Wednesday, March 28, 2012

போற்றுதலுக்குரியவர்கள் யார்?

போற்றுதலுக்குரியவர்கள் யார்?

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக” உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)
சோதனை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்“எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்” (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)
தியாக பெருமக்கள்
இத்தைகைய இக்கட்டான சூல் நிலையில்தான் ஒரு கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றால் தங்கள் உயிரே பறிக்கப்படலாம், தங்கள் குடும்பம் சின்னா பின்னப்படுத்தப் படலாம் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிந்திருந்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக இரு கால்களும் இரண்டு ஒட்ட்கங்களில் பிணைக்கப்பட்டு, இருவேறு திசைகளில் அந்த ஒட்டகங்கள் விரட்டப்பட்டு இருகூறாக கிழிக்கப்பட்டனர். கடும் மணலில் கிடத்தப்பட்டு, பெரும் பாறைகளை அவர்களின் நெஞ்சங்கள் மீது வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டவர்களூம் உண்டு. பெண் என்று பாராமல், மர்ம ஸ்தானத்தில் அம்பெய்து படுகொலை செய்யப்பட்ட பெண்களும் இருந்தனர். தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.
சொந்த நாட்டிலிருந்து வெறுங்கையுடன் விரட்டி அடிக்கப்பட்டனர். அகதிகளாகச் சென்றவர்கள் மதினாவில் நிம்மதியாக இருப்பதைப் பொறுக்க முடியாமல் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தபோது, தீனுல் இஸ்லாம் இந்த உலக மக்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பயண வசதியற்ற காலத்திலேயே கடும் பயணம் மேற்கொண்டனர். மொழி தெரியாத நாடுகளுக்குச் சென்றனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டிய வழியில் நடந்து காட்டி உலகில் இஸ்லாமிய பேரொளியை பாய்ச்சினர். அவர்களின் தியாகங்கள் சொல்லி முடியாது.
ஒவ்வொருவருடைய வரலாறும் ஒரு வீர காவியம். தியாகத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். சமீபகாலமாக இந்தத் தியாகத் தோழர்களின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. உஹது மலையளவு செலவு செய்தாலும், எவராலும் ஸஹாபக்களின் மதிப்பில் பாதியளவைக்கூட அடைய முடியாது என்று நபிகள்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க அவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றியவர்களுக்கு ஆலிம்களே அதிக முக்கியத்துவம் தருவது வியப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் உள்ளது.
இந்த உம்மத்தில் (சமுதாயத்தில்) மிகச் சிறந்தவர்களாகிய ஸஹாபாக்களின் வரலாறுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை விட, இறை நேசர்கள் என்று இவர்களாகவே முத்திரைக் குத்திகொண்ட சிலரின் வரலாறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் சில அறிஞர்கள் காட்டும் அக்கறை விந்தையாகவே உள்ளது.
ஒரு ஆலிம் தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு”முஹ்யித்தீனே கைப்பிடியுங்கள்”என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம். “உலகத்து மாந்தரின் ஈமானை இன்னொரு தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை இன்னொரு தட்டிலும் வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்” என்ற நபி மொழி கூட இவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்?
இறந்து போன யாரையும் அழைத்து உதவி தேடலாகாது என்பது ஒருபுறமிருக்க, அப்படி அழைத்துக் கையைக் பிடிக்கச் சொல்பவர்கள் மனதில் இப்றாஹீம் (அலை) போன்ற உயர்ந்த நபிமார்கள் நினைவுக்கு வராமல் போனது ஏன்? மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வேண்டியவர்கள் மக்களிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக்கொள்கின்றனர். மக்கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ அதற்கொப்ப தங்கள் கருத்துக்களையும் அமைத்துக் கொள்கின்றனர். அந்தோ! பரிதாபம்!
அவ்லியாக்கள் என்று சிலரை அவர்கள் பெயரால் முனாஜாத்துகள்,கிஸ்ஸாக்கள், மவ்லிதுகள் எழுதி மக்களிடம் பரப்பி வருவதின் நோக்கம் என்ன? அவர்களின் மீது கொண்ட பற்றோ, பாசமோ அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியானால் உண்மையான காரணம் என்ன?
தாங்கள் செய்கின்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு இவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையோ, ஸஹாபாக்களின் வாழ்க்கையையோ ஆதாரங்காட்ட முடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒன்றை இட்டுக்கட்டிக் கூற இயலாத அளவுக்கு அது அன்றைய நல்லவர்களால் பாதுகாக்கப்பட்டுவிட்டது. இல்லாததைச் சொல்லி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த வரலாறுகள் அல்லாஹ்வின் அருளால் இன்று வரை பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன. கியாமத் நாள் வரைக்கும் அது பாதுகாக்கப்பட்டே இருக்கும்.
இதனால் தான், மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கிக்கொண்டே ஒரு சிலர் மீது தனி கவர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மீது மக்களை பக்தி கொள்ளச் செய்து, அவர்கள் பெயரால் இந்த வியாபாரத்தை நன்றாக நடத்திக்கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய ஷரீஅத்துக்கு புறம்பாக அந்த மகான்கள் நடந்ததாக எழுதப்பட்டுள்ளதே! பேசப்படுகின்றதே! அவர்கள் அவ்லியாக்களாக இருப்பின் அப்படி நடந்திருக்க மாட்டார்களே! என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்பதில்லை. மக்களூக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகளை குர்ஆனை, ஹதீஸை, சஹாபாக்களின் வரலாறுகளை தெளிவு படுத்தாத வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும். அல்லாஹ் இந்த நிலையிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்.
இப்னுஎஹ்யா

