Wednesday, October 31, 2012

தியாகத் திருநாள்


தியாகத் திருநாள்

Post image for தியாகத் திருநாள் 
இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாட்கள்) மட்டுமே; ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.
அல்லாஹ்வின் அடியார்கள்; அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து(அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. அல்லாஹ் தன்னுடைய கலீல் – நேசர் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கும். நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.
நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே, இளமைப்படுத்திலிருந்தே, அல்லாஹ் ஒருவனுக்கே வழிபடவேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுக்கிருந்த தெளிவு. அந்த மாபெரும் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட ஏகத்துவத்தை நிலைநாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது ‘ரப்’பின் திருப் பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம். அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை, இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன. “இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்” (குர்ஆன் 3:95)
இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்து, அவற்றை வியாபாரம் செய்வது கொண்டு பிழைப்பு நடத்துபவர். இந்தத் தீய செயல் இப்றாஹீம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே இனம் பருவத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாவம் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள்.
“என் அருமைத் தந்தையே! உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி மக்களை வழிபடச் சொல்கிறீர்களே? இது நியாயம்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படுநாசத்தில் விழச் செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா?” என்று கேள்விக் கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவு கடந்த கோபம் வருகின்றது. நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார்.” “மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர்வாழ்வது எப்படியடா? குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கின்றாயே!” என்று அதட்டுகிறார்.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் இந்த இடத்தில் பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்து உணவளித்துப் பரிபாலித்து வரும். அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம் “மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை – வெறும். சிலைகளே! இவற்றாலோ, இவற்றிற்குரிய பெரியார்களாலோ, உங்களுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர் களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியவர்களின் சிலைகளை வாங்கிக்கொள்ளலாம்” என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் செய்ய ஆரம்பத்து விட்டார்கள். இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே; உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார்.
“இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன்; என்னை விட்டும் என்றென்றும் தூரப் போய்விடு” (குர்ஆன்: 19:46) என்றார்.
ஆதரிப்பார் யாரும் இல்லாமலும், ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும், அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத்துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவங்குகிறார்கள் இப்றாஹீம்(அலை) அவர்கள். அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவப் பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்றாஹீம்(அலை) அவர்கள் கைவிடுவதாக இல்லை; துணிவாகத் தொடர்கிறார்கள். ஒரு இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்துயும் உடைத்தெறிந்து விட்டு, ஒரு பெரிய சிலையின் தோளிலேலே ஆயுதத்தை மாட்டிவைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதைபதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள்ளாகிறார்கள். விசாரிக்கும் போது, இப்றாஹீம் என்ற பெயராம், வாலிபனாம், அவன்தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன்; அவன்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து – இல்லை இழுத்து வ்நது இப்றாஹீம்(அலை) அவர்களை விசாரிக்கின்றனர். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள்” என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலைகளையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள்” என்று குத்திக் காட்டுகிறார்கள்; (குர்ஆன் 21:60-67) துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ, நடுக்கமோ, இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு சிறிதும் இல்லை. தைரியமாக, நெஞ்சுயர்த்தி, தான் கொண்டுள்ள அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற கொள்கைகை, மன்னனிடமே எடுத்துச் சொல்கிறார்கள். முடிவு, நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ்(ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (குர்ஆன் 21:68,69)
நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இதோடு சோதனை முடிந்துவிட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது – தொடர்கதை போல், அன்புக்கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் – பொட்டல்காட்டில் கொண்டுவிடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம்? என்று சிந்திக்கவில்லை இப்றாஹீம்(அலை) பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை சுட்டிவைத்துவிட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடியானின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள்.
ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும் பாலைவனத்தில் அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டு போய் விட்டு விட்டு, நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹீம்(அலை) “எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா?” என்ற பாச மனைவியின் கேள்விக்கு, “ஆம்!” என்ற பதிலே இப்றாஹீம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது. அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாகும் ஆறுதல் அடைகிறார்கள்.
நாட்கள் செல்கின்றன, கொண்டு வந்த உணவுப் பொருள், தண்ணீர், அனைத்தும் தீர்ந்து விட்டன. பசியின் கொடுமை யினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி. பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது. தாயின் உள்ளம் படாத பாடு படுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்தபட்சம் வரளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம்ஜம்” நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து, ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அங்கமாகவும், “ஜம்ஜம்” தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கிவிட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை” இன்னும் தொடர்கின்றது.
பச்சிளம் பாலகன் வளர்ந்து ஓடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹீம்(அலை) பக்கா(மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒருமுறை நபி இப்றாஹீம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனைத் தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதால், இறை உத்தரவு என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அல்லாஹ்விடம் நாட்டம் அது தான் போலும்; அவனது நாட்டத்தை நிறைவுற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயீல்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. “அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளனாகவே காண்பீர்கள்” (குர்ஆன் 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால் தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை; அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுறச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனையனும் எந்த அளவு உணர்ந்திருந்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதைபதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக் கட்டம்; இப்றாஹீம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பின்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையில் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள்; ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தானை அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியாகப் போகும் மகனை நெருங்குகிறான். சாகச வார்த்தைகளைக் கூறுகின்றான். “தந்தையோ வயது முதிர்ந்தவர்: நீயோ வாழவேண்டிய வயது, உலக வாழ்க்கையை இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னை பலியிடப் போகிறாரே உன் தந்தை; அதற்கு நீ இடங் கொடுக்கலாமா?” தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அதன் ஞாபகார்த்தமாக ஹாஜிகள் இன்றும் முன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான் அல்லாஹ்(ஜல்). இறுதியில் இப்றாஹீம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களைக் கீழே முகம் குப்புறக் கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.
ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல், அந்தச் சோதனையால் மனிதன் முன் காணப்படும் வேதனையில் சிக்கலைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று; எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிப்படும் ஒரே நோக்கம் தவித வேறு நோக்கம், தந்தை, தாய், தனயன் மூவருக்கும் இல்லை; இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பின், அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான். “ஆகவே, அவ்விருவரும்(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹீம்) மகனைப்பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை யாஇப்றாஹீம்! என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹீம்-இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (குர்ஆன் 37:103-110)
இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும் வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால். அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த  அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு  பெருநாளையே அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான். வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) இருவராலும் புணர் நிர்மானம் செய்யப்பட்ட கஃபத்துல்லாஹ்வை இடம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்ற இடத்தை (மகாமே இப்றாஹீம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். (குர்ஆன் 2:125)
தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவைதான்; நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவனே நமது எஜமானன், நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும். (நீர்!) கூறும்!
எனது தொழுகை, எனது தியாகங்கள் என் வாழ்வு, என மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கு.” (குர்ஆன் 6:162)
எந்த ஒரு காரியத்திலும் நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும், இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லாப் பெரும் பெறுகளைத் தரும். நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிர்பார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக்கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக! ஆமீன்.

