Friday, December 7, 2012

தர்மம்


உங்களில் ஒருவர் பேரிச்சம்     பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து     கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்து கொள்ளட்டும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி,   முஸ்லிம்
    
    ஒவ்வொரு முஸ்லிம் மீதும்     தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி     அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய     எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில்     தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி     அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய     எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ”அவர் தன் கரங்களால் உழைத்து     அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் ‘அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர்     நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ     ”அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே     தர்மமாகும் என்று நபி     அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்:     புகாரி, முஸ்லிம், நஸயீ
    
    நபி     அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை     அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான     தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி,     நஸயீ, அஹ்மத்
    
    உங்களில் யார் இன்று நோன்பு     நோற்றிருக்கிறார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்.    உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி    அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்.     உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்     உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்     இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர்     சொர்க்கத்தில் புகுவார் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி
    
    தர்மம் செல்வத்தைக் குறைத்து     விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை.     அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ்     உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம்,     திர்மிதி
    
    ஒரு மனிதன் இறந்துவிட்டால்     மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம்     ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை.     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி
    
    விபசாரியான ஒரு பெண் ஒரு     கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக்     கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே     தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து    அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய     இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
    
    ஒருவர் நபி     அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?     எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும்     வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில்     தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்     குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு     ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது  பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    
    தர்மத்தில் சிறந்தது எது?     என்று மக்கள் நபி     அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது     நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்
    
    உபரியான தான தர்மங்களை அது     செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால்     முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய     ஆரம்பிப்பீராக! என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    
    ஒரு மனிதர் நபி     அவர்களிடம் ”என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே)     முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான்     கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி     அவர்கள் ”ஆம்” சார்பாக தர்மம் செய்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்:     ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

மரணத்திற்கு பின் மனிதன்



Post image for மரணத்திற்கு பின் மனிதன்

 புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

மரணத்திற்குப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்டுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது.

அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன்வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை, அல்குர்ஆன் இறுதித்தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது, அந் நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல் குர்ஆனிய வசனங்கள் உறுதி செய்கின்றன.

‘அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே! நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிலுள்ள முகடுகளின் மீது அவைவீழ்ந்து கிடக்க(க்கண்டு) இதனை எவ்வாறு இது இறந்தபின், அல்லாஹ் உயிர்ப்பிப்பான்? என்று கூறினார். ஆகவே அல்லாஹ், அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) ‘நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?’ எனக் கேட்டான்; அதற்கவர் ‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில பாகம் இருந்தேன்’ எனக்கூறினார். (அதற்கு அல்லாஹ்) ‘அன்று! நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர் என்று கூறினான். ஆகவே உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும் நீர் நோக்குவீராக! அவை எவ்வித மாறுதலும் அடையவில்லை. இன்னும், உம்முடைய கழுதையின்பால் நோக்குவீராக! மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச் செய்து உம்மை உயிர்கொடுத்து எழுப்பினோம்) இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளின் பால், எவ்வாறு அவைகளைச் சேர்த்து பின்னர் அதன் மாமிசத்தை அணிவிக்கின்றோம்’ என்று நீர் நோக்குவீராக! பின்னர் அவருக்குத் தெளிவான போது அவர், ‘நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்’ என்று கூறினார். (2: 259).