Wednesday, March 28, 2012

இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?

இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?  


இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)
அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. (98:5)
அல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (27:62)
பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)
 உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள். (13:14)
அடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும் பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக் கோருகிறார்கள்.
சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர் ”யாஸய்யிதீ! தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:5)
 சிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது. சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.
சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான்  அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10:107)
தகவல்:Labbai Karaikal

Wednesday, March 28, 2012

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?


தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.
அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.
முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.
இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.
மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?
சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?
பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?
கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!
பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?
இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?
பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.
அபூ பாத்திமா

Friday, March 16, 2012

சுவர்க்கத்தை நோக்கி…

சுவர்க்கத்தை நோக்கி…  


நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133
    இவ்வுலகில் வாழ்கின்ற  நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.
    சுவர்க்க வாழ்வு
    என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    ‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)
    நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு
    சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)
    சுவர்க்க வாயில்கள்
    நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)
        “நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    சுவர்க்கவாசிகளின் இதயங்கள்
    பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.
    “விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47
    சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
    சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி
    சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை
    அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10
    சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்
    அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.
    பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15
    சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
    சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)
    மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
    அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.
அப்துஸ்ஸமது மதனி