ஸலாம் கூறுங்கள்

ஸலாம் கூறுங்கள்

Post image for ஸலாம் கூறுங்கள்


”நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்” என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
”நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து. ‘ஸலாம்’ கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என கில்தா இப்னு ஹன்பல் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூத்ு மற்றும் திர்மிதீ)
”அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்” என ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)
”நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வார்கள்”" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
”முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்” என தவ்பான் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார் .(நூல்: அபூதாவூத்், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் ‘அல்அதபுல் முஃப்ரத்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
”ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்”"என அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)
”வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூஹ{ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)
”நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்” என அலி இப்னு அபீ தாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ (நூல்: நஸயீ)
”நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்” என அபூ மூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)
”என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், நான்தான் ”என்றால் யார்” என்று அதிருப்தியோடு கேட்டார்கள்” என ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், மற்றும் திர்மிதீ)
”நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்” என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
”இரவில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் ‘ஸலாம்” கூறுவார்கள்” என மிக்தாத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
”ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸலாம்” கூறட்டும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூ மாலிக்கில் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
    
(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று     தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால்,     (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு     என்று நபி صلى الله عليه     وسلم     அவர்கள் கூறினார்கள்” என அபூமூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ     அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூத் மற்றும்     திர்மிதீ)

Wednesday, October 3, 2012

பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்

Post image for பொய்யும் மெய்யும்

 பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!
யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.
அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.
ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.
அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.
உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.]
மெய்யும் பொய்யும் நம்முடைய வாழ்க்கையோடு கலந்து விட்டனவைகளாகவே இருக்கின்றன. நமக்கு எது ஆதாயம் தருகின்றதோ, அதை தேர்வு செய்ய நாம் தயங்காதவர்களாகவே இருக்கின்றோம். அது பொய்யாக இருந்தாலும் சரி, மெய்யாக இருந்தாலும் சரி.
ஆனால் உண்மை என்னவென்றால், பொய் சொல்வது என்பது நமக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதுதான். இந்த உண்மையை எண்ணிப் பார்க்கிறபோது நமக்கு மிகவும் வியப்பாகத் தோன்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்றை – அதாவது பொய் சொல்வதை நாம் வாழ்க்கையில் அதிகம் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் அது.
பொய் சொல்வதா? உண்மையைச் சொல்வதா என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா? மெய்யா? என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை.
ஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் நாம் கூறும் விடை என்னவாக இருக்கும்?
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதே!
ஆம்! உள்ளத்தில் உண்மைகளே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. பொய்யை நாம் தான் தூக்கி அதில் ஒரு சுமையை வைக்கின்றோம். அந்த சுமையை உள்ளம் மெல்ல மெல்ல இறக்கி தூர எறிந்து விடக்கூடும். ஆம்! பொய்ச்சுமைக்கு உள்ளத்தில் நீடித்த இடப்பிடம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும். எனவே தான் சொல்லி வைத்தாற்போல் பொய்கள் எல்லாம் விரைவில் மறந்து போய் விடுகின்றன.
யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.
அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.
மேலும், உண்மைக்கு இயற்கையே சாட்சியாக அமைந்து விடுகின்றது. ஆனால், பொய்யை நிரூபிக்க சாட்சியை ஜோடிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சாட்சியும் அந்த நிமிடத்துக்கு மட்டும்தான் மேடையேற உதவும். காட்சி முடிந்தபின் கழன்று கொண்டு போய்விடும். பின்பொரு சூழ்நிலையில் அந்த நாடகத்தைப் போடும் போது முன்பு வந்த பொய்சாட்சியே காட்டிக் கொடுக்கும் சாட்சியாக மாறிப்போய் விடுகிறது.
எனவே நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பொய் சொல்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.
அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும். எனவே நாம் சொல்லும் உண்மைகள் ஏற்கப்படாத நிலைமை வருமேயானால், அது நம்முடைய வளர்ச்சிக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும். இதற்குக் காரணம், நாம் முன்பு ஏதோ ஓர் ஆதாயம் கருதி கூறிய பொய்தான். ஆனால் அப்போது கிடைத்த ஆதாயத்தைவிட இப்போதும், இனிமேலும் கிடைக்கின்ற இழப்பு மிக மிக அதிகமானதாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்ப்போமேயானால் வலி தான் மிஞ்சும்.
எனவே தான் முன்பு ஏதோ ஒரு சூழலில் தவிர்க்க முடியாமல் நாம் ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்திருந்தால் அப்போது அப்பொய்யை சொல்லியிருந்தால், அப்பொய்யை பொய்யல்ல என்று கட்டிக் காக்க வேண்டிய பொருப்பு நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. அந்த பொய் நன்மையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தீமையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம். எதைக் கருதி கூறப்பட்டிருந்தாலும் சரி பொய்யன் என்ற பழியிலிருந்து நாம் மீள முடியுமா?
பொய் அற்ப ஆயுள் கொண்டது. அப்படிப்பட்ட பொய்யை நாம் கட்டிக்காக்க முடியுமா என்ன? பொய் வெளிப்படும்போது அது விளைந்த தீமைக்கேற்ப நமக்கு அழிவைத் தந்துவிடும். எனவே நல்லதொரு சூழ்நிலையில் அப்பொய்யை நாமே நயமாக வெளிப்படுத்துவது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். அப்போது அது தீமையைத் தந்தால்கூட ஏற்க சித்தமாக இருக்க வேண்டும்.
பொய் சொல்வது என்பதே மிகவும் சிரமமானது. அப்படியெனில் உண்மையைச் சொல்வது மிகவும் சுலபமானதா? என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கும் சிந்தித்தே விடைகாண வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்வதே சுலபம் என்றால் நமக்குப் பொய் கூற வேண்டிய அவசியம் பெரும்பான்மையான சூழ்நிலைகளால் ஏற்படாதே என்பதுதான்.
ஆனால், நாம் பல நிலைகளில் உண்மையை மறைப்பதில் குறியாக இருக்கின்றோம். உள்ளத்தை உள்ளபடி கூறுகின்ற மனத்திண்மை பல நேரங்களில் நம்மிடம் இல்லாமல் போய் விடுகிறது.
இதற்கு என்ன காரணம்?
ஒன்று அதனால் நாம் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. நாம் அவமானத்துக்கு உள்ளாக நேரிட்டு விடக் கூடும். ஒரு தவறை நாம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த தவறை ஒப்புக் கொள்கிற மனநிலை நமக்கு வந்து விடுகிறதா என்ன? அதை உள்ளபடியே கூறிவிட்டால் மிகப்பெரிய கேவலத்தை அடைய வேண்டியதிருக்கும். அதுவரை ஊராரிடம் சேர்த்து வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காலவதியாகப் போய்விடும்.
நாம் எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருப்போமேயானால் எந்த சூழ்நிலையிலும் தவறான செயலை நமக்கும், பிறருக்கும் தீமை தருகின்றன செயலை செய்ய விழையவே மாட்டோம்.
இதிலிருந்து உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.
ஒரு பொய்யை காப்பாற்ற நாம் பல பொய்களை சொல்லிக் கொண்டு போக வேண்டியதாகி விடுகிறது. அதே போல உண்மைகளை தொடர்ந்து சொல்லச் சொல்ல உண்மையைச் சொல்வது என்பது இனிமையாகிப் போகிறது.
பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்

தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்

Post image for தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்

விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.
“செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
எந்த விருந்துகளில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் படுகிறார்களோ விருந்தளிக்கும் இடத்தில் மார்க்கம் அனுமதிக்காத ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவை இடம்பெற்றால் அத்தகைய விருந்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக விருந்து தயார் செய்து அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படங்களை கண்டதும் திரும்பிச் சென்றுவிட்டனர். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் அமரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ
மரண விருந்து
இறந்தவரின் பெயரால் மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் மற்றும் ஆண்டு நிறைவு நாட்களில் வழங்கப்படும் விருந்துகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே!
ஜஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஜஃபரின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா
இறந்தவரின் குடும்பத்தினரிடம் கூட்டமாகக் கூடுவதையும் அடக்கம் செய்யப்பட்டபின் விருந்து தயாரிப்பதையும் ஒப்பாரி வைப்பதன் ஒருவகையாக நாங்கள் கருதி வந்தோம்.
அறிவிப்பவர்: ஜஃபர் (ரலி) நூல்: அஹ்மத்
இறந்தவரின் குடும்பத்தினருக்காக மற்றவர்கள் தாம் விருந்தளிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினர் விருந்தளிக்கக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. விருந்து மகிழ்ச்சியுடன் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். குடும்பத்து உறுப்பினர் ஒருவரை இழந்து நிற்பவர்கள் விருந்தளிப்பதும், அவர்களிடம் விருந்து உண்பதும் மனிதாபிமானமில்லாத செயலாகும்.
குடும்பத்தின் பொறுப்பைச் சுமந்து வந்தவன் மரணித்து அதனால் எதிர்காலம் என்னவாகுமோ என்று கலங்கி நிற்கும் குடும்பத்தினர் நகை நட்டுகளை விற்று, அல்லது அடைமானத்திற்கு வைத்து அல்லது கடன்பெற்று இத்தகைய விருந்துகளை நடத்துகின்றனர். தாங்கமுடியாத சுமை என்று தெரிந்திருந்தும் ஊருக்கும், உலகுக்கும் பயந்து இந்தச் சுமையை தங்கள் மீது ஏற்றிக் கொள்கின்றனர். எனவே மனிதாபிமானமற்ற மரண விருந்துகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
கொடியேற்றம், கந்தூரி, நேர்ச்சை விருந்து
நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக என்று முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பிராணிகளை அறுக்கின்றனர். உண்ணுகின்றனர்.
அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள் யாரும் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்லை. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள்புரிவார் என்பதற்காகவும், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது. அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது, மாமிசமோ, இரத்தமோ, அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும், பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது. அவ்லியாவுக்காக அறுக்கும்போதும் இரத்தமோ, மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார். இவ்வாறு அறுப்பதும், உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளதை பின்வரும் வசனத்தின் மூலம் அறியலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி)யுள்ளான். யார் வலியச் சொல்லாமலும், வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக்குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன். அல்குர்ஆன் 2:173
தொழுவது, இறைவனுக்காக மட்டுமே அமையவேண்டும் என்பதுபோலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.
நான் அலி (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள்.
அப்போது நான் அமீருல் முஃமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி (ரலி) அவர்கள் “யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான். தம் பெற்றோரை சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். பித்அத் (மார்க்கத்தில் இல்லாத புதிய செயல்)களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான். பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான் (இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதுஃபைல் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தலங்கள் ஏதும் உள்ளனவா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்று கூறினார்கள். அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும், மனிதனுடைய கைவசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷாபித் இப்னு லஹ்ஹாக் (ரலி) நூல்கள்: அபூதாவூத்
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் அதை நிறைவேற்றக்கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என்று தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படும் போது தரப்படும் விருந்தை ஏற்காமலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகள் உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பது ஒரு நிந்தனை. அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக்கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூறமுடியும். யாருக்காக அறுத்தாய்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூறமுடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது. இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்துவிடுகின்றது.
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளில் திருமண விருந்து, அகீகா விருந்து, புதுமனை புகுவிழா விருந்து ஆகிய மூன்றைத் தவிர ஏனைய விருந்துகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அனாச்சாரமான விருந்துகள்
கத்னாவின் விருந்துக்காக உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர்களிடம் காரணம் கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் கத்னாவுக்குச் செல்லவும் மாட்டோம் அழைக்கப்படவும் மாட்டோம். என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூல்கள்: அஹ்மத், தப்ரானி
மார்க்கத்தில் சுன்னத் என வலியுறுத்தப்பட்ட கத்னா எனும் நிகழ்ச்சிக்கே விருந்து கிடையாது என்றால் பெண்கள் பருவமடைதல், காது மூக்கு குத்துதல் போன்றவற்றுக்கு விருந்தளிப்பதும், அதில் பங்கெடுப்பதும் கூடாது என்பதை விளங்கலாம். பெயர் சூட்டுதல் கத்னாச் செய்தல் போன்ற வைபவங்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளதால் இதனால் ஏழைகள் படும்பாட்டைச் சொல்ல வேண்டியதில்லை.
ஹஜ்ஜின் பெயரால் நடத்தப்படும் விருந்து
ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முன் அதை அனைவருக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் ஊரை அழைத்து விருந்து நடத்துவதும் நம் சமுதாத்தில் வழக்கத்தில் உள்ளது.
தொழுகை, நோன்பு, ஜகாத் போன்று இறைவனுக்காகச் செய்யப்படும் கடமைகளில் ஒன்று தான் ஹஜ். மற்ற அமல்களை நிறைவேற்றும்போது எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித் தான் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும்போதும் நடந்து கொள்ள வேண்டும்.
விருந்து கொடுக்க வேண்டிய நிகழ்ச்சிகளில் ஹஜ்ஜுக்குச் செல்வது ஹதீஸில் இடம் பெறவில்லை. திரும்பி வரும்போது தான் ஹாஜி என்பதை பிறர் அறியவும், தங்களின் பெருமையை பறைசாற்றிக் கொள்ளவும், பெருமை விரும்பினால் இது அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரால் தரப்படும் விருந்து அனாச்சாரமான, ஆடம்பரமான விருந்தாக இல்லாமல் இஸ்லாம் அனுமதித்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் தரப்படும் விருந்து, பொதுவாக அன்பை வளர்க்கும் அடிப்படையில் முஸ்லிம்கள் தரும் விருந்தில் கலந்து கொண்டால் அதில் தரப்படும் உணவைக் குறித்து துருவித்துருவி விசாரிக்க வேண்டியதில்லை. அது நம்மீது குற்றமில்லை.
உங்களில் ஒருவர் தனது முஸ்லிமான சகோதரர் வீட்டிற்குச் சென்றால் அவர் உண்ணக் கொடுப்பவைகளை உண்ணட்டும் (அதுபற்றி) துருவிக் கேட்கவேண்டாம். அவர் குடிக்கத்தந்ததை குடிக்கட்டும். (அதுபற்றியும்) கேட்கவேண்டாம் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: பைஹகீ
முஸ்லிம்களின் உணவை துருவித்துருவி ஆராயக்கூடாது என்பதை இதன் மூலம் விளங்கமுடிகிறது. இதற்கு மேல் அவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்திருப்பார்களா? இல்லையா? என்ற சந்தேகம் வந்தால் நாம் பிஸ்மில்லாஹ் கூறி அதை உண்ணலாம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சிலர் எங்களுக்கு மாமிசம் தருகின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. (அதை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள் என்று விடையளித்தார்கள். ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
பிற மத பண்டிகைகளின் போது தரப்படும் விருந்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்று மதத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகளை, விருந்தை ஏற்றுள்ளார்கள்.
உகைதிர் தூமா என்ற மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
ஜலா நாட்டு மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிற கோவேரிக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அவர்களுக்கு மேலாடை ஒன்றையும் போர்த்தினார்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) நூல்: புகாரி
யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்