இச் செய்தியினூடாக பல விடயங்கள் புலப்படுகின்றன. அவரின் தூக்கம் நூறு வருடத்தை எட்டியிருந்தும், அவரது உடல் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது. அவருடன் இருந்த உணவு எந்து மாறுதலுக்குள்ளாகாமல் இருந்தது, எனினும் அவர் பிரயாணம் செய்த கழுதை இறந்து அதனது உடல் மக்கிப்போய் இருந்தது. நீண்ட நாட்கள் அவன் துயில் கொண்டதற்கு இதுவே அவன் முன் ஆதாரமாக இருந்தது. அல்லாஹ் இவைகளைப் பாதுகாப்பதற்கு காற்றை உபயோகித்த விதம் மிக அற்புதமானது. இந் நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ் தனக்கு மரணத்திற்குப் பின் எழுப்புவது மிக இலகுவான காரியம் என்பதை உலகிற்கு தெளிவு படுத்துகிறான். இன்னும் இப்றாஹீம் (அலை) தொடர்பான ஒரு செய்தியில் அவருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நீக்கும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
‘இன்னும் இப்றாஹீம் என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக எனக் கூறிய போது, அவன், நீர் நம்பவில்லையா? என்று கேட்டான். அ(தற்க)வர் ஏன் இல்லை! (நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) என்னுடைய இதயம் அமைதியடைவதற்காக என அவர் கூறினார். (அதற்கு அல்லாஹ்) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, பின்னர் நீர் அவைகளைத் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடுவீராக! பின்னர், அவைகளை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாய் வந்து சேரும்; மேலும் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீர் அறிந்து கொள்வீராக! எனக் கூறினான்’ (2: 260).

கைகளின் விரல் நுணிகளைக் கூட பழைய நிலையிலேயே படைப்பதற்கு நாம் சக்தியுள்ளவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்:
‘ஆம்! அவனுடைய விரல்களின் நுணிகளை (முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம்’ (75: 4).

மனிதனின் உடல் அடக்கப்பட்டதன் பின்னால் அது மண்ணில் கலந்து மக்கிப்போய் விடுகிற ஒரு நிலையில் அவனை மறுபடி எவ்வாறு எழுப்புவது என்று மறுமை வாழ்வுக்கு எதிராக அன்று வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, மக்கிப்போன மனிதனின் உடலை மாத்திரம் அல்ல விரல்களின் நுணிகளையும் ஆரம்பத்திலிருந்தது போன்று நாம் படைக்க ஆற்றலுடையவர்கள் என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தை அருளி அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

மறுமை நாளில் ஒருவனின் அந்தரங்க நிலை பற்றித் தீர்ப்பளிக்கப்படும் என விபரிக்கின்ற குர்ஆன், மனிதனின் விரல் நுணிகளைப் பற்றி விஷேசமாகக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையும் உலகுக்கு தெளிவுப் படுத்துகின்றது. இன்றைய உலகில் 600 கோடி மக்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரினதும் கை ரேகைகள் வித்தியாசமானவை என்பது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மையாகும். எனினும் இவ்விஞ்ஞான உண்மையை அல் குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத ஒரு காலத்தில் தெளிவு படுத்தியது என்றால் நிச்சயமாக இப்புனிதக் குர்ஆன் சாதாரண ஒரு மனிதனின் வார்த்தைகளாக இருக்க முடியாது மாறாக இவ்வுலகையும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்த, அனைத்தைப் பற்றியும் ஞானமுள்ள வல்ல அல்லாஹ்வின் கூற்றாக மாத்திரமே இது இருக்க முடியும். இவ்வளவு மாற்றங்களுடன் மனிதனைப் படைத்த இறைவனுக்கு மறு படியும் அவனை எழுப்புவது என்பது மிக இலகுவான காரியம்.

அல்லாஹ் அல் குர்ஆனில் மற்றுமோர் இடத்தில் வாலிபர்களுடன் தொடர்புபட்ட ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறான். அதுவும் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