Friday, March 16, 2012

புரோகிதமும்-பொருளாதாரமும்

புரோகிதமும்-பொருளாதாரமும்  

உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அதனால் தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர்.
பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதர்களை உயர்வானவர், தாழ்வானவர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒருவர் பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினார், சரியான வழியிலா? தவறான வழியிலா? என்று பார்க்கப்படுவதில்லை. ஒருவரிடம் எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறது என்று மட்டுமே பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தைப் பெற்று தனது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, மக்கள் சுகபோகமாக வாழ பலர் பல வழிகளை நாடுகிறார்கள். நியாயமான முறையில் பல தொழில்கள், வியாபாரங்கள், வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதாரத்தைப் பெற்று நல்ல முறையில் வாழ்கிறார்கள்.
அதேபோல் தான் இஸ்லாமியர்கள் மத்தியில் சிலர், இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்று அந்த மார்க்கத்தை தனது வியாபாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அரபி மதரஸாக்களுக்கு செல்லக்கூடிய மாணவர்களில் பலர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். தந்தையில்லாதவர்கள், தாய் இல்லாதவர்கள், அதிகமான குறும்பு செய்பவர்கள், படிப்பில் விருப்பமில்லாதவர்கள் தான் மதரஸாக்களில் சேர்க்கப்படுகிறார்கள். சொற்பமானவர்கள் அதிகமான ஆண் மக்களைப் பெற்றவர்கள், நான் எனது மகன்களில் ஒருவனை ஆலிமாக ஆக்குவேன் என்று விரும்பி மதரஸாவிற்கு அனுப்புகிறவர்களும் உண்டு.
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் பலர், படிக்கும் போதே தனது திறமையை வெளிப்படுத்தி (துஆ-மவ்லிது ஓதுவதன் மூலம்) பணம் சம்பாதித்தும் மக்கள் அளிக்கின்ற பல் வேறு சுவைகளில் உணவும் சாப்பிட்டு, மார்க்கத்தை கற்றும் வருகிறார்கள். இதன் காரணமாக இந்த மதரஸா மாணவர்கள் உடல் உழைப்பின் மூலம் பொருளாதாரத்தை திரட்டாமல் உழைத்துச் சாப்பிடுவது தான் நபிவழி என்பதையும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். அவ்வாறு அல்குர்ஆனை மனனமிட்டவர் ரமழானில் இரவு தொழுகைக்கு சென்று விடுவார். ஆலிம் பட்டம் வாங்கியவர் ஏதாவது ஒரு பள்ளியில் இமாமாக தனது பணியை தொடங்குவார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யாராவது இமாம் என்று நியமிக்கப்பட்டு ஊதியம் கொடுக்கப்பட்டார்களா? நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வாறு செயல்படுவதற்கு ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நாம் இதுபோன்ற ஊதியத்திற்கு வேலை பார்ப்பதை நிறுத்த வேண்டும். மார்க்கக் கல்வி கற்றவர்கள், மார்க்க சட்ட நுணுக்கத்தை அறிந்தவர்கள் நபி(ஸல்) அவர்களின் வாரிசுகள் என சொல்லிக் கொள்கிறார்கள்-தவறில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார்களோ, அதே போல் முத்தவல்லிக்கு அஞ்சாமல், ஊர் மக்களுக்கு அஞ்சாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்பவரே நபி(ஸல்) அவர்கள் வாரிசுகளாவார். மார்க்கத்தில் இல்லாத புதிய சடங்குகள் தன் கண் முன்னே நடப்பதை கண்டும் காணாமல் இருப்பவர் புரோகிதர்!
மதரஸாக்களில் ஓதிய அனைவரும் பள்ளியில் இமாமாகத் தான் ஆக வேண்டுமா?
சிறந்த ஊர், சிறந்த பள்ளிவாசல் எது என்று பார்த்து அந்த ஊரிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமா? தீனுல் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.
மதரஸாக்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் பள்ளிவாசலில் இமாமாக பணி புரிபவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அதை அவர்கள் உணர்வதில்லை.
* எந்த நேரமும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
* மார்க்க சட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாது.
* சில ஊர்களில் வீடு வீடாக சென்று சாப்பிட வேண்டும்.
*மார்க்க அறிவில்லாத முட்டாள் முத்தவல்லிகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.
* அதிகப்படியான செலவுகள் வந்துவிட்டால், நோய், திருமணம் போன்ற செலவுகளுக்கு கையேந்த வேண்டும்.
* வயோதிக காலத்தில் உதவ யாருமில்லாத நிலை ஏற்படும்.
* வரதட்சிணை, வட்டி, விபச்சாரம் போன்றவற்றை எதிர்க்க முடியாது.
பள்ளியில் இமாமாக இருப்பவர்களின் பரிதாப நிலை இது.
சிலர் கிராமங்களில் பணிபுரிந்து அங்கேயே தன்னுடைய வாழ்க்கையை போக்குபவர்கள். ஒருசிலர் நகரங்களிலும், மாநகரங்களிலும் தனது வாய்ச் சாமர்த்தியத்தைக் கொண்டு சுகபோகமாக வாழ்பவர்களும், தானே ஒரு அரபிக்கல்லூரியை உருவாக்கி தானே ராஜா தானே மந்திரியாக இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று தன்னுடைய வார்த்தை சாமர்த்தியத்தின் மூலம் கொள்ளை வசூல் செய்பவர்களும் இவர்களில் உண்டு. பெரும்பாலான மௌலவிகள், புரோகிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். பொருளாதாரத்திற்காக சடங்குகளை கண்டு கொள்ளாதவர்களே அதிகம்! இவர்களிடம் இருப்பது கூட்டு துஆ மட்டுமே. இந்தக் கூட்டு துஆக்களுக்கு மட்டுமே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். திருமணம், இறப்பு, படிப்பு, மற்ற சடங்குகளை மக்கள் தாங்களே செய்து கொண்டு இமாம்களைப் பொறுப்பாளியாக்குகிறார்கள் என்பதே உண்மை.
நாம் ஒரு முடிவு செய்து வைத்துள்ளோம். ஆலிம்சா என்ற ஒரு நபர் மிகவும் புனிதமான வர். அவர் மட்டுமே மார்க்க சட்டங்களை கடை பிடிக்க வேண்டும். அவர் மட்டுமே தாடி வைக்க வேண்டும். அவர் மட்டுமே ஜிப்பா அணிய வேண்டும். அவர் மட்டும் தலைப் பாகைக் கட்ட வேண்டும். அவர் மட்டுமே தொப்பி அணிய வேண்டும். அவர் பேண்ட் அணியக் கூடாது. அவர் நம்மைப் போல் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. நாம் வட்டி வாங்கலாம், விபச்சாரம் செய்யலாம், அநாச்சாரங்களில் ஈடுபடலாம். மது அருந்தலாம், மீசை பெரிதாக வைக்கலாம், சேவிங் செய்து கொள்ளலாம், நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆலிம்சா மட்டும் எந்தத் தவறும் செய்யாமல் வாழ வேண்டும்.
நம்மை அவர் கண்டு கொள்ளாதவரை நாம் அவருக்கு பொருளாதாரத்தை அள்ளித் தருவதும், சுவையான, உயர்தரமான உணவுகளை அளிப்பது போன்றவைகளைச் செய்து வருகிறோம். எனவே தான் அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் மிகவும் மரியாதைக்குரியவர்களாக இருந்தும், சத்தியத்தைச் சொன்னால் எங்கே தமது மரியாதை போய்விடுமோ பிறகு நாம் உழைத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்று பயந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் பொருளாதாரமே. பணம் கொடுக்காமல் மௌலூதுகளோ, பாத்திஹாக்களோ ஓதச் சொன்னால் நிச்சயமாக ஓதமாட்டார்கள். அவர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால், விழித்துக் கொண்டால், புரோகிதத்தை முற்றிலும் ஒழிக்கலாம். அவர்கள் செய்யக்டிய அனைத்திற்கும் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து பின்பற்றாத நாம் தான் காரணம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கி வாழ்ந்தோமேயானால் இது போன்ற புரோகிதர்கள் உருவாக மாட்டார்கள். வஸ்ஸலாம்.
S.முஹம்மது ரபீக், பழனி.