இதுபோல் இன்னும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிமல்லாத மக்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புக்களைப் பெற்றுள்ளனர். பண்டிகைகளின் போது பெறக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லாததால் அதைப் பொதுவான அனுமதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. உண்பதிலும், பயன்படுத்துவதிலும் சில தடைகள் உள்ளன. அவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் நமக்கு வழங்கினால் என்ன நிலை? இதைப் பற்றி தனியாக நாம் ஆராய வேண்டும்.
பண்டிகைகளின் போது அவர்கள் தருகின்ற உணவுப் பொருட்களில் சில நமக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கக் கூடும். அதைப் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி மற்றும் இறைவனல்லாதவர்களுக்காக படைக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்களுக்கு விலக்கியுள்ளான். (அல்குர்ஆன் 2:173)
முதல் மூன்று உணவுகளையும் நம்முடைய நண்பர்களாக உள்ள மாற்று மதத்தவர்கள் நமக்குத் தரமாட்டார்கள். இவை நமக்குத் தடை செய்யப்பட்டதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
நான்காவதாக இறைவன் குறிப்பிடக்கூடிய உணவு வகைகள் நமக்கு விலக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாததால் பண்டிகைகளின் போது அவற்றை நமக்குத் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பண்டிகைகளின் போது உணவுப் பொருட்களில் சிலவற்றை ஏக இறைவனல்லாத மற்றவர்களுக்காக படையல் செய்வார்கள். ஆசாரமாக நடப்பவர்கள் படையல் செய்யப்பட்டதை வேறு மதத்தவர்களுக்குத் தரமாட்டார்கள். அவ்வாறு தரக்கூடாது என்று அவர்களின் மதநம்பிக்கையால் இருப்பதே இதற்குக் காரணம்.
ஆசாரமாக நடக்காதவர்கள் படைக்கப்பட்டவற்றை நமக்குத் தந்தால் நாம் அதை உண்ணக்கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனில் இது தெளிவாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனம் புண்படமாட்டார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் மாற்று மத நண்பருக்கு அசைவ உணவை கொடுக்க மாட்டோம். அப்படிக் கொடுக்கும்போது அவர் மறுத்தால் அதற்காக கவலைப்பட மாட்டோம். அவர்களின் நம்பிக்கையை மதித்து சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இதுபோன்றே அவர்களும் எடுத்துக் கொள்வார்கள். எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளாவிட்டால் நாம் நமது கொள்கையை அவர்களுக்கு விளக்கவில்லை என்பது தான் பொருள்.
இத்தனைக்குப் பிறகும் அவர்கள் மனம் கவலைப்படுவார்கள் என்று நினைத்து அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அதைப் பெற்று மற்றவர்களுக்கு வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம்.
பள்ளிவாசலின் முன்னால் பட்டாடை விற்கப்படுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும்போதும் அணிந்து கொள்ளலாமே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மறுமையில் பாக்கியம் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்!” என்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த ஆடையிலிருந்து ஒரு ஜதை வந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். “பட்டாடை குறித்து அதிருப்தி வெளியிட்ட நீங்கள் அதை எனக்குத் தருகிறீர்களே?” என்று கேட்டார்கள். “நீர் அணிந்து கொள்வதற்காக நான் அதைத் தரவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவில் இருந்த தனது முஸ்லிமல்லாத சகோதரருக்கு வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி
முஸ்லிம் ஆண்களுக்கு பட்டாடை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அந்த ஆடையை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பெண்களுக்குத்தான் அனுமதி உள்ளதே என்பதற்காக அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமல்லாத இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குள் வராத தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார்கள்.
ஆண்களுக்கு இது ஹராம் என்றால் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் தான் ஹராம். முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இந்தத் தடையைப் போடமுடியாது. அந்த அடிப்படையில் மாற்றுமத நண்பர் மனம் புண்படுவார் என்று எண்ணினால் முஸ்லிமல்லாத யாருக்கேனும் அதைக் கொடுக்கலாம். தவறில்லை. அப்படியானால் நமக்குத் தடை செய்யப்பட்ட மதுபானத்தை யாரேனும் நமக்குத் தந்தால் அதையும் வாங்கி அடுத்தவருக்குக் கொடுக்கலாமா? என்று கேட்கக்கூடாது. ஏனெனில் இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.
வேதம் வழங்கப்பட்டோரின் விருந்து
நமக்கு முன் வேதங்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவர்களின் உணவு, இறைச்சி உட்பட உண்ணுவதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இன்று முதல் உங்களுக்கு (உண்ண) பரிசுத்தமானவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேதத்தையுடைய (யூத, கிருத்து)வர்களின் உணவு உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவு அவர்களுக்கு ஆகுமானதாகும். (அல்குர்ஆன் 5:5)
இந்த வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் யூத கிறிஸ்தவர்களின் உணவு என்பது அறுக்கப்பட்ட மாமிச உணவுகள் என்றே விளக்கமளித்துள்ளனர். நூல்: புகாரி
மேலும் நபி (ஸல்) அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மாமிச உணவுகளை சாப்பிட்டுள்ளனர் என்பதற்கும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் நஞ்சூட்டி நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் விருந்தளித்து அதை அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதற்கு புகாரி உட்பட பல நூல்களில் சான்றுகள் உள்ளன.
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தோம். அப்போது ஒரு (யூத) மனிதர் ஒரு தோல் பையில் கொழுப்புகளை நிரப்பி வீசினார். அதை எடுப்பதற்காக நான் பாய்ந்து சென்றேன். (எடுத்துவிட்டு) திரும்பிப் பார்த்தபோது அங்கே நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். அதனால் வெட்கமுற்றேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவிக்கின்றார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிமில் இடம்பெற்ற இன்னொரு அறிவிப்பில் நான் திரும்பிப் பார்த்தபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகை செய்தவர்களாக நின்றனர் என்று காணப்படுகிறது.
யூதர்கள் அறுத்த மாமிசக் கொழுப்புகளை நபித்தோழர்கள் எடுத்ததைக் கண்ட நபியவர்கள் புன்னகை மூலம் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இந்தச் சான்றுகளிலிருந்து வேதமுடையவர்கள் அறுக்கும் மாமிச உணவுகள் நமக்கு ஹலால் என்பதையும், அதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது என்பதையும் சந்தேகமற அறியலாம்.
இந்த இடத்தில் அடிப்படையிலில்லாமல் சிலர் எழுப்பும் சந்தேகத்திற்கான விடையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதம் வழங்கப்பட்டவர்களின் உணவு ஹலால் என்பதை ஒப்புக் கொண்ட பிறகும் வேறொரு சந்தேகத்தை எழுப்புகின்றனர். வேதக்காரர்கள் தற்போது யாரும் கிடையாது. இன்று வேதக்காரர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை உருவாக்கிவிட்டனர். எனவே இவர்கள் எப்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களாக ஆகமுடியும்? இவர்களின் உணவு எப்படி ஹலால் ஆக முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
யூத, கிறிஸ்துவர்கள் தங்கள் வேதத்தை மாற்றிவிட்டனர். சொந்த சரக்குகளை அதில் நுழைத்துவிட்டனர். தங்கள் கொள்கையை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இந்த மாற்றம் இப்போது ஏற்பட்ட மாற்றமில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யூதர்கள் தங்கள் கொள்கைகள், வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை கடைப்பிடித்தனர்.
நபி (ஸல்) காலத்து யூத, கிறிஸ்துவர்களின் கொள்கைகள் எத்தகையனவாக இருந்தன என்பதை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முக்கடவுள் கொள்கை அன்றே அவர்களிடம் இருந்ததை 5:73, 4:171 ஆகிய வசனங்களிலும், ஏசுவை அவர்கள் அன்றே கடவுளாக கருதி வழிபட்டதை 5:72 வசனத்திலும், வேத வசனங்களை நபி (ஸல்) காலத்திலேயே மாற்றியமைத்தனர் என்பதை 4:46, 5:13, 41, 2:79, 5:15, 3:7, 2:159 ஆகிய வசனங்களிலும் காணலாம்.
இந்த வசனங்கள் யாவும் யூத, கிறிஸ்தவர்கள் இன்றுள்ளதைப் போல் தான் அன்றும் தவறான கொள்கையில் இருந்தனர் என்பதை தெளிவாக அறிவிக்கின்றன. அவர்களின் தவறான கொள்கையைத் தெரிந்தே அவர்களின் மாமிச உணவுகளை இறைவன் அனுமதித்துள்ளான். எனவே யூத, கிறிஸ்துவர்கள் தவறான கொள்கையுடையவர்கள் என்பது வேறு. அவர்களின் உணவு அனுமதிக்கப்பட்டது என்பது வேறு.
அல்லாஹ் அனுமதித்தாலும் நபியவர்கள் வேதமுடையோரின் மாமிச உணவுகளை உட்கொண்டிருப்பதாலும், உண்ண அனுமதித் திருப்பதாலும் அன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் இன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் ஒன்றாக இருப்பதாலும் இந்த அனுமதியை மறுக்க, எந்த முகாந்திரமும் இல்லை.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் உணவு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறைவன் தடைசெய்துள்ள பன்றி, இரத்தம் போன்றவற்றை அவர்கள் கொடுத்தாலும் சாப்பிடலாம் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இறைவன் தடுத்தவற்றை யார் கொடுத்தாலும் அதை உண்ணக்கூடாது.
முஸ்லிம்களின் உணவில் அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுக்கப்பட்டதாகவோ அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப் பட்டதாகவோ இருந்தால் உண்பது எப்படி தடுக்கப்பட்டுள்ளதோ! அதுபோலவே வேதம் கொடுக்கப்பட்டவரின் உணவிலும் அத்தகைய உணவை உண்ணக்கூடாது.  அல்லாஹ் மிக அறிந்தவன்