அநியாயக்கார ஒரு ஆட்சியாளனிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்த அவர்கள் அவனது அநியாயங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக ஊரை விட்டுத் தூரமாக உள்ள ஒரு குகையினுள் தஞ்சம் புகுந்தனர். தங்களது களைப்பைப் போக்கிக் கொள்ள தூக்கத்தில் வீழ்ந்த அவர்கள் நீண்ட காலம் தூங்கினர். “அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்கிடையே கேட்டு (அறிந்து)க் கொள்ளும் பொருட்டு (நித்திரை செய்யும்) அவர்களை இவ்வாறே நாம் எழுப்பினோம். அவர்களிலிருந்து கேட்பவர் ஒருவர், நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்? என்று கேட்டார். (அதற்கு) அவர்களில் சிலர், ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது தங்கி இருந்திருப்போம் என்று கூறினார்கள்; (மற்றும் சிலர்) நீங்கள் (நித்திரையில்) தங்கி இருந்த (காலத்)தை உங்கள் இரட்சகன் தான் நன்கு அறிந்தவன்; ஆகவே உங்களில் ஒருவரை உங்களின் இந்த வெள்ளி நாணயத்தைக் கொண்டு, பட்டணத்திற்கு அனுப்பிவையுங்கள்; அவர் (அங்கு சென்று,) எது மிகச்சுத்தமான உணவு என்பதை(த் தேடி)ப்பார்த்து அதிலிருந்து உணவை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; இன்னும் அவர் (ஊர் மக்களிடம்) இனிதாக நடந்து கொள்ளவும; உங்களைப் பற்றி (மனிதர்களில்) எவருக்கும் நிச்சயமாக அவர் அறிவித்துவிடவும் வேண்டாம் என்று கூறினார்கள்’ (15: 19).

இந் நிகழ்ச்சியினூடாகவும் அல்லாஹ்வின் ஆற்றல் விளக்கப்பட்டுள்ளது. பூமியில் ஒருவர் நீண்ட காலம் தூங்கும் போது அவரது உடலை மண் சாப்பிடுவதுதான் இயல்பு. ஆனால் இங்கு இவர்கள் பல நூறு வருடங்கள் தூங்கியும் அவர்களது உடல் அவ்வாறே பாதுகாக்கப்படுகிறது இது அல்லாஹ்வுடைய ஆற்றலை தெளிவு படுத்துகிறது.

மனிதன் மரணித்ததன் பின் மறுபடி எழுப்பப்படுவதற்கு அல்லாஹ் அல் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தும் அழகான உதாரணமாவது, காய்ந்து, வரண்டு இறந்து போன ஒரு பூமி, இந்தப் பூமி மறுபடி செழித்து வளருமா? என்று நினைக்கின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலையை அடைந்து விட்டதன் பின்னர் மழையைப் பொழிவிக்கச் செய்து அதை உயிர்ப்பிப்பதற்கு சமமானதாகும் என கூறுகிறான். மக்கிப் போன மனித உடலை, இறந்து போன பூமியை உயிர்பிப்பதைப் போன்று உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறான்.

‘மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது’ (17: 5).

மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.
‘மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்துவிட்டது: (அதில் இன்னதென்று) கூறப்படும் ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை’ (76: 1).

மனிதன் என்ற பெயர் சொல்லப்படுவதற்குக் கூட முடியாத ஒரு நிலையில் மனிதன் இருக்கவில்லையா? என அவன் வினா எழுப்புகிறான். இவ் அனைத்தும் அவனது ஆற்றலை படம் பிடித்துக் காட்டுகின்றன. இவை அனைத்தும் மனிதனை இறுதி நாளில் எழுப்புவது எனக்கு இலகுவான காரியம் என்பதை உணர்த்துகின்றன.

மனிதன் இவ்வுலகில் படைக்கப்பட்டதற்குரிய முக்கிய நோக்கத்தை அல்லாஹ் அல் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான்:
நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை’ (51:56).

இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்காகவே மனிதனைப் படைத்தான். மற்றோர் இடத்தில் குறிப்பிடும் போது:
‘அவன் எத்தகையவனென்றால்: உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் படைத்திருக்கின்றான்: அவனே (யாவற்றையும்) மிதை;தவன்: மிக்க மன்னிக்கின்றவன’ (67: 2).

மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும். எனவே மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்று கூறுவது இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த நோக்கமும், அடிப்படையுமில்லை என்றாகிவிடும். இது முட்டாள்த் தனமான ஒரு வாதமாகும். ஏனெனில் மனிதன் செய்யக்கூடிய அற்பக்காரியங்களுக்கும் நோக்கமென்றொன்றிருக்கும் போது, இவ்விசாலமான வானம், பூமி, வேறு வேறு பிரமாண்டமான படைப்புகள், இவற்றின் இயக்கம், உயர்ந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டு அவனது வாழ்;க்கை இவ்வுலகத்தோடு முடிவுறுகிறது என்றால், இப்பிரமாண்டமான படைப்புகள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மனிதனுக்கு ஒரு வாழ்க்கை வழங்கப்பட்டதன் நோக்கமென்ன?

நம்மைப் படைத்தவன் கேட்கிறான்:
‘உங்களை நாம் வீணுக்காகப் படைத்தோம் என்றும், நீங்கள் நம் பக்கம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா’? (23: 115).

இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
‘வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. நிச்சயமாக அவ் விரண்டையும் உண்மையைக்கொண்டே தவிர- நாம் படைக்கவில்லை: எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள். நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் அவர்கள் அனைவருக்கும் (குறிப்பிடப்பட்ட) தவணையாகும்’ (44: 38-40).

‘வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை: இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும்: ஆகவே நிராகரித்துவிட்டார்களே அத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு). அல்லது விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா’? (38: 27,28).
‘தீமைகளைச் சம்பாதித்துக் கொண்டார்களே அத்தகையோர்- விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும் சமமே; அவர்கள் (இதற்கு மாறாகத்) தீர்ப்புச் செய்து கொண்டது மிகக்கெட்டதாகி விட்டது. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்; இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்); அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்’ (45: 21, 22).

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்றது.
மனித உள்ளத்தில் இவ்வுலக வாழ்க்கை மாத்திரம் தான் வாழ்க்கை இதற்க்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை, நான் விசாரிக்கப்படவும் மாட்டேன் என்ற ஒரு எண்ணம் ஆழமாகப் பதிந்து விடுமானால் மனித சமுதாயத்தில் ஏற்படும் ஆபத்தான நிலை இன்னதென்று சொல்ல முடியாது. மேற்கத்திய உலகில் இந்நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விட்டதனால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீரழிவுகளை கண்கூடாகக் காண்கிறோம்.

எப்படிக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறைவதில்லை, இதன் மூலம் தெரியவரும் உண்மையாதெனில் சட்டங்கள் போடுவதன் மூலம் மாத்திரம் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. இதற்கு தற்கால சமூக அமைப்பும் சான்றாக உள்ளது. இஸ்லாம் முன்வைக்கும் நெறி முறைகளின் மூலம், மறுமை சார்ந்த நம்பிக்கை மூலம் எந்த ஒரு சக்திக்கும் உருவாக்க முடியாத உயரிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். வரலாற்றில் இப்படியான உயரிய சமுதாயங்கள் உருவாகின. இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட அச்சமுதாயத்தில் அனைத்துத் தீமைகளும் தலை விரித்தாடின. அத் தீமைகளில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக அவர் முன்வைத்த கொள்கை அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், மரணத்திற்குப் பிறகு உள்ள நிரந்த வாழ்க்கையின் பக்கம் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்;. குறுகிய காலத்திற்குள் உலக வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முழு உலகத்திற்கும் முன்மாதிரியான ஒரு சமுதாயம் உருவானது. இதற்குரிய முக்கிய காரணம் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை அவ்வுள்ளங்களில் ஆழமாக பதித்ததாகும். இஸ்லாம் முன் வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் முழு மனித சமுதாயத்தினுடைய நலனும் தங்கியுள்ளது.

அல்லாஹ் தனது திருமறையில்:
‘எவன் கடுகளவு நன்மை செய்கிறானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான், எவன் கடுகளவு தீமை செய்வானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான்’ (99: 7,8).

நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை இறை வேதத்திலிருந்தும், இறுதி நபியின் வழிகாட்டளிலிருந்தும் அறிய முற்படுவோமாக!

முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்
இஸ்லாம் கல்வி.காம்

புத்தாண்டு



Post image for புத்தாண்டு

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.
அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?
இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.
ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற அசலான போதனையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள். அதற்குறிய ஒரே வழி இந்தப்போதனை செய்யும் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்து விடுவதே சரியான தீர்வாகும் என்று, அன்று கஃபதுல்லாஹ்வை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் முடிவுக்கு வந்தனர். அதற்குறிய எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டனர். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதித் தூதரை அந்த கொலை முயற்ச்சியிலிருந்து காப்பாற்றி அவர்களைக் கொண்டு தனது மார்க்கத்தையும் இறுதி வேதத்தையும் நிறைவு செய்ய நாடிவிட்டான்.
எனவே தனது இறுதி தூதருக்கு தான் பிறந்து வளர்ந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவுக்கு வெளியேறிச் செல்ல உத்தரவு பிறப்பித்தான். அதுமட்டுமல்ல அந்த குரைஷிகளின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தனது தூதரை அதி அற்புதமாக காப்பாற்றி மதீனா சென்றடயச் செய்தான். அந்த அற்புத நிகழ்ச்சியே “ஹிஜ்ரத்” என்று சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்சியை அடிப்படையாக வைத்தே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வறுகிறது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் நமக்கு அந்த மகத்தான நிகழ்ச்சியை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பிலிருந்தே சிறப்புக்குறிய நாளாக இருக்கிறது. அன்றுதான் மூஸா(அலை) அவர்களும் அவர்களது சமூகமும் பிர்அவ்னின் கொடுமைகளிலிருந்து மீட்சி பெற்ற நாளாகும். பிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாளாகும். எனவே மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். அதை வைத்து யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களை பின்பற்றுவதற்கு நாங்களே உரிமை உள்ளவர்கள் என்று கூறி தாமும் அந்த நாளில் நோன்பு நோற்றதுடன் முஸ்லிம்களையும் நோன்பு நோற்க ஏவினர்(புகாரி) ரமழான் நோன்பு கடமையாகும் வரை முஸ்லிம்கள் ஆஷுரா நோன்பை அக்கரையுடன் நோன்பு நோற்று வந்தனர்.
ரமழான் நோன்பு கடமையான பின் விரும்பியவர் ஆஷுரா நோன்பு நோற்கும் நிலை இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம் ஆஷுரா தினத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்துடன் அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால் முஹர்ரம் 9லும் 10லும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
ஆனால் அடுத்த ஆஷுரா தினம் வருவதற்கு முன் அல்லாஹ்வின் நாட்டப்படி அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். எனவே முஸ்லிம்கள் இப்போது முஹர்ரம் 9 லும் 10 லும் நோன்பு நோற்பது நபிவழியாகும். அடுத்து நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஹுசைன்(ரழி) அவர்கள் சஹீதாக்கப்பட்டது ஹிஜ்ரி 61 இதே முஹர்ரம் 10 நாள் ஆஷுரா தினமாகும். ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் முஹர்ரம் 1 லிருந்து 10 வரை சில சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதற்கும் மார்க்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த முஹர்ரம் 1 லிருந்து 10 வரை கடைபிடிக்கும் அனாச்சாரங்கள் ஷியாக்களும் செய்து வரும் அனாச்சாரங்களேயாகும்.
உண்மையில் ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் எவ்வளவு பெரிய மகத்தானதொரு தியாகத்தினை நமக்கு நினைவூட்டுகிறது. சத்தியத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும்போது எத்தனை துன்பங்களை சந்திக்க நேரிட்டாலும் அதற்காக சத்திய பிரச்சாரத்தை துறக்கக்கூடாது; அதுவே இறுதி வெற்றியை ஈட்டித்தரும் என்ற படிப்பினையை முஸ்லிம்கள் இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் பெறுவோமாக.

