மார்க்கத்தை கற்றும் வருகிறார்கள். இதன் காரணமாக இந்த மதரஸா மாணவர்கள் உடல் உழைப்பின் மூலம் பொருளாதாரத்தை திரட்டாமல் உழைத்துச் சாப்பிடுவது தான் நபிவழி என்பதையும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். அவ்வாறு அல்குர்ஆனை மனனமிட்டவர் ரமழானில் இரவு தொழுகைக்கு சென்று விடுவார். ஆலிம் பட்டம் வாங்கியவர் ஏதாவது ஒரு பள்ளியில் இமாமாக தனது பணியை தொடங்குவார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யாராவது இமாம் என்று நியமிக்கப்பட்டு ஊதியம் கொடுக்கப்பட்டார்களா? நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வாறு செயல்படுவதற்கு ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நாம் இதுபோன்ற ஊதியத்திற்கு வேலை பார்ப்பதை நிறுத்த வேண்டும். மார்க்கக் கல்வி கற்றவர்கள், மார்க்க சட்ட நுணுக்கத்தை அறிந்தவர்கள் நபி(ஸல்) அவர்களின் வாரிசுகள் என சொல்லிக் கொள்கிறார்கள்-தவறில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார்களோ, அதே போல் முத்தவல்லிக்கு அஞ்சாமல், ஊர் மக்களுக்கு அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்பவரே நபி(ஸல்) அவர்கள் வாரிசுகளாவார். மார்க்கத்தில் இல்லாத புதிய சடங்குகள் தன் கண் முன்னே நடப்பதை கண்டும் காணாமல் இருப்பவர் புரோகிதர்!
மதரஸாக்களில் ஓதிய அனைவரும் பள்ளியில் இமாமாகத் தான் ஆக வேண்டுமா?
சிறந்த ஊர், சிறந்த பள்ளிவாசல் எது என்று பார்த்து அந்த ஊரிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமா? தீனுல் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
மதரஸாக்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் பள்ளிவாசலில் இமாமாக பணி புரிபவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அதை அவர்கள் உணர்வதில்லை.
* எந்த நேரமும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
* மார்க்க சட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாது.
* சில ஊர்களில் வீடு வீடாக சென்று சாப்பிட வேண்டும்.
*மார்க்க அறிவில்லாத முட்டாள் முத்தவல்லிகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.
* அதிகப்படியான செலவுகள் வந்துவிட்டால், நோய், திருமணம் போன்ற செலவுகளுக்கு கையேந்த வேண்டும்.
* வயோதிக காலத்தில் உதவ யாருமில்லாத நிலை ஏற்படும்.
* வரதட்சிணை, வட்டி, விபச்சாரம் போன்றவற்றை எதிர்க்க முடியாது.
பள்ளியில் இமாமாக இருப்பவர்களின் பரிதாப நிலை இது.
சிலர் கிராமங்களில் பணிபுரிந்து அங்கேயே தன்னுடைய வாழ்க்கையை போக்குபவர்கள். ஒருசிலர் நகரங்களிலும், மாநகரங்களிலும் தனது வாய்ச் சாமர்த்தியத்தைக் கொண்டு சுகபோகமாக வாழ்பவர்களும், தானே ஒரு அரபிக்கல்லூரியை உருவாக்கி தானே ராஜா தானே மந்திரியாக இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று தன்னுடைய வார்த்தை சாமர்த்தியத்தின் மூலம் கொள்ளை வசூல் செய்பவர்களும் இவர்களில் உண்டு. பெரும்பாலான மௌலவிகள், புரோகிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். பொருளாதாரத்திற்காக சடங்குகளை கண்டு கொள்ளாதவர்களே அதிகம்! இவர்களிடம் இருப்பது கூட்டு துஆ மட்டுமே. இந்தக் கூட்டு துஆக்களுக்கு மட்டுமே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். திருமணம், இறப்பு, படிப்பு, மற்ற சடங்குகளை மக்கள் தாங்களே செய்து கொண்டு இமாம்களைப் பொறுப்பாளியாக்குகிறார்கள் என்பதே உண்மை.
நாம் ஒரு முடிவு செய்து வைத்துள்ளோம். ஆலிம்சா என்ற ஒரு நபர் மிகவும் புனிதமான வர். அவர் மட்டுமே மார்க்க சட்டங்களை கடை பிடிக்க வேண்டும். அவர் மட்டுமே தாடி வைக்க வேண்டும். அவர் மட்டுமே ஜிப்பா அணிய வேண்டும். அவர் மட்டும் தலைப் பாகைக் கட்ட வேண்டும். அவர் மட்டுமே தொப்பி அணிய வேண்டும். அவர் பேண்ட் அணியக் கூடாது. அவர் நம்மைப் போல் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. நாம் வட்டி வாங்கலாம், விபச்சாரம் செய்யலாம், அநாச்சாரங்களில் ஈடுபடலாம். மது அருந்தலாம், மீசை பெரிதாக வைக்கலாம், சேவிங் செய்து கொள்ளலாம், நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆலிம்சா மட்டும் எந்தத் தவறும் செய்யாமல் வாழ வேண்டும்.
நம்மை அவர் கண்டு கொள்ளாதவரை நாம் அவருக்கு பொருளாதாரத்தை அள்ளித் தருவதும், சுவையான, உயர்தரமான உணவுகளை அளிப்பது போன்றவைகளைச் செய்து வருகிறோம். எனவே தான் அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் மிகவும் மரியாதைக்குரியவர்களாக இருந்தும், சத்தியத்தைச் சொன்னால் எங்கே தமது மரியாதை போய்விடுமோ பிறகு நாம் உழைத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்று பயந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் பொருளாதாரமே. பணம் கொடுக்காமல் மௌலூதுகளோ, பாத்திஹாக்களோ ஓதச் சொன்னால் நிச்சயமாக ஓதமாட்டார்கள். அவர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால், விழித்துக் கொண்டால், புரோகிதத்தை முற்றிலும் ஒழிக்கலாம். அவர்கள் செய்யக்டிய அனைத்திற்கும் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து பின்பற்றாத நாம் தான் காரணம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கி வாழ்ந்தோமேயானால் இது போன்ற புரோகிதர்கள் உருவாக மாட்டார்கள். வஸ்ஸலாம்.
S.முஹம்மது ரபீக், பழனி.

0 comments :

Post a Comment