காது குத்துவது ஹராமா?

.

காது குத்துவது ஹராமா?

Post image for காது குத்துவது ஹராமா?

சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர்.
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். அல்குர்ஆன் 4 : 119
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : புகாரி 5931
அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன் என சைத்தான் கூறுவதும், பச்சைக் குத்தி கொள்ளும் பெண்களையும் பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் சபித்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பெண்கள் காதணிகள் அணிந்திருந்ததை கண்டும் அதைக் தடுக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்)அவர்கள் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு   முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களுக்கு   உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள்   காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். புஹாரி 1431
காது குத்துவது தடுக்கப்பட்டிருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் அதனை தடுத்திருப்பார்கள். நபித்தோழியர்கள்தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள்.  என்ற ஹதீஸிலிருந்து  காது குத்துவது கூடாது என்பதற்கு ஆதாரமில்லை. காது குத்துவது அல்லது குத்தாமல் இருப்பது தனி ஒருவரின் தேர்வுக்கே விட்டு விடப்பட்டுள்ளது.

Tuesday, October 2, 2012

ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்


ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

Post image for ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்

இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு(ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.
கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்காங்குள்ள மக்கள் நபிவழியைத் தெரிந்துகொள்ள இளைய நபித்தோழர்கள் பால் தேவைப்பட்டனர். காரணம், மூத்த நபித்தோழர்கள் இவ்வுலகைப் பிரிந்து கொண்டே இருந்தார்கள்.
நபிவழிகள் எதிர்கால மக்களுடைய பார்வைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய இளைய நபித்தோழர்கள் பல சிரமங்களை மேற்கொண்டும், பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்தும் முதிய நபித்தோழர்களிடமிருந்து நபிவழியைத் திரட்டினார்கள்.
நபித்தோழர்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்:
நபி அவர்களிடமிருந்து நான் கேட்காத ஹதீஸ் ஷாம் நாட்டில் இருக்கும் அப்துல்லாஹ் இப்னு அனீஸ் அல்அன்ஸாரி என்ற நபித்தோழரிடம் இருப்பதாக அறிந்தேன். எனவே அந்த ஹதீஸைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக சுமார் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்து ஷாம் நாட்டிற்குச் சென்று அந்த ஹதீஸை அறிந்து வந்தேன் என்று கூறினார்கள். நூல்: புகாரி இமாமிம் ‘அல்அதபுல் மஃப்ரத்’
எகிப்தில் இருந்த உக்பத் இப்னு ஆமிர் அல்ஜுஹனி என்ற நபித்தோழரிடம் நபி அவர்களுடைய ஒரு ஹதீஸ் இருப்பதாக அறிந்த அபூ அய்யுபு அல் அன்ஸாரி என்ற நபித்தோழர் ஹதீஸை அறிய வேண்டுமென்பதற்காக பல மாதங்கள் பிரயாணம் செய்து அந்த ஹதீஸைப் பெற்று வந்ததாகக் கூறினார்கள். நூல்: ஜாமிவு பயானில் இல்ம்
இவ்வாறாக நபிவழி அறிவிப்புகள் நாலா பாகங்களிலும் பரவ ஆரம்பித்தது. காலம் செல்லச் செல்ல எஞ்சி இருந்த நபித்தோழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தாபியீன்கள் அவர்களைத் தேடிச் சென்று அவர்களிடத்திலுள்ள ஹதீஸ்களைச் சேகரித்தார்கள் ஒரு நபித்தோழர் ஏதேனும் ஒரு நகருக்குச் சென்றால், அவர்களைச் சூழ அந்நகர வாசிகள் ஒன்று திரண்டு மிக்க கண்ணியத்தோடும், மரியாதையோடும் நபிஅவர்களுடைய அன்புத் தோழர் வந்திருக்கிறார் என்ற ஆவலோடு அவர் வாயிலாக நபிவழிகளைக் காது தாழ்த்திக் கேட்டுத் தெரியலானார்கள்.
சில நபித்தோழர்கள் அதிகமான நபிவழிகளை அறிவித்திருக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) என்பவர் இவர்களில் ஒருவாராவர். காரணம், அவர்களுக்கு நபி அவர்களுடன் ஏற்பட்ட தோழமை பழமையானதாகும். அனஸ் இப்னு மாலிக்(ரழி) அதிகமான ஹதீஸ்ளை அறிவிக்கக் காரணம், இல்லற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் அறியும் வாய்ப்புப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி) போன்ற நபித்தோழர்கள் நபிவழியைத் தெரிவதிலும், அதைப் பிறருக்கு அறிவிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாக இருந்தமையால் அதிகமான நபிவழிகளை அறிவிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்கள்.
நபித்தோழர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை எந்த சந்தேகமும் இல்லாமல் மக்கள் அப்படியே நம்பி ஏற்று வந்தனர். நபித்தோழர்களில் சிலர் வேறு சிலரிடமிருந்து, நபிவழியைப் பெற்று கொள்வார்கள். அவர்கள் எவ்வித பொய்யையும் நுழைப்பதில்லை. முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது தான் நபிவழி அறிவிப்புகளில் பொய்கள் நுழைய ஆரம்பித்தன.