முதன்மையான கடமை தொழுகை



Post image for முதன்மையான கடமை தொழுகை

கடமைகள் அனைத்திலும் முதன்மையான கடமை தொழுகையாகும். தொழுகை என்பது என்ன? எதன் மீது நாம் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோமோ அதனை, நாள் தோறும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் சொல்லாலும், செயலாலும் நிறைவு செய்து புதுப்பிக்கின்ற நிரந்தர வழிபாட்டு முறைகளே தொழுகையாகும். அதிகாலையில் எழுந்து அனைத்திற்கும் முதலாவதாக சுத்தமாகி இறைவன் முன் வருகிறீர்கள். அவன் முன்னிலையில் நின்றும், குனிந்தும், சிரம் தாழ்த்தியும் உங்களை அடிமை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இறைவனிடம் உதவி கோருகிறீர்கள். அவனிடம் போதனை கேட்கிறீர்கள். அவனுக்குக் கீழ்ப்படியும் வாக்குறுதியைப் புதுப்பிக்கிறீர்கள். அவனுடைய திருப்தியைப் பெறவும், கோபத்திலிருந்து தப்பிக்கவும் அடிக்கடி இறைஞ்சுகிறீர்கள். அவனுடைய வேதத்தின் பாடத்தை நினைவூட்டிக்கொள்கிறீர்கள். அவனுடைய தூதரின் மெய்மையைப் பற்றிச் சான்று பகர்கிறீர்கள். அவனுடைய நீதிமன்றத்தில் நீங்கள் வந்து உங்களுடைய நடத்தையைப் பற்றிப் பதில் கூறவேண்டிய அந்த நாளை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் பகற் பொழுது தொடங்குகிறது.
சில மணி நேரம் நீங்கள், உங்கள் அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறீர்கள். லுஹர் வேளையில், முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) உங்களுக்கு நினைவூட்டுகிறார். “வாருங்கள்! இறைவனை மறந்து அலட்சியமாக இருந்து விடாதிருக்கும் பொருட்டுச் சில நிமிஷங்கள் அந்தப் பாடத்தை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுங்கள்!’ என்று அழைக்கிறார். நீங்கள் எழுந்து மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் உலக அலுவல்களின் பக்கம் திரும்புகிறீர்கள். சில மணி நேரம் கழித்து மீண்டும் அஸர் வேளை  மீண்டும் ஈமானைப் புதுப்பித்துக் கொள்கிறீர்கள். அதற்குப்பின் மக்ரிப் வேளை வருகிறது. இரவு தொடங்குகிறது. காலைப்பொழுதை நீங்கள் எவ்வாறு தொழுகையோடு தொடங்கினீர்களோ அவ்வாறே அந்தப் பாடத்தை மறந்து விடாதிருக்கும் பொருட்டும், மறந்து வழி தவறிவிடாதிருக்கும் பொருட்டும் தொழுகையோடு இரவையும் தொடங்குகிறீர்கள். பிறகு இஷா வேளை வருகிறது. தூங்கும் சமயம் நெருங்குகிறது. இது அமைதியான காலம். ஆதலால் இறுதியாக உங்களுக்கு ஈமானின் போதனைகள் அனைத்தும் நினைவூட்டப்படுகின்றன. பகற்பொழுதின் ஆரவாரத்தில் உங்களுக்கு முழுக்கவனமும் செலுத்த வாய்ப்பில்லா விட்டால் இந்த வேளையில் நிம்மதியாகக் கவனம் செலுத்த முடியும்.
தொழுகை ஒவ்வொரு நாளும், ஐவேளையும் உங்களுடைய இஸ்லாமிய அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் தொழுகையால் உங்கள் உளத்தூய்மை, ஆன்மநேயம், ஒழுக்க விழுப்பம், நற்செயல்கள் பற்றிய அறிவுரை ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் முன் கூறியபடி பெரிய வழிபாட்டிற்கு சித்தப்படுத்தப்படுகிறீர்கள். ஒலூச் செய்வதில் (தொழுகைக்கு முன் முகம், கைகால்களைத் தூய்மை செய்வதில்) ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழிமுறையையே நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? தொழுகையின்போது ரசூலுல்லாஹ் அவர்கள் போதித்துள்ள படியே குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஏன் ஓதுகிறீர்கள்? முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப் படிவதை நீங்கள் உங்கள் கடமையாகக் கருதுவதால் தானே இவையெல்லாம் செய்கிறீர்கள் ?
