Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Wednesday, October 31, 2012

தியாகத் திருநாள்


தியாகத் திருநாள்

Post image for தியாகத் திருநாள் 
இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாட்கள்) மட்டுமே; ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.
அல்லாஹ்வின் அடியார்கள்; அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து(அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. அல்லாஹ் தன்னுடைய கலீல் – நேசர் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கும். நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.
நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே, இளமைப்படுத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிபடவேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுக்கிருந்த தெளிவு. அந்த மாபெரும் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட ஏகத்துவத்தை நிலைநாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது ‘ரப்’பின் திருப் பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம். அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை, இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்” (குர்ஆன் 3:95)
இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹீம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே இனம் பருவத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாவம் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.
“என் அருமைத் தந்தையே! உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயம்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படுநாசத்தில் விழச் செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார்.” “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா? குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கின்றாயே!” என்று அதட்டுகிறார்.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்து உணவளித்துப் பரிபாலித்து வரும். அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம் “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும். சிலைகளே! இவற்றாலோ, இவற்றிற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர் களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியவர்களின் சிலைகளை வாங்கிக்கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் செய்ய ஆரம்பத்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.
“இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப் போய்விடு” (குர்ஆன்: 19:46) என்றார்.
ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும், அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவங்குகிறார்கள் இப்றாஹீம்(அலை) அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவப் பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்றாஹீம்(அலை) அவர்கள் கைவிடுவதாக இல்லை; துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்துயும் உடைத்தெறிந்து விட்டு, ஒரு பெரிய சிலையின் தோளிலேலே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதைபதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்றாஹீம் என்ற பெயராம், வாலிபனாம், அவன்தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வ்நது இப்றாஹீம்(அலை) அவர்களை விசாரிக்கின்றனர். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்; (குர்ஆன் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ, நடுக்கமோ, இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு சிறிதும் இல்லை. தைரியமாக, நெஞ்சுயர்த்தி, தான் கொண்டுள்ள அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற கொள்கைகை, மன்னனிடமே எடுத்துச் சொல்கிறார்கள். முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ்(ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (குர்ஆன் 21:68,69)
நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இதோடு சோதனை முடிந்துவிட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது – தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் – பொட்டல்காட்டில் கொண்டுவிடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம்? என்று சிந்திக்கவில்லை இப்றாஹீம்(அலை) பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை சுட்டிவைத்துவிட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.
ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும் பாலைவனத்தில் அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு, நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹீம்(அலை) “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹீம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாகும் ஆறுதல் அடைகிறார்கள்.
நாட்கள் செல்கின்றன, கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர், அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமை யினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது. தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்தபட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம்ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அங்கமாகவும், “ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கிவிட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை” இன்னும் தொடர்கின்றது.
பச்சிளம் பாலகன் வளர்ந்து ஓடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹீம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒருமுறை நபி இப்றாஹீம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனைத் தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதால், இறை உத்தரவு என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அல்லாஹ்விடம் நாட்டம் அது தான் போலும்; அவனது நாட்டத்தை நிறைவுற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயீல்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளனாகவே காண்பீர்கள்” (குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால் தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுறச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனையனும் எந்த அளவு உணர்ந்திருந்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதைபதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக் கட்டம்; இப்றாஹீம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பின்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையில் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள்; ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தானை அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியாகப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்: நீயோ வாழவேண்டிய வயது, உலக வாழ்க்கையை இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னை பலியிடப் போகிறாரே உன் தந்தை; அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் முன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான் அல்லாஹ்(ஜல்). இறுதியில் இப்றாஹீம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களைக் கீழே முகம் குப்புறக் கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.
ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல், அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்கலைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று; எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவித வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பின், அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான். “ஆகவே, அவ்விருவரும்(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹீம்) மகனைப்பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை யாஇப்றாஹீம்! என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹீம்-இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (குர்ஆன் 37:103-110)
இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும் வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால். அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த  அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு  பெருநாளையே அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) இருவராலும் புணர் நிர்மானம் செய்யப்பட்ட கஃபத்துல்லாஹ்வை இடம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்ற இடத்தை (மகாமே இப்றாஹீம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். (குர்ஆன் 2:125)
தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான்; நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவனே நமது எஜமானன், நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும். (நீர்!) கூறும்!
எனது தொழுகை, எனது தியாகங்கள் என் வாழ்வு, என மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கு.” (குர்ஆன் 6:162)
எந்த ஒரு காரியத்திலும் நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும், இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லாப் பெரும் பெறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிர்பார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக்கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

Sunday, August 5, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34
எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
”எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.
”இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.
38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான். இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35
தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
(20:121).அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார். இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்
அன்று — அந்த மரத்தின் கனி,
இன்று — மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.
படிப்பினைகள்
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.
படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.
இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
1 — உலகம் முடியும் காலம் வரை,
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)
3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்

Tuesday, July 17, 2012

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!




புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

Wednesday, June 27, 2012

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள்.  ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.
அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.
உஸாமா பிப் ஜைது (ரலி) அறிவிக்கிறார்கள்.
ரமழானைத்தவிர வேறு எந்த மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிய ஆசைப்பட்டேன். ஷஃபான் மாதத்தில் அம்மாதத்தின் சிறப்பை விளக்கும் விதமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிந்தேன். ஷஃபான் மாதத்தின் சிறப்பை குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் அனைவரின் செயல்(அமல்)கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனது செயல்கள் நான் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை ஆசிக்கிறேன் (எனவே நோன்பு வைக்கிறேன்) எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத் நஸயீ, அஹ்மத்)
இதனை உண்மைப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி உம்மு சலமா(ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஷஃபான், ரமழான் என்ற இரு மாதங்களைத்தவிர வேறு இரு மாதங்களில் தொடர்ந்து நோன்பு வைத்ததை நான் கண்டதேயில்லை. (ஆதாரம்: ஆபூதாவூத், நஸயீ)
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது நபியவர்கள்: மனிதர்கள் ரஜப் ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ அஹ்மத்)
மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஷஃபான் மாதத்தில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக அறிகிறோம்.  நபி (ஸல்) அவர்கள் தனது அமல்கள் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியுள்ளார்கள். அதற்காக நோன்பு வைத்துள்ளார்கள். மேலும் இம்மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகலையோ இரவையோ சிறப்பித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு நம்பகமான ஹதீஸ்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (மட்டும் சிறப்பான நாளென) நோன்பு வைக்கவேண்டாம். (அப்படி வெள்ளியன்று நோன்பு வைக்க நாடினால்) அதற்கு முந்திய பிந்திய (சனிக்கிழமை) நாளிலும் நோன்பு வைக்கவும். (அபூஹுரைரா ரலி நூல்: முஸ்லிம், அஹமத்)
மேற்படி நபிமொழியை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் செயல்படுத்தியுள்ளதை கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துகிறது.
நபி (ஸல்) மனவியரில் ஒருவரான ஜுவைரியா ரலி அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (சிறப்பென) நோன்பு வைத்திருந்தார்கள். இதனையறிந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பாரீர்.
நபி(ஸல்):       நீ நேற்று (வியாழன்) நோன்பு நோற்றாயா?
ஜுவைரியா (ரலி):  இல்லை
நபி(ஸல்):   நாளை (சனிக்கிழமை) நோன்பு வைக்கும் நாட்டமுண்டா?
ஜுவைரியா (ரலி): இல்லை
நபி(ஸல்):   அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடுவாயாக!
(அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ, முஸ்னத் அஹ்மத்)
ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ பகலுக்கோ இரவுக்கோ அல்லாஹ்வும் அவனது தூதரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலேயொழிய நாமாக கொடுக்க நமக்கு உரிமையில்லை.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
தொடர் நோன்பு வைத்து வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை, அவ்விதம் வைக்க வேண்டாம்; மாதத்தில் மூன்று நாட்கள் வை, அது முழு மாதம் வைப்பதற்குச் சமம் என அறிவுரை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மாதா மாதம் மூன்று நோன்புகள் வைப்பது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூது ரலி நூல்: அபூதவூத் நஸயீ
எந்தெந்த நாட்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தின் பிறை 13,14,15 வைப்பதே மிகைத்து காணப்படுகிறது.
இவ்விதம் மாதா மாதம் நோன்புகளை வைப்பதற்கு வழிகாட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் மத்தியில் (பிறை 15ல்) நோன்பு வைக்காதீர்கள் என தடுக்கவும் செய்தார்கள்.  (ஆனால் வழக்கமாக மாதா மாதம் அந்நாட்களில் நோன்பு வைப்பவர்களைத் தவிர)  ஆதாரம்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத், தாரமி, இப்னுமாஜ்ஜா, அஹமத்.
இந்த உண்மையான நபிமொழிக்கு மாற்றமாகவே இன்று நம்மிடையே பலர் “ஷபே பராஅத்” என்ற பெயரில் பிறை 15ல் நோன்பு வைக்கிறார்கள்.
ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி, அஹ்மத்.
‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி)
ஷஃபான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்ததுபோல் நாமும் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காத காட்டித்தராத வழியிலோ பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலோ மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) புகுத்தாமல் நபி வழி வாழும் உம்மத்தாக (சமுதாயமாக) அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
பேராசிரியர் முஹம்மது அலி திருச்சி