Friday, March 16, 2012

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!
1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104)
இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.
மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
அதனால்தான்  இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள் கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச் செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.
இந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை; முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.
அல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?
ஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? இல்லையே! அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.
“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்)
“”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)
கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.
“”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)
“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)
குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா?
கடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.
அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே  குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.
2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை? என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா?
அதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள்.
பல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.
கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?
சில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா? ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.
இச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே! அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள்! அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காதே!
அப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும்
தொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே! எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது வருமாறு: “”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)
கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா? என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும்  மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா? ஒருபோதும் முடியாது.
மக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப் பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர்கள் உழைத்துப் பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?
இந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?
இமாம்களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.
மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா?
இங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி பெயர்ப்பது, நூல்கள் வெளியிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.
இதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.
இமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.

Friday, March 16, 2012

ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு

ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு

அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நான் தமிழகம் சென்றிருந்த போது ஒரு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பயானின் இறுதியில் ஒரு அமைப்பைச் சேர்ந்த பலர் ஒன்றினைந்து திட்டமிட்டு வந்து கேள்விகளைத் தொடுத்தனர். அதில் ஒருவர் ஆயிஷா(ரழி) அவர்களை நபி(சல்) அவர்கள் ஆறு (6) வயதில் மணந்ததாகவும், ஒன்பது (9) வயதில் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டதாகவும் புஹாரியில் ஹதீஸ் வருகின்றது. இதையும் ஏற்பீர்களா? எனக் கோட்டார். குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள தௌஹீத் அமைப்பைச் சேர்ந்தவர் அவர்.
எனவே, இது எந்த குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றது என நான் அவரிடம் கேட்டேன். இதை மனசாட்சி ஏற்குதா? நீங்கள் இந்த அடிப்படையில் செயற்படுவீர்களா? என அவர் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார். இடையில் மறித்த நான் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த நீங்கள் இப்போது மனசாட்சிக்கு முரண்படும் ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? நபி(சல்) அவர்கள் 9 வயது ஆயிஷா(ரழி) அவர்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை என் மனசாட்சி மறுக்கவே இல்லை. எனது தாய் திருமணம் முடிக்கும் போது அவருக்கு 14 வயது. அவரின் தாய் மணக்கும் போது அவருக்கு 12 வயது. இப்படி இருக்கும் போது 1400 வருடங்களுக்கு முன்னர் 9 வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது என்பது மனசாட்சி ஏற்க முடியாத கருத்து அல்ல எனக் கூறி மற்றும் சில நடைமுறை உதாரணங்களையும் கூறினேன்.
மக்களை எந்த மனநிலைக்கு இந்த கொள்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