நபிவழியில் இடைச்செருகள்கள்ஹிஜ்ரி 40ம் ஆண்டுவரை நபிவழி அறிவிப்புகளில் எந்த இடைச்செருகல்களும் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40ம் ஆண்டுவரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபிவழியைப் பயன்படுத்தவில்லை. ஹிஜ்ரி 40ம் ஆண்டு அலி(ரழி) அவர்களுக்கும், முஆவிய(ரழி) அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போராக மாறி அதன் மூலம் பல உயிர்கள் கொல்லப்பட்டு, இரத்த ஆறு ஓட்டப்பட்டது. ஆரம்பத்தில் அலி(ரழி) அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரிஜியாக்கள் என்போர் ஒரே நேரத்தில் அலி(ரழி) அவர்களையும், முஆவிய(ரழி) அவர்களையும் எதிர்த்து சதி செய்தார்கள். அலி(ரழி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அஹலுபைத்தைச் சார்ந்தவர்களில் (நபி குடும்பத்தாரில்) சிலர் தங்களுக்கும் கிலாஃபத்தில் பங்கு உண்டு என வாதாடினார்கள். இதனால் உமையாக்கள் ஆட்சியில் பிளவு ஏற்பட்டது.
இது போன்ற அரசியல் கருத்து வேறுபாடுகள் முஸ்லிம்களை பல பிரிவுகளாக ஆக்குவதற்குக் காரணமாக அமைந்தன. அதோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பிரிவினைகள் மார்க்கத்திலும் தன் பலத்தைக்காட்ட ஆரம்பித்தன. இதனால் இஸ்லாத்தில் மார்க்க அடிப்படையிலான பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் பிரிவின் கொள்கையை ஆதரிப்பதற்காக குர்ஆன், ஹதீஸை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஆனால் குர்ஆன், ஹதீஸ்கள் இவ்விரண்டும் ஒவ்வொரு பிரிவின் கொள்கைக்கும் வளைந்து கொடுப்பது அல்ல என்பதே உண்மை. குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டும் ஏதாவது ஒன்றை ஆதரிக்குமேயல்லாமல், எல்லாப்பிரிவின் கொள்கைகளையும் ஒரு போதும் ஆதரிப்பதில்லை. இதனால் சில பிரிவைச் சார்ந்தவர்கள் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கியதோ அதைவிட்டு மாற்றுப் பொருள்கள் கொடுத்து விளக்கலானார்கள். நபிமொழி வாசங்கங்களுக்கு பொருத்தமற்ற வியாக்கியானங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். குர்ஆன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் மாறாது பாதுகாக்கப் பட்டிருந்ததின் காரணத்தால் அதில் இடைச்செருகல்களை நுழைக்க இயலாமல் போனபோது, தங்கள் வாதத்தை நிலைநாட்டுவதற்காக நபி அவர்கள் சொல்லாதவற்றைச் சொன்னதாகப் புனைந்து கூற ஆரம்பித்தார்கள்.
உண்மையான நபிமொழியோடு தங்கள் சுய கருத்துக்களையும் இணைத்துக் கூறினார்கள். இதனால் சரியான நபிவழியோடு பொய்யானவையும் கலக்க ஆரம்பித்தன. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் என்பதை நபி அவர்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.
”என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் செல்லுமிடம் நரகம் தான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நபி அவர்கள் தன் தோழர்களை எச்சரித்து, என்னைப் பற்றிய அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதில் மிகக் கவனமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி விட்டார்கள். நபிவழிகள் தொகுப்பு வடிவில் எழுதிப் பாதுகாக்கப்படாமலிருந்த காரணத்தினால் நபிவழியில் இடைச்செருகல் செய்வது மிக எளிதாக இருந்தது. பொய்யாகப் புனையப்பட்ட ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு பிரிவினரும் நுழைக்க ஆரம்பித்தார்கள். இது ஹிஜ்ரி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் அதிகம் வளர ஆரம்பித்தது.
தனி மனிதர் சிறப்பு.
தனி மனிதர்களின் சிறப்புப் பற்றித்தான் முதல் முதலாக ஹதீஸ்களைப் புனைய ஆரம்பித்தார்கள். ஒவ்வாரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றிப் புகழ்ந்து ஹதீஸ்களை தயாரித்து அவற்றை நபி அவர்கள் கூறியதாகச் சொல்லலானார்கள். இதில் முதலில் ஈடுபட்டவர்கள் ஷியாக்கள். பல பிரிவுடைய இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தலைவரைப் பற்றி புகழ்ந்து பொய்யாக ஹதீஸ்களைச் சொல்வதைக் கண்ட சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களில் போதிய ஞானமற்றவர்கள் ஷியாக்களை எதிர்ப்பதற்காக இவர்களும் ஸஹாபாக்களில் சிலரைப் புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்கினார்கள்.
ஷியாக்கள் பொய்யான ஹதீஸ்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று அறிந்ததினால்தான் இமாம் அபூ ஹனீபா (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), மாலிக் (ரஹ்) ஷுரைக் பின் அப்துல்லாஹ் (ரஹ்), யஸீது பின் ஹாரூன் (ரஹ்) போன்ற இமாம்கள் ஷியாக்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை.
இடைச்செருகல்களின் ஆரம்பம்
இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுடைய ஆட்சி காலத்தின் பிற்பகுதியில் முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பிளவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. உதுமான் (ரழி) அவர்களைப் பழிவாங்க வேண்டுமெனத் திட்டம் போட்டு, அதனால் சமூகத்தில் ஒரு சாரார் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர், இறுதியாக உதுமான் (ரழி) அவர்களின் உயிரையே சூறையாடினார்கள். இந்நிகழ்ச்சி முஸ்லிம்களுக்கிடையில் பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது என்றாலும் இதற்காக நபிவழியை ஆதாரமாகப் பயன்படுத்த எவரும் முன் வரவில்லை. ஒரு சில பொய்யான ஹதீஸ்கள் மட்டுமே பரப்பப்பட்டிருந்தன.