குர்ஆனை நீங்கள் வேண்டும் என்றே தவறாக ஏன் ஓதுவதில்லை? அது அல்லாஹ்வின் வாக்கு எனும் நம்பிக்கை உங்களுக்கு இருப்பதால்தானே? தொழுகையில் மௌனமாக ஓத வேண்டியதை நீங்கள் ஓதாவிட்டால் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதாவது ஓதினால் உங்களுக்கு யாருடைய அச்சம் இருக்கிறது? மனிதர் யாரும் நகைக்கப் போவதில்லை. ஆயினும் மௌனமாக நாம் எதை ஓதிக்கொண்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுவதால்தான் அல்லவா? நமது மறைவான நடவடிக்கைகளையும் அவன் அறியாதவன் அல்லன் எனும் எண்ணம் இருப்பதால்தான் அல்லவா?
பார்ப்பவர் எவரும் இல்லாத இடத்தில் உங்களைத் தொழுகைக்காக எழுப்பி விடுவது எது? இறைவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் எனும் நம்பிக்கைதான் அல்லவா? தொழுகை வேளை வந்ததும் மிகவும் அவசியமான வேலையிலிருந்தும் உங்களைப் பிரித்துத் தொழுகையின் பக்கம் உங்களை இட்டுச் செல்வது எது? “தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்’ எனும் உணர்வே அல்லவா? குளிர் காலத்தில் அதிகாலையிலும், கோடைக்காலத்தில் நடுப்பகலிலும், மாலையில் இன்பமாய்ப் பொழுது போக்கும் மக்ரிப் சமயத்திலும் தொழுது கொள்ளும்படி எது உங்களை நிர்ப்பந்திக்கிறது? அது கடமையுணர்வு இல்லையானால் வேறு என்ன? தொழாமல் இருப்பதற்கும், தொழுகையில் அறிந்தே தவறு செய்வதற்கும் ஏன் அஞ்சுகிறீர்கள்? இறைவனின் அச்சம் உங்களுக்கு இருப்பதால்தானே? அவனுடைய நீதிமன்றத்திற்கு ஒருநாள் வர வேண்டியிருக்கிறது என்று நீங்கள் நம்புவதால்தானே?
உங்களை மெய்யான முழுமையான முஸ்லிம் ஆக்குவதற்காகத் தொழுகையைக் காட்டிலும் வேறு சிறந்த பயிற்சி எது இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பலமுறை இறைவனின் நினைவு, அவனுடைய அச்சம், அவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றையும் கண்காணிக்கிறான் எனும் நம்பிக்கை, அவனுடைய நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் எனும் கொள்கை ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் பயிற்சியை அளிப்பதற்குத் தொழுகையைவிடச் சிறந்ததாய் வேறு எது இருக்கிறது?
நாள்தோறும் பலமுறை கட்டாயமாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கும், வைகறை முதல் இரவு வரை ஐவேளைகளில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பயிற்சியளித்துக் கொண்டே இருக்கிறதல்லவா? இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவன், தொழுகையை நிறைவேற்றிவிட்டு உலக அலுவல்களில் ஈடுபடும்போது அங்கும் அவன் இறைவனுக்கு அஞ்சுவான். அவனுடைய சட்டங்களைப் பின்பற்றுவான். ஒவ்வொரு பாவச்செயலின் போதும் அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும். தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தான் பாவம் செய்யக்கூடாது என்று அஞ்சி விலகுவான் என்று நம்பலாம் அல்லவா? யாராவது ஒருவன் இத்தகைய சிறந்த பயிற்சிக்குப் பின்பும் இறைவனுக்கு அஞ்சாமலும் அவனுடைய கட்டளைகளை மீறியும் நடந்து கொண்டிருந்தால் அது, தொழுகையின் குறை ஆகாது. மாறாக அக்குறை அந்த மனிதனின் உள்ளக் கோளாறின் விளைவேயாகும்.