هل النساء أكثر أهل النار

என்ற பெயரில் ஒருவர் ஒரு நூலை எழுதுகின்றார். பெண்கள் அதிகமாக நரகத்தில் இருப்பார்களா? என்பது இதன் அர்த்தமாகும். ஒரு பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் பெண்களை நரகில் அதிகமாகக் கண்டதாக கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும். பெண்ணிலைவாத சிந்தனையுடைய இந்த நூலாசிரியர் இந்த ஹதீஸை மறுக்கின்றார். அதற்கு அவர் வாதங்களை முன்வைக்கும் போது பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அந்த நல்ல சந்தர்ப்பத்தில் நீங்கள் அதிகமாக நரகத்தில் இருப்பீர்கள் என்ற மோசமான விடயத்தைக் கூறுவார்களா? இதை மனசாட்சி ஏற்குமா? அது வாழ்த்துக் கூறும் நேரமல்லவா? நல்ல பண்புள்ள நாகரீகமான நடத்தையுள்ள நபி(ஸல்) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு செய்தியைக் கூறி இருப்பார்களா? எனக் கேள்வி கேட்டு ஹதீஸை மறுக்கிறார்.
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடும். எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது. அந்த வழியில் போனால் எத்தகைய விபரீதமான கருத்துக்கள் ஏற்படும் என்பதை இந்தக் கட்டுரையூடாக விபரிக்க முனைகின்றேன்.
01. மீன் சாப்பிடலாமா?
இறந்தவைகள் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்காக   அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடுத்துள்ளான்.. .. .. .. .”   (2:173) (பார்க்க: 5:3, 16:115)
மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இறந்த பின்னரும் அவற்றை நாம் சாப்பிடுகின்றோம். நேரடியாகப் பார்த்தால் அது இந்த குர்ஆன் வசனத்திற்கு முரணானதாகும். எனினும் மீன், வெட்டுக்கிளி இரண்டும் இறந்த பின்னரும் சாப்பிடத்தக்கவை என ஹதீஸ் கூறுகின்றது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் மீன்கள் இறந்த பின்னரும் முஸ்லிம்களால் சாப்பிடப்பட்டு வருகின்றது.
அல்லாஹ் குர்ஆனில் இறந்தவை ஹராம் என பல இடங்களில் கூறியிருக்கும் போது இறந்து போன மீன்களை உண்ணலாம் என ஹதீஸில் எப்படி வரமுடியும்? இது குர்ஆனின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே என யாரும் வாதிடுவதில்லை. குர்ஆன் பொதுவாக ஹராம் எனக் கூறியிருந்தாலும் ஹதீஸும் வஹிதான். குர்ஆனில் பொதுவாகக் கூறப்பட்ட சட்டத்தில் விதிவிலக்களிக்கும் அதிகாரம் அல்லாஹ்வினாலே நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது குர்ஆனுக்கு முரண் அல்ல. குர்ஆன் கூறும் பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் மீனுக்கு விதிவிலக்களித்திருக்கிறது என்றுதான் அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்கின்றனர். இவ்வாறுதான் ஏனைய ஹதீஸ்களையும் விளங்க வேண்டும்.
02. தவறான பாலியல் உறவு:
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.” (2:223)
மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை இந்த ஹதீஸ்கள் முறையாக விளக்குகின்றன என்று எடுத்துக் கொள்வதா?
03. காபிரான சந்ததிக்கும் சொத்துரிமை
“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள்   விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11)
என அல்லாஹ் கூறுகின்றான். “அல் அவ்லாத்” என்றால் காபிரான பிள்ளைகளையும் குறிக்கும். இந்த அர்த்தத்தில்தான் குர்ஆனில் அவ்லாத் என்ற பதம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெற்ற பிள்ளை குப்ரில் இருந்தால் தாய்-தந்தையின் சொத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு வாரிசுரிமைச் சொத்து வழங்கப்படப் கூடாது. இவ்வாறே பிள்ளை முஸ்லிமாக இருந்து தந்தை காபிரா இருந்தால் பிள்ளையின் சொத்தில் தந்தைக்கும் பங்கு சேராது என ஹதீஸ் கூறுகின்றது. இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது. காபிராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் பிள்ளை பிள்ளைதான். மகன் காபிராகிவிட்டால் அவன் மகன் இல்லையென்றாகிவிடுமா? இந்த அடிப்படையில் காபிரான பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அறிவுக்கும், மனசாட்சிக்கும் முரண்படுகின்றது எனக் கூறி மறுக்க முடியுமா? அல்லது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்குள்ளது என்ற குர்ஆனின் சட்டத்திலிருந்து சொத்துக்காக கொலை செய்த வாரிசு, காபிரான வாரிசு போன்றவர்களுக்கு வாரிசுரிமையில் பங்கு இல்லை எனக் கூறி அவர்களை பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் விதிவிலக்களிக்கின்றது என்று எடுத்துக் கொள்வதா?
04. ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?
ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும். எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது.
“…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும்,   கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து   கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..” (4:24)
என்று முடிக்கின்றான். இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர். எனக் குர்ஆன் கூறிய பின்னர் ஹதீஸ் வேறு சிலரையும் சில சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத் தாகாகவர்கள் எனக் கூறுகின்றது. இப்போது குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுப்பதா? அல்லது ஹதீஸும் சட்ட ஆதாரம்தான் குர்ஆனின் சட்டத்தையும், ஹதீஸின் சட்டத்தையும் இணைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதா? எது நேர்வழி, எது வழிகேடு என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை மோத விடாமல் இரண்டையும் இணைத்து பொருள் கொள்வதுதானே நியாயமான நிலை? நேர்மையான விடை? இதை விட்டும் விலகிச் செல்வது நபி(சல்) அவர்களின் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்காத குற்றத்தில் அல்லவா நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்?
05. இந்த ஹதீஸ்களையும் மறுக்கலாமா?
சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கின்றதா? என்றொரு வாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மறுமையில் மக்கள் நரகத்தில் போடப்பட்ட பின்னர் நரகம் “இன்னும் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அல்லாஹ் தன் காலை நரகத்தில் வைத்து நரகத்தை நிரப்புவான் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தௌஹீத் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த ஹதீஸை வழிகேடர்கள் சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஏற்கனவே மறுத்துள்ளனர்.
“இதிலிருந்து இழிவுபடுத்தப்பட்டவனாகவும் சபிக்கப்பட்டவனாகவும் நீ வெளியேறி விடு!   அவர்களில் எவரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான்   நரகத்தை நிரப்புவேன்.” (7:18)
ஷைத்தானைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
“….ஜின்கள், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது   இரட்சகனின் வாக்கு பூர்த்தியாகி விட்டது.” (11:119)
மனிதர்கள், ஜின்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 32:13 ஆம் வசனம் கூறுகின்றது.
“உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றும் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை   நிரப்புவேன் (என்றும் கூறினான்.)” (38:85)
ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றியவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கடைசியில் அல்லாஹ்வின் கால் மூலம் தான் நரகம் நிரப்பப்படுவதாகக் கூறுகின்றது. எனவே, இந்த ஹதீஸ் மேற்குறிப்பிட்ட அத்தனை ஆயத்துக்களுக்கும் முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுத்தனர். இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் இந்த ஹதீஸை எப்படி எடுத்து வைக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொருத்தவரையில் குர்ஆனில் மூடலாக சொல்லப்பட்டதை ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது என்றுதான் எடுத்துக் கொள்வர். மாற்றமாக குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் பேசுவதாக அவர்கள் கருதுவதில்லை.
06. இந்த வாதத்தை முன்வைப்போர் மற்றும் பல ஹதீஸ்களையும் நிராகரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
இறந்த ஒருவருக்காக உயிருடன் இருக்கும் ஒருவர் சில நிபந்தனைகளுடன் நோன்பு நோற்பது, ஸதகா கொடுப்பது, ஹஜ் செய்வது போன்ற கிரியைகளைச் செய்தால் அவை இறந்தவருக்கு சேரும் என்பது ஹதீஸ்கள் தரும் தகவலாகும். ஆனால் குர்ஆனில் மறுமை நாள் பற்றிக் கூறும் போது
“ஒவ்வொரு ஆத்தமாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கான கூலி…” (20:15)
வழங்குவதற்கான நாளாகக் கூறுகின்றது. அந்தந்த ஆத்மா சம்பாதித்தவைக்குத்தான் கூலி   கொடுக்கப்படும் என குர்ஆன் கூறுகின்றது.
“மேலும், நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் அவனுக்குக் காண்பிக்கப்படும்.”   (53:40)
“நிச்சயமாக இது உங்களுக்குரிய கூலியாக இருக்கிறது. மேலும், உங்களது முயற்சி   நன்றி பாராட்டத்தக்கது (என்றும் கூறப்படும்.)” (76:22)
“(அவை) தமது முயற்சி குறித்து திருப்தியுடனிருக்கும்.” (88:9)