‘அப்துர்ரஹ்மான் பின் அத்தீஸ்’ என்பவர்தான் முதன் முதலாக பொய்யான அறிவிப்பைப் புகுத்தியவராவார். இவர் உதுமான் (ரழி) அவர்களின் கொலையிலும் பங்கெடுத்துள்ளார். இவர் ஒருமுறை மிம்பரில் ஏறி ”அறிந்து கொள்ளுங்கள் உபைதா என்பவர் தன் வாகனத்தை விட்டும் வழி தவறியதை விட உதுமான் மிகப்பெரிய வழி தவறியாவார். என நபி அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார். இதைச் செவியுற்ற உதுமான் (ரழி) அவர்கள் ”அல்லாஹவின் மீது ஆணையாக இப்னு அத்தீஸ் பொய் சொல்லி விட்டார்” என்று கூறினார்கள். நூல்:தாரிகுத்தபரி
இதன் மூலம் இப்னு அத்தீஸ் என்பவர்தான் உதுமான் (ரழி) அவர்கள் காலத்தில் முதன் முதலாக பொய்யான ஹதீஸைப் புனைந்து கூறியவர் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஹிஜ்ரி 40ம் ஆண்டிற்குப்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னரே ஹதீஸில் இடச்செருகல்கள் அதிகமாகத் தொடங்கியது. உமய்யாக்கள் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சிக்குச் சாதகமாக ஹதீஸ்களை உருவாக்கிக் கூறினார்கள்.
‘இராக்’ நாடும், இடைச்செருகல்களும்
பொய்யான ஹதீஸ்களை உற்பத்தி செய்வதில் இராக் நாடு பிரசித்திப் பெற்றிருந்தது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய பட்டணமான கூஃபா இந்த விஷயத்தில் முன்னணியில் இருந்தது. கூஃபாவில் உமையாக்களின் ஆட்சியை எதிர்த்து வந்த ஷியாக்கள், உமையாக்களை இழிவுபடுத்தி பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர்.
‘முக்தாருக் தகபி’ என்பவர் அன்ஸாரி நபித்தோழர் ஒருவரிடத்தில் ”நான்தான் நபி அவர்களுக்குப் பின்னால் கலீபாவாக வரவேண்டியவன்” என்பது பற்றி ஒரு ஹதீஸை உருவாக்கிச் சொல்லுமாறும் அதற்காக பத்தாயிரம் திர்ஹம்களும், ஒரு வீடும், ஒரு வாகனமும், ஒரு வேலைக்காரனும் தருவதாகக் கூறினார். ஆனால் அன்ஸாரி நபித்தோழர் அதை மறுத்து விட்டார்கள். நூல்: மீசானுல் இஃதிலால்
இராக் பொய்யான ஹதீஸ்களை அறிவிப்பதில் முதல் இடம் வகுத்த காரணத்தினால் இராக் அறிஞர்களுக்கு ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் செல்வாக்குக் குறைந்தது. எனவே இராக்கை சார்ந்தவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை தீர ஆராய்ந்த பின்னரே அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ‘இராக்வாசிகளே’ ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் அங்கு அதிகமான நபித்தோழர்கள் சென்றார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையே அறிவித்தார்கள். ஆனால் உங்களிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்களே வந்தார்கள், ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங்களையும் எங்களுக்கு அறிவித்தீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நூல்: தாரீகுல்கபீர்
இராக்கிலிருந்து ஒரு கூட்டம் மக்காவிலிருந்த அப்துல்லாஹ பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களிடம் வந்து ”எங்களுக்கு ஹதீஸ்களைச் சொல்லுங்கள்” என்று சொன்னர்கள். அதற்கு ”இராக்கில் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் பொய்யான ஹதீஸ்களைச் சொல்லிவிட்டு கேலி செய்வார்கள்” என்று கூறினார்கள். நூல்: தபகாத் இப்னு ஸஅத்
மார்க்கத் தீர்ப்புகளுக்கு இராக்கிலிருந்து கொடுக்கப்படும் தீர்ப்புகளை அறிஞர்களும், நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஷாம் நாட்டிலும், மதீனாவிலும் உள்ள மார்க்க அறிஞர்களின் தீர்ப்பையே ஏற்றுக் கொள்வார்கள். இராக்கிலிருந்து உருவாகும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மற்ற நாட்டு அறிஞர்களை இமாம் மாலிக் (ரஹ்) எச்சரித்துள்ளார்கள்.
அப்துர்ரஹ்மான் பின் மஹதி என்பவர் ஒருமுறை இமாம் மாலிக் அவர்களிடம் ”மதீனாவில் நாற்பது நாட்களாகக் கேட்ட ஹதீஸ்களை ஒரே நாளில் இராக்கிலிருந்து கேட்கிறேன், இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ”உங்களிடம் உள்ளது போன்ற நாணய உற்பத்தி இயந்திரம் எங்களிடம் எங்கே இருக்கிறது? இரவிலே அச்சடிக்கிறீர்கள், பகலிலே செலவு செய்கிறீர்கள்” என இமாம் மாலிக் அவர்கள் கூறி இராக்கில் நடக்கும் பொய்யான ஹதீஸ் எவ்வளவு வேகமாகப் பரவியது என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வைத்தார்கள்.
பொய்யான ஹதீஸ்கள் இராக் நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், அவைகளை தரம் பிரித்தறிகின்ற பல மார்க்க மேதைகள் அங்கு இருந்தனர். சுமார் முன்னுறுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இராக்கின் முக்கிய நகரமான கூஃபாவிற்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் எழுபது பேர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களாவர். இவர்களில் அப்துல்லாஹ பின் மஸ்வூத் (ரழி) அவர்களும் ஒருவராவார்.
கதாதா, யஹயா பின் அபீகதீர், அபூ இஸ்ஹாக், அஃமஷ், அத்தவ்ரிய்யு, இப்னு உயைனா போன்ற பெரும் மேதைகள் கூஃபாவிலும், பஸராவிலும் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே இடைச்செருகல் செய்யப்பட்ட ஹதீஸ்களை மிக எளிதாகக் கண்டுபிடித்து பொது மக்களுக்கு உணர்த்துவதில் இவர்கள் பெரும் சேவை செய்துள்ளனர். இவர்களில் பலர் சரியான ஹதீஸ்களை அறிவிக்கும் நேர்மையாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற ஹதீஸ்களை இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) தங்கள் ஹதீஸ் தொகுப்புகளில் இடம் பெறச் செய்துள்ளனர். இவர்களில் அப்துர்ரஸாக் அஸ்ஸன் ஆனி, ஜரீர் இப்னு அப்துல்ஹமீத், இஸ்மாயில் இப்னு அஃப்பான், அய்யுப்னுல் ஜஅது போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
கமாலுத்தீன் மதனி