அல்லாஹ் தொழுகையை பலருடன் கூடி (ஜமாஅத்துடன்) தொழும்படியே உத்தரவிட்டிருக்கிறான். குறிப்பாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)த் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதைக் கடமையாக்கி இருக்கிறான். இதனால் முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையும் சகோதரத்துவமும் தோன்றுகின்றன. தொழுகை முஸ்லிம்களை ஒன்றுபடுத்தி ஒரு வலுவான குழுவாக்குகிறது. முஸ்லிம்கள் அனைவ ரும் ஒன்றுகூடி ஒரே இறைவனைத் தொழும்போது ஒன்றாயிருந்து பழகுவதால், இயற்கையாக ஒருவருடைய நெஞ்சம் மற்றொருவருடைய நெஞ்சத்தோடு இணைகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் உணர்வும் பிறக்கிறது. தவிர, இது முஸ்லிம் தலைவனுக்குப் பணிந்து செயல்படும் இயல்பை உண்டாக்குகிறது. அவர்களுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டுக்கான பாடத்தையும் கற்பிக்கிறது. இதனால் அவர்களுக்குள் அன்பும் அனுதாபமும் மலர்கின்றன. சமத்துவமும், ஒருமையுணர்வும் பிறக்கின்றன. செல்வனும், ஏழையும், பெரியவனும், சிறியவனும், உயர்ந்த அதிகாரியும், தாழ்ந்த வேலைக்காரனும் சரிசமமாகத் தோளோடு தோள் இணைந்து நிற்கிறார்கள். எவரும் உயர் ஜாதியாகவோ, கீழ் ஜாதியாகவோ இருப்பதில்லை.
இவை யாவும் உங்களுடைய தொழுகையால் இறைவனுக்கன்றி உங்களுக்கே கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுள் சிலவாகும். இறைவன், இதை உங்களுடைய நன்மைக்காகவே கடமையாக்கியிருக்கிறான். தொழாவிட்டால் இறைவன் உங்கள் மீது கோபப்படுவது, அவனுக்கு நீங்கள் ஏதோ பெரிய நஷ்டம் விளைவித்து விட்டீர்கள் என்பதற்காக அன்று. உங்களுக்கு நீங்கள் நஷ்டம் விளைவித்துக் கொண்டீர்களே என்பதற்காகத்தான். தொழுகையின் மூலம் இறைவன் எத்தகைய வலிமையை உங்களுக்குத் தருகிறான்! நீங்களோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.
வாக்கால் இறைவனின் இறைமையையும், இறைத்தூதருக்குக் கீழ்ப்படிவதையும், மறுமையில் நீதி விசாரணையையும் ஒப்புக்கொண்டு செயலில் இறைவனும், இறைத்தூதரும் உங்கள் மீது சுமத்தியுள்ள அனைத்திற்கும் பெரிய கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் அது எத்தகைய வெட்கக் கேடான நிலை என்பதை உணர வேண்டும். இத்தகைய செயல் உங்களைப் பற்றி இரண்டு விஷயங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, தொழுகை முக்கிய கடமை என்பதை நிராகரிக்கிறீர்கள். இரண்டு, அதைக் கடமை என்று ஒப்புக்கொண்டும் அதை நிறைவேற்றாமல் தப்பி ஓட முயலுகிறீர்கள். தொழுகையையே கடமையல்லவென நிராகரிப்பதால் குர்ஆனையும், ரசூல்(ஸல்) அவர்களின் போதனையையும் பொய்யாக்க முயலுகிறீர்கள். அதே சமயம் அவ்விரண்டின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்ப தாய்ப் பொய்யுரைக்கிறீர்கள்.
நீங்கள் தொழுகையைக் கடமை என்று ஒப்புக் கொண்டும் அதை நிறைவேற்றா விட்டால் நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கைக்குரிய மனிதர் அல்லர். எந்த உலக விவகாரம் தொடர்பாகவும் உங்களை நம்பவே முடியாது. இறைவனுடைய கடமையை நிறைவேற்றாத உங்களிடம் மனிதனின் கடமையை நிறைவேற்றுவீர்கள் என்று எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?.
அபுல் அஃலா மௌதூதி