“எனவே, எவர் நம்பிக்கை கொண்டவராக நல்லறங்கள் புரிகின்றாரோ அவரது முயற்சி   நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் (அதை) அவருக்காகப் பதியக் கூடியவர்களாக   இருக்கின்றோம்.” (21:94)
“மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை.” (53:39)
மேற்படி வசனங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்ததிற்குத்தான் கூலி வழங்கப்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது.
எனினும் ஹதீஸ்கள் நோன்பு, ஹஜ், ஸதகா என்பன சேரும் என்று கூறுகின்றன. இந்த ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுக்க நேரிடும். எனினும் சரியான பாதையில் உள்ளோர் இவற்றை முரண்பாடாக அல்லாமல் விதிவிலக்காக எடுத்துக் கொள்வர்.
07. இவ்வாறே அல் குர்ஆனின் பல வசனங்கள் ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் எனக் கூறுகின்றது.
” (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே   சம்பாதித்துக் கொள்கின்றது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.”   (6:164)
“எவர் நேர்வழியில் செல்கிறாரோ அவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். யார்   வழிகேட்டில் செல்கிறானோ அவன் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறான். எந்தவோர்   ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. மேலும் நாம், எந்த ஒரு தூதரையும்   அனுப்பாது (எவரையும்) வேதனை செய்வோராக இருந்ததில்லை.” (17:15)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. (பாவச்) சுமை கனத்த   ஆன்மா அதைச் சுமப்பதற்கு (எவரையேனும்) அழைத்த போதிலும், (அழைக் கப்பட்டவன்)   உறவினராக இருந்த போதிலும் அதிலிருந்து எதையும் அவன்மீது சுமத்தப்பட மாட்டாது.”   (35:18)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. பின்பு உங்கள் அனைவரின்   மீளுதலும் உங்கள் இரட்சகன் பாலே உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை   பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை   நன்கறிந்தவன்.” (39:7)
“எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.” (53:38)
இத்தனை வசனங்களும் இந்தக் கருத்தைக் கூறுகின்றன. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் உலகில் ஒருவர் பிறருக்கு அநீதமிழைத்தால் அநீதமிழைத்தவரின் நன்மைகள் பாதிக்கப் பட்டவனுக்கு வழங்கப்படும். அவனது நன்மைகள் முடிந்துவிட்டால் பாதிக்கப்பட்டவனின் பாவத்தை அநீதமிழைக்கப்பட்டவன் சுமக்க நேரிடும் என வந்துள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வோர் இந்த ஹதீஸ்களையும் தமது உரைகளிலும், எழுத்துக்களிலும் பயன்படுத்துகின்றனர். இது எப்படி என்றுதான் புரியவில்லை.
ஒருவர் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது எனப் பல வசனங்கள் கூறுகின்றன. இதே வேளை,
“நிச்சயமாக அவர்கள் தமது (பாவச்) சுமைகளையும், அத்துடன் (தாம் வழி கெடுத்தோரின்   பாவச்) சுமைகளைத் தமது சுமைகளுடன் சுமப்பர். மறுமை நாளில் அவர்கள் இட்டுக்கட்டிக்   கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவர்.” (29:13)
இந்த வசனம் சிலர் சிலரின் பாவத்தை சுமப்பர் என்று வருகின்றது. குர்ஆன் ஆயத்துக்களின் வெளிப்படையான அர்த்தம் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகத் தென்படுகின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டு ஆயத்துக்களையும் நிராகரிப்பதா? அல்லது ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பதா? அல்லது இரண்டையும் முரண்படாமல் விளங்கி இரண்டையும் ஏற்பதா? எனக் கோட்டால் மூன்றாவது முடிவைத்தான் ஒரு உண்மை முஸ்லிம் எடுப்பான். அந்த அடிப்படையில்தான் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விடயத்திலும் செயற்பட வேண்டும். ஹதீஸும் வஹீ என்பதால் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது போல் தோன்றினாலும் ஆழமாக அவதானித்தால் ஏதேனும் ஒரு உடன்பாடு இருக்கும். அந்த உடன்பாட்டைக் கண்டுபிடித்து இரண்டையும் இணைத்து விளக்கம் சொல்ல வேண்டும்;. உடன்பாட்டைக் காணமுடியாவிட்டால் நான் புரிந்த கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது எனக் கருதி அந்த ஹதீஸ் குறித்து மௌனம் காக்க வேண்டும்.
எனவே, குர்ஆனை ஏற்று ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்த விடுபட்டு இரண்டையும் இணைத்து விளக்கம் கொள்ளும் நேரான பாதையில் பயணிப்போமாக!..
உண்மை உதயம் மாதஇதழ்
எஸ்.எச்.எம். இஸ்மாயில்