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!



Post image for அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.
“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 47:24 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ 78:6, 7
“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். 21:31
நாம் வாழுகின்ற இந்த பூமியின் மேற்பகுதி கடினமாக அமைந்துள்ளது. இதில்தான் உயிரினங்கள் வாழ முடியும். ஆனால் பூமியில் ஆழத்தின் உள்ளே உள்ள கீழடுக்குகளோ, மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், திரவ நிலையிலும் உள்ளது. எனவேதான் பூமியின் கீழ் பகுதியில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆதலால் தான் அல்லாஹ் பூமியை உருண்டை வடிவில் படைத்த போதிலும், உயிரினங்கள் வாழும் பகுதியை குறிப்பிடும் வகையில்தான் இப் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? என்று வினா எழுப்பியுள்ளான்.
பூமியில் வாழும் உயிரினங்கள் ஆடி சாயாமலிருக்கவே மலைகளை உருவாக்கி அவற்றின் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவி நிற்பதாகவும் அல்குர்ஆன் கூறியதை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஃபிராங் பிரஸ்லின் என்பவர் தனது நூலில் அல்குர் ஆனின் கூற்றை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.
“இந்த பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக மலைகளை உண்டாக்கிய வனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு நாயன் இருக்கின்றானா? இல்லை எனினும் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
“கடல்களை பற்றி அல்லாஹ் கூறுகையில் இர ண்டு கடல்கள் அவற்றிற்கு இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது’ என்றும் கூறுகிறான். 97:19,20
“மேலும், ஒன்று மிக்க இனிமையும், சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும், கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பை மீற முடியாத ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கின்றான். 25:53
அல்குர்ஆனின் கடலியல் வசனங்களை ஆராய்ச்சி செய்த கடலியல் நிபுணர் டாக்டர் ஜான்கூஸ்தோ எனும் அறிஞர் அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அது எந்தப் பகுதியில் உள்ள கடல் என்ற விபரங்களைச் சேகரித்து எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா வின் கொலரடோ பல்கலை கழகத்தில் மண்ணியல் துறை பேராசிரியராக உள்ள டாக்டர் வில்லியம் ஹை என்ற அறிஞரும் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி இந்த விந்தைமிகு நிகழ்வு மத்திய தரைக் கடலுக்கும் ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பு உட்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த கடல் நீரில் ஒரு பகுதி சுவையாகவும் ஒரு பகுதி உப்பு நீராகவும் இருக்கும். ஆனால் கடல் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆனால் அல்லாஹ் அதனை சாய்வான அமைப்பில் கண் புலன்களுக்கு புலப்படாத வகையில் தடுப்புக் களை ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்கு செல்கிறது என்பதனை தெளிவாக விளக்கி உள்ளார். ஆதாரம்: Principles of Oceonography Davis P.92
கடல்களின் தன்மைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் குர்ஆன் கூறும் வசனப்படி “ஆழ்கடல் பல இருள்களை போன்றதாகும்’ அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றொரு அலை. அதற்கு மேல் மேகம். இப்படி பல இருள்கள். சில, சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. “அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது’ என்று அல்குர்ஆனின் அந்நூர் 24:40ல் கடலின் தன்மைகளை உவமையுடன் விளக்கி கூறியதை நவீன கருவிகளின் துணை கொண்டு கடல் விஞ்ஞானி பேராசிரியர் துர்காராவ் என்பவர் ஆராய்ந்து கூறுகிறார். இவர் ஜித்தாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றியவர்.
எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல், 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள் மூழ்குவது இயலாத காரியம். ஆழ்கடல்களில் இருள் திரைகள் அடுக்கடுக்காய் படிந்து இருக்கிறது. ஆனால் உள்ளே ஓர் ஒளிக்கதிர் ஏழு வர்ணங்களை கொண்டுள்ளது. 30 முதல் 50 மீட்டர் வரை ஆரஞ்சு நிறமும், 50 முதல் 100 மீட்டர் வரை மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் பச்சை நிறமும், 200 மீட்ட ருக்கு அப்பால் நீல நிறம், கருநீலம், ஊதா நிறங்களாக நீருக்குள் ஊடுருவிச் செல்கின்றன. அது முதல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. Ocean Eider and Pernetta P. 27
“ஆழ்கடலில் ஏற்படும் பல இருள்களைப் போன்றதாகும்’ என்ற குர்ஆனின் வசனத்தில் கூறப்பட்டவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார் பேராசிரியர் துர்காராவ். கடல்களை நாம் பல்வேறு பிரிவுகளாக பிரித்து பசுபிக்கடல் என்றும், அரபிக்கடல் என் றும் மத்திய தரைக்கடல் என்றும் அட்லாண்டிக் கடல் என்றும் பாக்ஜலசந்தி என்றும் மன்னார் வளைகுடா என்றும் பெயர் கூறி அழைக்கின்றோம்.
இந்தக் கடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் விதவிதமான அமைப்புகளும், அபூர்வங்களும் நிறைந்து காணப்படுகின்றன. வல்ல இறைவன் உலகத்தை படைத்து 3/4 பகுதி கடலின் பரப்பளவை நீட்டியும் 1/4 பகுதி மட்டுமே நிலப்பரப்பையும், அதில் மலைகளையும் ஏற்படுத்தி உள்ளான். நம் தமிழ்நாட்டில் பாக்ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் உள்ளது. இந்த மன்னார் வளை குடாவில் ஓர் அற்புதத்தை இறைவன் கடலுக்குள் ஏற்படுத்தி உள்ளான்.
கடலுக்குள் மிக அலங்காரமாகவும், பிரமிப்புவூட்டும் விதமாகவும் அழகிய வடிவங்களுடன் வித விதமான தோற்றத்தில் கோரல் எனும் பாற்கல்கள் (Corel Reef) வளர்ந்து இருக்கின்றன. இந்தக் கோரலை தற்போது பவளப்பாறைகள் என்று மிகக் கெளரவப்படுத்தி அழைக்கின்றனர். இதில் வளர்ந்து நிற்கும் பாசிகள் மீன்களுக்கு உணவாகவும் அமைந்துள்ளது. அதனை உட் கொள்ள வரும் மீன்கள் அந்த நிழல்களில் இருப்பிடத்தில் ஓய்வு பெறும் நிலையையும் அடைகிறது. மீன் இனத்தை பெருக்கும் நிலைகள் உருவாகிறது.
இவற்றையயல்லாம் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் வளரும் பாசியினை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த பாசியில் தாது உப்புகள், விட்டமின்கள், அயோடின், அமீனோ அமிலங்கள் புரோத சத்து, கொழுப்பு சத்து மற்றும் ஹார்போ ஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்றும் கண்டு பிடித்தார்கள்.
உலகம் வெப்பமாகக் கூடிய காலமாக மாறி வருவதாலும் விளை நிலங்கள் விலைபோகக் கூடிய நிலையில் இருப்பதாலும் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் உணவு பஞ்சத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் மனிதனை படைத்த அல்லாஹ் அல்குர்ஆனிலே கல்லுக்குள் இருக்கும் உயிரினங்களுக்கும் உணவளிக்கிறோம் என்று சொன்ன வசனத்திற்கு ஒப்ப உலகம் முடியும் வரை வரக்கூடிய மக்களுக்கும் உணவளிப்பான்.
கல்லுக்குள் உள்ள பாசியை மீன்கள் உணவாக உட்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள வசனத்தின்படி இந்த வகை பாசிகளை ஆராய்ந்த மண்டபம் முகாம் மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) மண்டபம் மத்திய மண் பரி சோதனை நிலையம், மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Central All Research Centre) போன்றவை கடல் பாசிகளை வரும் காலத்தில் மனிதன் உணவாக உட்கொள்ளக்கூடிய காலம் வரும் என்று கூறி தற்போது இந்த கடல் பாசியை ஜெல்லி, ஜாம், சூப் பவுடர், ஊறுகாய், பிரியாணி போன்ற உணவு வகைகள் வெளி நாடுகளில் தயாரிக்கப்பட்டு உணவாக உட்கொண்டு வருகின்றனர். மருந்துக்கும், வேளாண்மை உரம் இவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இது மேலும் விரிவாகி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்க கூடும் என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்துக் கூறியுள்ளனர். எதிர் காலத்தில் உணவு பற்றாக் குறைக்கு ஓர் முற்றுப் புள்ளியாக திகழும் என்றும் நம்புகின்றனர். ஆதலால்தான் தற்போது இந்த பாசிகளை வளர்ப்பதற்கு தமிழக அரசு மீன்துறை மூலமாக பயிற்சி அளித்து கடலில் பாசி வளர்க்க ஊக்குவித்துள்ளனர். தற்போது நமது கிழக்கு கடல் பகுதிகளை தேர்வு செய்து 500 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாசி வளர்ப்பினால் பிராண வாயுவும் பவளப் பாறையின் நுண்ணுயிர்களும், கடல் வாழ் உயிரினங்கள் வளர்ச்சியாகி சுற்றுச்சூழல் வெப்பம் தணிந்து குறித்த காலங்களில் மழை பொழியவும் செய்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெளிவு படுத்துகின்றனர். கல்லுக்குள் உள்ளவைகளுக்கும் உணவளிப்பதை கூறிய வல்ல இறைவன் அந்த கல்லுக்குள் வளரும் பாசிகள் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய காலமும், வரும் காலமும், பயனளிக்கிறது என்று உணர்ந்த விஞ்ஞானிகள் குர்ஆனின் கடலியல் வசனத்தை ஆராய்ந்து பார்த்து வியந்து போய் உள்ளனர்.
அல்லாஹ்வின் நெறிநூலில் புதைந்து கிடக்கும் இந்த சமுத்திரவியல் உலக மக்களுக்கு வழி காட்டும் நூலாகவும், வாழ்வளிக்கும் ஒளிச் சுடராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறதிலிருந்து அறிந்து கொண்டோம்.
மண்டபம் M. அப்துல் காதிர்