Monday, March 5, 2012

ஆப்கானிஸ்தானில் அல்குர்ஆன் எரிப்பு - அமெரிக்கா இராணுவத்திற்கு நேரடி சம்பந்தம் - விசாரணையில் அம்பலம்

ஆப்கானில் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய
நேட்டோ கமிஷன் பல  அமெரிக்க வீரர்களுக்கு பங்கிருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. இத்தகைய
வெறித்தனமான செயலை புரிந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு எத்தகைய
தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்று ஆஃப்கானிஸ்தான் உயர் அமெரிக்க
கமாண்டர் ஜெனரல் ஜான் அலன் கூறியுள்ளார்.

ஆறு அமெரிக்க ராணுவத்தினருக்கும், ஒரு ஆஃப்கான் குடிமகனுக்கும் சம்பவத்தில் பங்கிருப்பது
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று எ.எஃப்.பி கூறுகிறது.

பக்ராம் ராணுவ தளத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினர் புனித
திருக்குர்ஆன் பிரதியை எரித்தனர். சம்பவத்தை தொடர்ந்து ஆஃப்கானில் ஏற்பட்ட மக்களின்
கொந்தளிப்பில் 6 அமெரிக்க ராணுவத்தினர் உள்பட 40 பேர் கொல்லப்பட்டனர். ஆஃப்கானில் கிளம்பிய
கடும் எதிர்ப்பை தொடர்ந்து உயர் அதிகாரிகளை ஆஃப்கானில் இருந்து நேட்டோ வாபஸ் பெற்றது.

உலகம் முழுவதும் முஸ்லிம்களின் உணர்வுகளை கடுமையாக காயப்படுத்திய இந்த வெறித்தனமான
சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கோரினார்.

Monday, March 5, 2012

: பிரித்தானியர் கிறிஸ்த்தவத்தை விட்டு ஒடுகின்றனர் - ...

பிரித்தானியர் கிறிஸ்த்தவத்தை விட்டு ஒடுகின்றனர் - ...:  
மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் 2030-ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன்
கிறிஸ்தவ நாடு என்ற பதவியை இழந்துவிடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.


கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் வெளியேறுகின்றனர்.
அதேவேளையில் மதத்தை மறுப்பவர்கள், மதசார்பற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு
லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. இவ்வறிக்கையை டெய்லி மெயில் பத்திரிகை
வெளியிட்டுள்ளது.


2030-ஆம் ஆண்டில் மதசார்பற்றவர்கள் கிறிஸ்தவர்களை விட அதிகமாக மாறுவார்கள் என்று லேபர்
ஃபோர்ஸ் சர்வே கூறுகிறது.


அதேவேளையில் கிறிஸ்தவம் தளர்ச்சியை சந்தித்த போதும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள், புத்த
மதத்தினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.


கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 26 லட்சமாக
மாறியுள்ளது. ஹிந்துக்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்து ஏழு லட்சத்து 90 ஆயிரமாக
மாறியுள்ளது. பெளத்தர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்து 2 லட்சத்து எழுபது
ஆயிரமாக மாறியுள்ளது.பிரிட்டனில் 2010-ஆம் ஆண்டு 4.11 கோடி கிறிஸ்தவர்கள் இருப்பதாக
ஆய்வறிக்கை கூறுகிறது. இக்கால கட்டத்தில் மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம்
அதிகரித்து 1.34 கோடி அதிகமாகி உள்ளது.





Monday, March 5, 2012

கலாச்சார சீரழிவு!

கலாச்சார சீரழிவு!

காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காமம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாச்சார சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)

இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் ‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)

அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)

நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243).

பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:
அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், “இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.
பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பேராசிரியர், மெளலவி
அ.முஹம்மது கான் பாகவி